tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-14 : மனு(அ)தர்மத்தை வீழ்த்தாமல் சமதர்மம் இல்லை...

2004 மக்களவைத் தேர்தலில் பாஜகஅணி தோல்வியுற்று காங்கிரஸ் அணிவெற்றி பெற்றது. மன்மோகன்சிங் தலைமையில் நடந்தஆட்சி அடுத்த பத்து ஆண்டுகள் தொடர்ந்தது. 1998 லிருந்துஆறு ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தை அனுபவித்துவந்த ஆர்எஸ்எஸ்சுக்கு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வெறி வந்தது. அதிலும் தனிப் பெரும் பான்மையுடனான ஆட்சியை அடைய விரும்பியது. அதற்காக அரசியல் காய்களை மிகச் சாதுரியமாக நகர்த்தியது.

2011-13 காலத்தில் அன்னா ஹசாரேயும் பாபா ராம்தேவும் ஊழல் ஒழிப்பு வீரர்களாகக் களத்தில் இறங்கினார்கள். இவர்களது போராட்டங்களை ஆர்எஸ்எஸ் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியது. இதுபற்றி நூரானி தந்திருக்கும் தகவல்கள்: “2011 ஏப்ரலில்பகவத்தும் இணைப் பொதுச்செயலாளர் பையா ஜோசியும் பாபா ராம்தேவின் ஊழல் ஒழிப்பு சத்யாகிரகத்திற்கானை ஆதரவு தளத்தை உறுதி படுத்தினார்கள்.அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பார் எனும் புரிதலின் அடிப்படையில் ஆதரவு தரப்படுவதாக ஆர்எஸ்எஸ்வட்டாரங்கள் கூறின. அத்தகைய புரிதல் அன்னா ஹசாரேயோடு இருந்ததாகத் தெரியவில்லை. எனினும் அவர் தலைமை தாங்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் தீவிரமாகப் பங்கேற்றதாக அதன் தலைவர்மோகன் பகவத் கூறினார்”.

அன்று அன்னா ஹசாரே “புதிய மகாத்மா காந்தி”என்று புகழப்பட்டதும், மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்ததும் அந்த மகாத்மாவை ஆர்எஸ்எஸ் மறந்து போனதும் ஊழல் ஒழிப்பில் எல்லாம் அதற்கு உண்மையில் ஆர்வம் இல்லை, எல்லாம் ஆட்சியைப் பிடிக்கும் தந்திரமே என்பது தெளிவானது. பாபா ராம்தேவ் பற்றி சொல்லவேண்டியதேயில்லை. அவர் மீதே இன்று புகார்கள் எழுந்துள்ளன. அன்று அன்னாவின் உண்ணாவிரத மேடையில் தேசியக் கொடியை அசைத்த கிரண்பேடி இன்று ஆட்சியாளர்களின் தயவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகிப் போனார். இவர்களின் ஊழல் ஒழிப்புஇயக்கம் எங்கே? பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் ஓடிப்போனது என்பார்களோ?

இப்படி 2011-13 காலத்தில் ஊழல் ஒழிப்பு என்பதைமட்டும் முன்னிறுத்தி மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை தங்களுக்கு ஆதரவாகத் திருப்ப முனைந்தவர்கள்ஒரு புதிய பிரதமர் வேட்பாளரையும் முன்மொழிந்தார் கள். அத்வானி ஓரங்கட்டப்பட்டு மோடி முன்னிறுத்தப் பட்டார். இதில் ஆர்எஸ்எஸ்சின் கைவரிசை உண்டு என்பதை அதன் தலைவர் பகவத்தின் இந்தக் கூற்று மெய்ப்பித்தது: “பிரதமர் வேட்பாளர் யார் என்று சங் பரிவாரம் இன்னும் முடிவு செய்யவில்லை”.(இண்டியன் எக்ஸ்பிரஸ் 20-10-2013) இதன் பொருள் ஆர்எஸ்எஸ் முடிவுசெய்கிறது என்பதாகும்.

ஏன் அதனால் மோடி தேர்வு செய்யப்பட்டார்? அதற்கான காரணங்களாக இவை இருக்கலாம்: 1.குஜராத்தில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி இந்து வாக்கு வங்கியை உருவாக்கும் வித்தகர் இவரே. 2. அத்வானியைவிடஇவர் கைக்கு அடக்கமானவராக இருப்பார். 3. இவரதுஆட்சியில் கொழுத்த குஜராத்தின் பெருமுதலாளிகள் சிலர் இவரை படு உற்சாகமாக ஆதரித்தனர். முதல்வராகஇருந்து குஜராத்தின் வளத்தை கொள்ளையடிக்க அனுமதித்தவர் பிரதமராகி இந்தியாவின் வளத்தை விழுங்கஏற்பாடு செய்வார் என்று அவர்கள் கணக்கு போட்டனர்.பின்னர் நடந்த பிரச்சாரத்தில் குஜராத்தை மாடல் அரசாகக் காட்டியதிலும், மோடியை “வளர்ச்சி நாயகன்” எனத் தூக்கி நிறுத்தியதிலும் அது புலப்பட்டது.

