tamilnadu

img

தாகத்தால் தவிக்கும் மென்பொருள் நிறுவனங்கள்

இது தண்ணீர் இன்றித் தவிக்கும் சென்னை மென்பொருள் நிறுவ னங்களின் கதை. ஏற்கெனவே இதில் பல நிறுவனங்கள் “உங்களின் சாதனங்களை நீங்களே கொண்டு வாருங்கள்” (BYOD- BRING YOUR OWN DEVICES) என்கிற கொள்கையைக் கொண்டவைதான். அதாவது உங்களின் மடிக்கணினியோடு வேலைக்கு வாங்க என்பது போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருபவை. சென்னை மாநகரின் தண்ணீர் பற்றாக்குறை இக்கொள்கையின் விரிவாக்கத் திற்கு வழி வகுத்துள்ளது. இது பழைய மகா பலிபுரம் சாலை (O.M.R) நிறுவனங்களிலுள்ள நிலைமை குறித்த படப்பிடிப்பாகும்.

எங்கே போவது தண்ணீருக்கு...

சோளிங்க நல்லூரில் உள்ள பெரிய நிறுவனமொன்றின் ஊழியர் பகிர்வு இது. கடந்த வாரம் வரை நிறுவன வளாகத்திற்குள் உணவு எடுத்துக் கொள்ளும் ஊழியர்களுக்கு சாப்பாட்டு தட்டுகள் நிர்வாகத்தாலேயே தரப்பட்டு வந்தன. இப்போது தட்டுகள் தருவதை நிறுத்தி விட்டார்களாம். தண்ணீர் அருந்தும் இடங்களில் இருந்த “டிஸ்போ சபிள்” கப்புகளுக்கு பதிலாக ஒரே ஒரு மறு பயன்பாட்டிற்குரிய தம்ளர் மட்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அங்கு காட்சியளிக்கிறதாம். ஓ.எம்.ஆர் பகுதியில் நீண்டு காட்சிய ளிக்கும் தகவல் தொழில் நுட்ப தொழிற் சங்கிலி கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இப்பகுதியில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். அப்பகுதிகளில் வாழும் மக்கள் எண்ணிக்கை இதில் அடங்காது. தினந் தோறும் அச்சாலையில் மக்களின் எதிர்ப்பு முழக்கங்கள் எங்காவது கேட்ட வண்ணம் உள்ளன. ஓ.எம்.ஆர் பகுதியில் குழாய் இணைப்பு கள் தரப்படவில்லை. பெரும் பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களும், நிறுவனங்க ளும் தண்ணீர் மறுசுழற்சி இயந்திரங்களை நிறுவியுள்ளதோடு, தனியார் தண்ணீர் வண்டிகளையும் நம்பியே உள்ளன. சிறிய நிறுவனங்கள் இதுபோன்ற செலவுகளைத் தாங்க முடியுமா? அந்நிறுவனங்கள் அரசு சென்னை மெட்ரோ நிறுவனத்தையே சார்ந்தி ருக்க வேண்டியுள்ளது. அல்லது தனியார் தண்ணீர் வண்டிகளையே எதிர்பார்க்க வேண்டும். தனியார்கள் வாயிலாக தண்ணீர் கிடைப்பது என்பது மிகப்பெரிய செல வினத்தை உடையதாகும்.

