tamilnadu

img

தமிழ்க் கடவுள் முருகனும் பாஜக தலைவர் முருகன்ஜியும்...

பாஜக தலைவர் எல்.முருகன் தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்பச் சொத்து அல்ல இனியும் தமிழைச் சொல்லி தமிழர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.தமிழ் மறையாம் திருக்குறளை இமயத்தின் உச்சியில் நின்று பிரதமர் மோடி பேசியுள்ளார் என முருகன் பெருமிதப் பட்டுள்ளார். ஆனால் பாடச்சுமையை குறைப்பதாகக் கூறிக்கொண்டு சிபிஎஸ்இ பாடத்திலிருந்து திருக்குறள் பாடத்தை நீக்கியிருப்பது குறித்து முருகன் வாய் திறக்க மறுக்கிறார். இமயத்தின் உச்சியில் நின்று ஒரு குறளை கூறிவிட்டு வந்தால் மட்டும் போதுமா? பள்ளிப் பிள்ளைகள் திருக்குறளின் பெருமையை தெரிந்துகொள்ளவிடாமல் தடுப்பதுதான் திருக் குறள் மீது பாஜகவினர் வைத்திருக்கும் பாசமா?

தங்களது சமஸ்கிருத சரக்கினால் தமிழர்களை கவர முடியாது என்பதால்தான் திருக்குறளை கையில் எடுத்துள்ளனர். ஏற்கெனவே தருண் விஜய் என்பவர் திருக் குறளை படித்தேன், உருகினேன், உணர்ச்சிவசப்பட்டேன் என்றெல்லாம் கூறிக் கொண்டு தமிழ்நாட்டை வலம் வந்தார். திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் வைக்கப்போவதாக கூறி ஊர்தோறும் ஊர்வலம் நடத்தி, கடைசியில் அந்த சிலை வடபுலத்தில் கட்டிப்போடப்பட்டது. அப்போது தாங்கள் போட்ட மாரீச வேடம்
எடுபடாததால் இப்போது பிரதமர் மூலம் அந்த நாடகத்தை அரங்கேற்ற முயல் கிறார்கள்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி எவரும் சமூகநீதி இல்லை, ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி நீட் தேர்வை எதிர்க்கமாட்டார்கள் என நீட்டோலை வாசித்திருக்கிறார் முருகன்ஜி. இந்த உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அவசரச் சட்டம் மூலம் அங்கீகாரம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதேபோல ஆளுநரை வலியுறுத்த பாஜக தயாரா? பாஜக நீட் விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கூட மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு அனுப்பவில்லை. இப்போது இந்த உள்ஒதுக்கீட்டையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கெடுத்துவிடாமல் இருந்தாலே போதும்.

தமிழ் கடவுள் முருகன் என்று பாஜக தலைவர் முருகன் வரிக்கு வரி பேசுகிறார். தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்க முருகன்ஜி தயாரா? பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் அதை அனுமதிக்குமா? சாதியை மறுத்து வள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் கடவுள் முருகன் ஆலயத்தில் அனைத்து சாதியைச் சேர்ந்த தமிழர்களும் அர்ச்சகராக வேண்டும் என்று கேட்கும் தைரியம் முருகன்ஜிக்கு உண்டா?

தமிழர்களுடைய தொன்மையை வெளிக்கொணரும் கீழடி ஆய்வை முடக்கியது யார் என்பதை தமிழர்கள் நன்கறிவார்கள். தற்போது மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வில் அரிய ஆதாரங்கள், தமிழர்களின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் தரவுகள் கிடைத் துக் கொண்டிருக்கின்றன. இப்போதாவது கீழடி ஆய்வை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் என்று சொல்லும் தைரியம் பாஜக தலைவர் முருகனுக்கு உண்டா?பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசியதை முருகன் கண்டிக்காதிருக்கட்டும். பாண்டிச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விஷமிகளை முருகன் கண்டிக்காதது ஏன்? மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்தவர் எம்ஜிஆர் இவர்களது சேட்டைகளை ஒரு போதும் அனுமதிக்க மறுத்தவர் அவர். அதனால்தான் அவரது சிலையை அவமதிப் பதை பாஜகவினால் கண்டிக்க முடியவில்லையா? 

தமிழ் மீதும், தமிழ்நாடு மீதும் திடீர் அக்கறை காட்டும் பாஜகவின் உண்மை நிறத்தை தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எப்படியாவது இந்தியையும் அதன் வழியாக சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்று ஆலாய் பறக் கிற மத்திய அரசின் சதித்திட்டத்தை தமிழர்கள் அறியாதவர்கள் அல்ல. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பாய்வதைவிட்டுவிட்டு, அனைத்து வகையிலும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக இருக்கிற தன்னுடைய கட்சியை தட்டிக் கேட்க முருகன் முன்வருவாரா? யாருடைய குரலிலேயோதான் முருகன்ஜி பேசுகிறார். எனவேதான் குறளைப் பற்றி பேசும்போது அவருடைய குரலில் பிசிறு அடிக்கிறது.பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்துஎன்ற திருக்குறளை பிரதமர் மோடிக்கு இந்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ மொழி பெயர்த்து அனுப்ப முருகன் ஏற்பாடு செய்யட்டும். 

===மதுக்கூர் இராமலிங்கம்===

;