மத்தியில் வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசை நிறுவிய ஆர்எஸ்எஸ் 2014ல் மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மை ஆட்சியை நிறுவியது. 2019ல் மீண்டும் அதை சாதித்துக் காட்டியது. அதன்அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? “இந்து ராஷ்டிரம்” என்ற பெயரில் மனுவாத ராஷ்டிரத்தை அமைப்பதாக இருக்கலாம். அதற்கு அச்சாரமாகத்தான் இறைச்சிக்காக மாடுகளை வாங்க-விற்க தடை, அதை மீறியதாகச் சொல்லி முஸ்லிம்கள் மற்றும் பட்டியல் சாதியினர் மீது தாக்குதல்கள், முஸ்லிம் ஆண்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை எனும் முத்தலாக் தடைச் சட்டம், ஜம்மு-காஷ்மீரின் 370வது பிரிவு நீக்கம், அதன் மாநில அந்தஸ்து பறிப்பு, முஸ்லிம்களின் குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கும் குடியுரிமை திருத்தச்சட்டம், என்பிஆர்-என்ஆர்சி பற்றிய பேச்சுக்கள், சூத்திர-பஞ்சம இந்துக்களின் கல்வியைத் தடுக்க நீட் எனும்நுழைவுத் தேர்வு, மருத்துவக் கல்விக்கான மத்தியஅரசு தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு கடந்த சிலஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுப்பு, பாபர் மசூதி இருந்தஇடத்தில் ராமர் கோயில்கட்டுவது இத்யாதிகள். இவையெல்லாம் ஆர்எஸ்எஸ்சின் மனுவாத நிகழ்ச்சிநிரலே.இவற்றை அமுல்படுத்திக் கொண்டே சென்று முடிவில் “இந்து ராஷ்டிரத்தை” அமைப்பதே அவர்களது லட்சியம். இதற்கு இந்த நாட்டுப் பெரு முதலாளிகளின் ஆதரவைப் பெற அவர்கள் கேட்பதையெல்லாம் செய்கிறார்கள். கொரோனா கொள்ளை நோயால் நாடே பற்றிஎரியும்போதும் பொதுத்துறைகளை எல்லாம் தனியார்மயமாக்குவோம் என்கிறார்கள்.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளையும் விட்டுவைக்கப் போவதில்லை என்கிறார்கள். வெளிநாட்டுப் பெருமுதலாளிகளின் தயவை நாடி பாதுகாப்பு துறையில் அவர்களதுமுதலீட்டின் அளவு அதிகரிப்பு என்கிறார்கள். அணுசக்தி, விண்வெளித் துறைகளும் தனியாருக்கு திறந்துவிடல் என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வசதியாக வேளாண் துறையையும், தொழிலார் உரிமைகளையும் காவு கொடுக்கிறார்கள். தானியங்களை அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலிலிருந்து எடுத்து விட்டார்கள். (அவற்றுக்குப் பதிலாக கோமியம், சாணத்தை சேர்ப்பார்களோ?) தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்கி வைக்கிறார்கள். இவையெல்லாம் வெகு மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதால் அதை ஒடுக்க ஒவ்வொரு அடக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் உச்சம் மனுவாத பாசிச ஆட்சியாக இருக்கலாம்.

அதையும் சந்திக்க இப்போதே மக்களைத் தயார்படுத்துவதுதான் ஒரே வழி. அரசியல்தளம், சமூகத்தளம் என்று ஆர்எஸ்எஸ் ஒரேநேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறது. சமூகத்தளம் என்று நிர்வாகத்துறை, நீதித்துறை, கல்வி-கலை-இலக்கியம் உள்ளிட்டபண்பாட்டுத்துறை போன்ற சிவில் வாழ்வில் ஊடுருவுகிறது. அதை எதிர்க்கும் சக்திகளும் அதேபோல இருதளங்களில் பயணித்தாக வேண்டும். சித்தாந்தரீதியாகவும், செயல்பாட்டுரீதியாகவும் இந்துக்களை அது அணுகுகிறது. அதை எதிர்க்கும் சக்திகளும் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கவேண்டும். ஆர்எஸ்எஸ் இந்துக்களுக்கானஅமைப்பே அல்ல, மாறாக ஆகப்பெரும்பாலான இந்துகளுக்கு எதிரானது எனும் உண்மையைச் சொல்லியாகவேண்டும். இதுவரை நாம் புரட்டிப் பார்த்த ஆர்எஸ்எஸ்சரித்திரத்தின் சாரம் என்ன?

