tamilnadu

img

கொரோனாவைப் பரப்ப எடப்பாடி அரசின் குறுக்குவழி.... ஜி. ராமகிருஷ்ணன்....

கடந்த நாற்பத்து ஆறு நாட்களாகக் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக நாட்டின் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கில் முடங்கிக்கிடக்கின்றன. மூன்றாவது முறையாக மேலும்14 நாட்கள் ஊரடங்கை மோடி அரசு அறிவித்துள்ளதால் மே 17 வரை தொடரும். தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்கள், சிவப்பு மண்டலங்களாக உள்ளன. ஊரடங்கில் சில அம்சங்களைத் தளர்த்தி, பல தொழில்கள் துவங்கப்படும் என மாநில அரசு அறிவித்தாலும், நகரத்தில் இருந்து சொந்த கிராமங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள், கான்ட்ராக்ட் தொழிலாளர்கள், மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியாத நிலை உள்ளது. சிறு குறு தொழில்கள் கட்டுமானம், ஆட்டோ, வாகனம், தையல், மீன்பிடி உள்ளிட்டு, பல தொழில்களில் வேலை செய்யும் பல அமைப்புசாரா தொழிலாளர்கள், மீண்டும் தங்களுடைய பணிகளைத் துவங்கிட, மேலும் பல நாட்களாகும். தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே இதுதான் நிலைமை. 

வருமானத்திற்கு வழியற்ற நிலை
வருமானத்திற்கு வழியில்லாததால், கோடிக்கணக் கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் பட்டினியால் வாடும் நிலைமை தொடர்கிறது. இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் சென்று சேரவே, இன்னும் பல நாட்கள் ஆகும். ஊரில் உள்ள தங்களுடைய சொந்தங்கள் எப்படி இருக்கிறார்களோ, அவர்களைக் கொரோனா தொற்று பாத்தித்திருக்கிறதோ என்ற கவலையிலும், வேலை செய்யும் மாநிலத்தில் இனி வேலை எப்போது கிடைக்குமென்ற நிலையற்ற சூழலிலும் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என இவர்கள் போராடுகிறார்கள். 

25 கோடி குடும்பங்களுக்கு...
அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான், வீட்டில் அடுப்பெரியும் என்ற அவல நிலையில் உள்ளவர்களுக்கு, மாநில அரசு, ரேஷன் மூலம் தற்போது வழங்கிடும் உணவுப் பொருட்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்யும் உதவிகள் மட்டும் போதுமானதாக இல்லை. மத்திய அரசு, அடுத்த மூன்று மாதங்களுக்கு 25 கோடி குடும்பங்களுக்கு (வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு) மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும் மாதம் 10 கிலோ அரிசி அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடிக்கு வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார். 

சரிந்து வரும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்து வதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, பல வல்லுனர்கள் (ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ், அபிஜித் பானர்ஜி, அமர்த்தியா சென் என நோபல் விருதுபெற்ற பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டு), மத்திய அரசு தனது பொதுச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள். இவர்கள் சொல்வதை எல்லாம் பிரதமர் மோடி காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. 

சொற்பமான ஒதுக்கீடு
துவக்கத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக மோடி அரசு அறிவித்தது. அது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 0.7 சதவிகிதமே (ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு). அமெரிக்கா 10 சதவிகிதமும், இங்கிலாந்து 12 சதவிகிதமும், ஜெர்மனி 20 சதவிகிதமும் எனக் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ள போது, மோடி அரசு செய்துள்ள சொற்ப ஒதுக்கீடு மத்திய அரசுக்கு மக்கள்நலனில் அக்கறை இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இந்த 1 லட்சத்து, 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்பதேகூட, நூறு நாள் வேலைத் திட்டம், ஜன்தன் திட்டம் என ஏற்கனவே அமலாகி வருகிற திட்டங்களுக்கான ஒதுக்கீடுதான். கொரோனா பாதிப்பால் நாடே முடங்கிக் கிடக்கிறபோது, அவர்களைப் பாதுகாப்பதற்கான, உணவளிப்பதற்கான எந்த ஒரு புதியத் திட்டமும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை, கடன் தள்ளுபடி சலுகைகள் வழங்கும் மத்திய அரசால், உழைக்கும் மக்களுக்குப் போதிய நிதி ஒதுக்கிக் காப்பாற்ற முடியாதா? கடந்த ஆறுஆண்டுகளாக மோடி அரசு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை வடிவங்களில் கார்ப்பரேட்களுக்கு வழங்கியுள்ள சலுகைகள் மட்டும் ஏழே முக்கால் லட்சம் கோடி. தற்போதுகூட நீரவ்மோடி, பாபா ராம் தேவ் உள்ளிட்ட ஒரு சில பெருமுதலாளிகளுக்கு 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மாநிலங்களின் சிரமம்
மத்திய அரசு நிதிஒதுக்கீடு என்பது சொற்பமானது என்பதோடு, மாநிலங்களுக்கும் போதுமான நிதிஒதுக்கீட்டை மறுத்து வருகிறது. கேரளா, தமிழ்நாடுபோன்ற மாநில அரசுகள், நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (எஃப்.ஆர்.பி.எம்) சட்டத்தின் விதிவிலக்கு அம்சத்தைப் பயன்படுத்தி, நிதிப்பற்றாகுறை உச்சவரம்பை 3 சதவிகிதத்துக்கு மேலாக மத்திய அரசு உயர்த்தி, மாநில அரசுகள் கடன் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. எப்படியாவது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என வாய்ப்புள்ள நிதியை எல்லாம் செலவு செய்த கேரள அரசு, அடுத்த மாதம், அங்குள்ள அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கே சிரமமாக இருக்கிறது என்பதால், மத்திய அரசு உடனடியாக, பற்றாக்குறை உச்ச வரம்புக்கு அதிகமாகக் கடன் வாங்கஅனுமதி கேட்டுள்ளது. என்றாலும், இதுவரை மத்திய அரசாங்கம் அனுமதி தரவில்லை. இந்நிலையில் அதிமுக அரசு உச்சவரம்புக்கு மேலாகக் கடன் வாங்குவதற்கு அனுமதி கேட்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசிடம் இது போன்ற கோரிக்கைகள் வைக்கும் பிற மாநில அரசுகளுடன் இணைந்தும் கோரிக்கை வைக்க வேண்டும். 