டாட்டா குளம்...
டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், காக்னி சன்ட் டெக்னாலஜி போன்ற பெரிய நிறுவனங்கள் புதுமையான முறைகளைக் கையாள்கிறார்கள். சிறுசேரி ஐ.டி. பூங்காவிலுள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்தி ரங்களை நிறுவியுள்ளது. டாட்டா கன்சல்டன்சி நிறுவனமோ தங்கள் வளாகத்திற்குள் ஓர் குளத்தையே வைத்துள்ளது. அது நீர்த் தேக்கமாக பயன்படுகிறது. டி.சி.எஸ் அதிகாரி கூறுகையில், “எங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை” என்கிறார். காக்னிசன்ட் தண்ணீர் நுகர்வைக் குறைக்கும் சில நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. வாஷ்பேசின் குழாய்களின் நுனியில் சிறப்பு ஃபில்டர்களைக் சொருகி யுள்ளது. மடமடவென்று தண்ணீர் கொட்டாது. தண்ணீர் சொட்டு சொட்டாக வெளிவரும். இதனால் எவ்வளவு தண்ணீர் மிச்சமாகிறது என்று அந்த கம்பெனியின் அலுவலரிடம் கேட்டால் 80 சதவீதம் என்கிறார். அந்த நிறுவனம் பசுமைத் தட்டுக ளுக்கு மாறியுள்ளதாம். எல்லா காபி ஸ்டால்களிலும் இந்த தட்டுகள் தான் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. உடற்பயிற்சிக் கூடங்களில் தண்ணீர் பயன்பாட்டிற்கான ஷவர்கள் எடுக்கப்பட்டு விட்டன. இத னால் தண்ணீர் பயன்பாடு முறைப்படுத் தப்பட்டுள்ளது.காக்னிசன்ட் ஓர் ஆன்லைன் மேடை ஒன்றை தண்ணீர் பயன்பாடு பற்றி விவாதிப்பதற்காக உருவாக்கியுள்ளது. அதில் ஊழியர்கள் தங்கள் ஆலோசனைகளை தரலாம்.

புதிய சிந்தனைகள்

சிறுசேரி தொழில்நுட்ப பூங்காவிலுள்ள ஃபைனான்சியர் சாப்ட்வேர் அண்டும் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜ் மைலாண்ட்லா “சிப்காட் சேவை மையத்திலிருந்தும், தனியார் வண்டிகளிலி ருந்தும் தண்ணீர் பெறுகிறோம். மறுசுழற்சி  தண்ணீரை டாய்லெட்டுகளுக்கு பயன்படுத்து கிறோம்” என்கிறார். இந்து பிசினஸ் லைனின் ரவுண்ட் அப்பில் எந்த நிறுவனமும் ஊழியர்களை “வீட்டிலி ருந்தே பணியாற்ற” (work from Home) பணிக்கவில்லை எனத் தெரிகிறது (ஆனால் பிற ஊடகங்கள் நிறுவனங்கள் கதவுகளை மூடி ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற பணித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன - மொ.பெ)

சென்னையின் மொத்த ஒருநாள் தண்ணீர் தேவை 83 கோடி லிட்டர்கள் ஆகும். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் 52.5 கோடி லிட்டர்களையே தருகிற நிலையில் உள்ளது. நிலத்தடி நீர், ஏரிகள், வடிகால்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் எல்லாம் சேர்த்தாலும இவ்வளவுதான் கிடைக்கிறது. ஓ.எம்.ஆர் பகுதி அமைந்துள்ள தென் சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்தும், நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தி லுமே தண்ணீர் கிடைத்து வருகிறது. சென்னை சந்திக்கிற கடும் தண்ணீர் பிரச்சனை நிறுவனங்கள் மத்தியில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. நிறுவனங்க ளுக்கான கூட்டமைப்பின் அலுவலர் ஒருவர் இந்து பிசினஸ் லைன் செய்திக் கட்டுரையா ளரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, “எல்லா கம்பெனிகளும் ஓ.எம்.ஆர் போன்றே ஒரே அமைவிடத்தில் குவிவ தால் தண்ணீர் பிரச்சனை மிகக் கடுமையாக  உருவெடுக்கிறது” என்கிறார். அவரே தொடர்கிறார்: “நிறுவனங்கள் தங்களின் சிறகுகளை மாநிலம் முழுவதற்குமாக விரிக்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற நெருக்கடிகளை  தவிர்க்க முடியும்” சமச்சீரான வளர்ச்சிக்கே தொழில் வளர்ச்சி பரவல் அவசியம். தெற்கு, கிழக்கு மாவட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழி யின்றித் தவிக்கின்றன. ஊரெல்லாம் பரவ வேண்டிய தொழில் வளர்ச்சி சில சாலைக ளுக்குள் அடக்கப்பட்டால் என்ன நடக்கும்? சென்னை தவிக்கிறது தாகத்தால்... நன்றி: இந்து பிசினஸ் லைன் 15.06.2019)