tamilnadu

img

வெளியில் வந்த பூனைக் குட்டி!

கர்நாடக காவல் துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை திடீரென்று ஒருநாள் (மே 28) அந்தப் பதவியை ராஜினாமா செய்து காக்கிச் சட்டையை உதறித் தள்ளுகிறார்.அரசுப் பணியிலிருந்து விலகிய அண்ணா
மலை, அரசியல் கட்சியில் இணைய போகிறார் என்று கர்நாடக அதிகாரிகளால் பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால், இல்லை என்று அப்போதைக்கு சமாளிக்கும் அந்த அண்ணாமலை, சமுதாயப் பணி செய்யப் போகிறேன் என்கிறார்.

பிறகு, அரசியலை தூய்மைப்படுத்தும் அமைப்பு என்ற போர்வையில் "வீ தி லீடர்" என்ற அறக்கட்டளையை துவக்குகிறார். இது அரசியல் சார்பற்றது என்றும் 'சாயம்' பூசுகிறார்.சொந்த ஊரில் இயற்கை (தற்சார்பு) விவசாயம் செய்யப் போகிறேன் என தடாலடியாக அறிவித்தவர், மூன்றே மாதத்தில் பாஜகவில் ஐக்கியமாகிறார். மாநிலத் துணைத் தலைவர் பதவியும்  கிடைக்கிறது.தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜகவினர் வெளியிட்ட ட்ரெயிலரில் 'ஐபிஎஸ் அண்ணாமலை' சாயம் வெளுத்துப் போகிறது.

அடுத்தடுத்த காட்சிகளுக்கு செல்வோம்...
அண்ணாமலையின் பூர்வீகம் தமிழ்நாடு. கரூர் மாவட்டம் சொக்கம்பட்டி கிராமம். அவரது குடும்பம் விவசாய குடும்பம். கோவை தனியார் கல்லூரியில்  பொறியியல் படிப்பை முடித்ததும் மேற்படிப்பிற்காக லக்னோ செல்கிறார். அங்குதான் அவருக்கு வலதுசாரி சிந்தனை ஊட்டப்படுகிறது.

ரகசியம்...
2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகே ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. எழுத்துத் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் அண்ணாமலை, 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்கிறார். இவர் மட்டுமல்ல. இவரைப் போலவே மேலும் பலர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரத்தில் சேர்ந்திருப்பதோடு அண்ணாமலையை போன்றே தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.இது எப்படி சாத்தியமாகிறது? என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு அண்ணாமலை படித்த பயிற்சி மையத்தை பற்றி தெரிந்து கொள்வோம். தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்கிற கனவை சிதைக்கும் 'நீட்' தேர்வு கட்டாயம் என்று வழக்குப் போட்ட அமைப்புதான் 'சம்கல்ப்'.

மதவாத பயிற்சி...
இந்த சம்கல்ப் அமைப்பு 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பல நகரங்களில் பயிற்சி பள்ளிகளை துவங்கி ஒரு நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இங்கு, சிறு வயதிலிருந்தே  "ராஷ்ட்ரிய பாவனா" எனும் இந்துமத கோட்பாடுகளையும், மனு தர்ம சாஸ்திரத்தையும் பயிற்றுவிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் மத வெறியை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தி வரும்  ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின்  (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்புதான் இந்த சம்கல்ப். ஆனாலும், ஆரம்பத்தில் எந்த வகையில் இதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.1986 ஆண்டு நடந்த தேர்வில், சம்கல்ப் பயிற்சி மையத்தில் இருந்து 60 பேர் தேர்வு எழுதி 48 பேர் தேர்வாகியுள்ளனர். இது படிப்படியாக அதிகரித்து, 1999-2000-களில் படித்தவர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல தேர்ச்சி விகிதமும் 90 விழுக்காடாக இருந்துள் ளது. இதனால் இந்த மையத்தை சிவில் சர்வீஸ் தேர்வாளர்களுக்கான  நிறுவனமாகவே மாற்றி விட்டனர். கடந்த ஆண்டில் மட்டும் இந்தப் பயிற்சி மையத்தில் 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த அமைப்பில் சேர்ந்து ஐபிஎஸ், ஐஎஏஸ், சிவில் சர்வீஸ் பணியிலும் அதிகாரிகளாக இருப்பவர்கள் பெரும்பாலானோர் பாஜக ஆதரவாளர்களாகவே இருப்பர். பாஜகவின் உறுப்பினர் அட்டையை பெறாமல் இருந்தாலும் அண்ணாமலையின் செயல்பாடுகள் அனைத்தும் பாஜக-ஆர்எஸ்எஸ் தொடர்புடையதாகவே இருந்து வந்தது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகமே எதிர்த்தபோது பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தவர்தான் இந்த அண்ணாமலை.
அதாவது, பெங்களூரில் இருந்தபோதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டது எனவும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அண்ணாமலையே தெரிவித்திருந்ததை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்!முழுக்க முழுக்க வலதுசாரி சிந்தனை கொண்டவரான அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக  நிர்வாகியும் கூட. அந்த அமைப்பு நடத்தும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவு  ஆற்றி உள்ளார். இதனால், அரசாங்கப் பணியை ராஜி
னாமா செய்ததும் பாஜக ஆதரவாளர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மதவெறி நச்சு...
சம்கல்ப் பயிற்சி மையங்களில் சொற்பொழிவு என்ற பெயரில் நடந்த வகுப்புகளில் பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய மஸ்தூர், சங்பரிவார், ஏபிவிபி 'சங்கிகளின்' தலைவர்கள்  கிருஷ்ணகோபால், சந்தோஷ் தனேஜாவால், மதன் தாஸ் தேவி, எம்.ஜி.வைத்திய, தர்மேந்திர குப்தா, ஜகதீஷ் ஷட்டர்கர், பிரஜேஷ் மிஸ்ரா என பலரால் மதவெறி விஷத்தை ஊற்றி வளர்க்கப் பட்டவர்களில் ஒருவர்தான் இந்த அண்ணாமலை.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனை கொண்டவர்களை அரசாங்க உயர் பதவிகளில் அமர வைப்பதும், தேவைப்படும் பொழுது ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வருவது அரசு நிர்வாகத்தை முழுக்க முழுக்க "காவி மயமாக்கும்" முயற்சியாகும்.மதவெறி கும்பலிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விடுத்து வரும் எச்சரிக்கைக்கு இந்த ஒரு சம்பவமே "பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும்".      

-சி. ஸ்ரீராமுலு
 

;