47 கோடித் தொழிலாளர்
இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் 47 கோடிப் பேர். அவர்களில் வெறும் 10 சதவிகிதம் பேர் தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் முறைசாரா தொழிலாளர்கள். இவர்கள் அனைவருக்கும் வருமானத்துக்கு ஏற்பாடு செய்து, அவர்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் கொரோனா ஊரடங்கால், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவைத் தடுத்து நிறுத்த முடியாது.கொரோனா தாக்கத்துக்கு முன்னதாகவே, தேசப்பொருளாதாரத்தின் வளர்ச்சி தேக்கத்தில் இருந்தது. சிலதுறைகளில் சரிவும் ஏற்பட்டிருந்தது. 45 ஆண்டுகாலமாகஇல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது,  வாங்கும் சக்தி குறைந்துள்ளது என்று அரசினுடைய ஆய்வறிக்கைகளே கூறியுள்ளன. இந்நிலையில் ஊரடங்கின் பாதிப்புகளைப் பரிசீலித்து, ஆவன செய்ய மத்திய அரசு மறுக்கிறது. அவ்வப்போது ஊரடங்கு அறிவிப்பு மட்டும் செய்தால் போதுமானது எனப் பிரதமர் கருதுகிறாரா? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லையா? தமிழக அரசு மத்திய அரசைத் தட்டிக் கேட்கவே மறுக்கிறது. 

உண்மையை மறைக்காதீர்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னை, கொரோனா தொற்றின் தலைநகராகவும் மாறியிருக்கிறது. துறை அமைச்சரும், செயலரும் ஊடகங்களைச் சந்திப்பதை நிறுத்திவிட்டார்கள். நேரடிச் சந்திப்பு, சமூக விலகல் நியதிகளுக்கு பாதிப்பாக இருக்கும் எனக் கருதினால் காணொலி மூலம்கூட சந்திக்கலாம். மக்களுக்கு நம்பிக்கையூட்டலாம்.கொரோனா தொற்று, நேரடியாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமோ, அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலமோ மட்டும் பரவாமல், யார் மூலமாக தொற்று ஏற்பட்டது எனக் கண்டறிய முடியாத, சமூகத் தொற்று கட்டத்துக்கு சென்றுள்ளது எனப் பல வல்லுநர்கள் கூறுகிறபோது, மாநில அரசும் மத்திய அரசும் உண்மையை மறைக்கின்றன.

டாஸ்மாக்கை திறப்பதால் பேராபத்து
பெரும்பான்மையான மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவித்துவிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு மே 7ஆம் தேதியில் இருந்து திறந்துவைக்கப் போவதாக அறிவித்திருப்பது சமூக விலகல் விதிகளைப் பாதித்து, தொற்றுப் பரவலை மோசமாக அதிகரிக்கும். ஏற்கனவே, மதுக்கடைகள் திறக்கப்பட்ட தில்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல கிலோமீட்டர் அளவுக்கு, மதுபானங்கள் வாங்குவதற்கு, வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. எனவே,தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு, மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்நிலையில்தான், மே 7 முதல் (சென்னை மாநகரை தவிர) இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என மாநில அரசு அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவருவோம் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அம்மா அரசு என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு, கொரோனா தொற்று காலத்தில் மக்கள் மீது துளியும் பொறுப்புணர்வு இன்றி, மதுக்கடைகளைத் திறந்து வைக்க முடிவெடுத்துள்ளது. இது கொரோனாவால் வேலையின்றி, வருமானமின்றி, கையில் இருக்கும் சொற்பக் காசையும் மதுவுக்கு செலவழிக்கும் சூழலை ஏற்படுத்தி, குடும்பங்கள் பட்டினியால் வாடும் நிலையை ஏற்படுத்தும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரிக்கும். இந்தப் பாதிப்புகளை எல்லாம் உணர்ந்து, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். 

மத்திய அரசாங்கம், ஊரடங்கு அறிவித்ததுடன் தன்னுடைய வேலை முடிந்துவிட்டது எனக் கருதாமல், கொரோனா தொற்றால், தொழில்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில், மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாது, மத்திய அரசாங்கம் தன்னுடைய பொதுச் செலவினத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை சரிவில் இருந்து மீட்டு, நாட்டை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இந்நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், டாஸ்மாக் திறக்கப்படும் என்ற மாநில அரசின் விபரீதமான முடிவைக் கண்டித்தும், திமுக, சிபிஐ(எம்), சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் வியாழனன்று காலை 10 மணிக்கு, மாநிலம் முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை நடத்திட அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு அனைத்து மக்களும் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.

ஜி. ராமகிருஷ்ணன்.... அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

;