1. பழைய நிலப்பிரபுத்துவத்தின் சமூக கட்டமைப் பாம் வர்ணாசிரமத்தை மீட்டெடுக்கப் பார்க்கிறது ஆர்எஸ்எஸ். மத மாற்றத்தின் மூலம் அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்களே என்றுதான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது அதற்கு கடுங்கோபம். ஆனால் அந்த வர்ணாசிரமத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாகப்போவது மதச்சிறுபான்மையோர் மட்டுமல்ல, அடித்தட்டு சாதியினரும் பெண்களும்தான். காரணம் வர்ணாசிரமத்தை வாழ்வியல் சட்டமாக எழுதி வைத்துள்ளமனுதர்மம் போன்ற சாஸ்திரங்கள் சாதிய முறையிலும் பாலின வகையிலும் பேதம் பார்ப்பவை. அந்த மனு(அ)தர்ம சாஸ்திரத்தை எதிர்த்து சங் பரிவாரம் பேசுவதில்லையே கவனித்தீர்களா? சாதி ஒழிய வேண்டும் என்றுகூட அவர்கள் பேசுவதில்லை. “ஆணாதிக்கம் ஒழியட்டும், பெண்விடுதலை வரட்டும்” என்று அவர்கள் சொல்லி நாம் கேட்டதில்லை! இதிலிருந்தே அவர்கள் மனுவாதிகள்தானே தவிர சாதாரண இந்துக்கள் அல்லஎன்பதை உணரலாம்.

2. “இந்து ராஷ்டிரம்” என்று மதவழி தேசியம் பேசும்ஆர்எஸ்எஸ் இந்தியாவின் யதார்த்தமாகிய மொழிவழிதேசியஇனங்களை மறுக்கிறது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு மெய்யான கூட்டாட்சியை நடைமுறைப்படுத்தும்போது நாட்டின் ஒற்றுமை பலப்படும்என்பதை அது ஏற்பதில்லை. மாறாக ஒற்றை ஆட்சிமுறையைத் திணித்து, அந்த தேசியஇனங்களின் தனித்தன்மைகளை அழிப்பதன் மூலமே அதைச் சாதிக்க முடியும் என்கிறது. இது இந்தியா எனும் தேன்கூட்டைக் கலைக்கிற வேலை. இவர்கள் உண்மையான தேசபக்தர்கள் அல்ல, போலிகள் என்பதை மாநில உரிமைகளைப் பறிக்கச் சொல்வதிலிருந்தும், தமிழ் உள்ளிட்ட தேசியமொழிகளைத் தாழ்வாக நோக்குவதிலிருந்தும் சட்டென்று உணரலாம்.

3. பிறப்பின் அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வைஅங்கீகரிப்பதால் ஆர்எஸ்எஸ்சானது பொருளாதாரஏற்றத்தாழ்வையும் இயல்பானதாகக் கொள்கிறது.ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை முன்ஜென்மவினையாக பாவிக்கும் மனுதர்மத்தால் சமதர்மத்தை சிறிதும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் கம்யூனிஸ்டுகளை தனது எதிரிகளின் பட்டியலில் வைத்துள்ளது அது. இதன் காரணமாக வர்ணரீதியாக மட்டுமல்லாது வர்க்கரீதியாகவும் அது அடித்தட்டு இந்துக்களின் பக்கா எதிரியாகும்.

4. இந்திய அளவிலான இந்தப் பொதுக் குணங்களோடு தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு எழுந்தசமூகநீதி இயக்கத்தை படு வெறுப்போடு பார்க்கிற குணத்தையும் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். அதற்காகவே இந்து முன்னணி என்கிற துணை அமைப்பை உருவாக்கியது. அதுவும் இதர சங் பரிவாரமும் பெரியாரைக் கடுமையாகத் தாக்குகின்றன. தமிழகத்தின், தமிழின் தனித்தன்மையை மறுக்க திருக்குறளுக்கே திரிபுவாத விளக்கம் கொடுத்தார் கோல்வால்கர்.அது: “திருக்குறள் முன்வைத்துள்ள கருத்து என்ன? அதே பழைய இந்து கருத்தியலாகிய சதுர்வித -புருஷார்த்தம் என்பதைத்தான் லட்சியமாக முன்வைத்துள்ளது.”(சிந்தனைக் கொத்து) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சதுர்வர்ண சாதியக் கோட்பாட்டை மறுத்த திருக்குறளை எப்படிதமது மனுவாதச் சிந்தனையாகச் சித்தரிக்கிறார் பாருங்கள்! இதே நோக்கோடு தான் மொழிப்பிரச்னையையும் அணுகினார். “இணைப்பு மொழி பிரச்னைக்குதீர்வாக சமஸ்கிருதம் அந்த நிலையை எட்டும் வரைஇந்திக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும்” (சிந்தனைக்கொத்து) என்றார். ஆக ஆர்எஸ்எஸ்சின் லட்சியம் தமிழர்கள் உள்ளிட்ட சகலர் மீதும் சமஸ்கிருதத்தை திணிப்பதுதான். அதற்கான முன்னோட்டம்தான் இந்தி திணிப்பு.

5. ஆர்எஸ்எஸ்சை துவக்கியவர்களில் ஒருவராகிய மூஞ்சே பாசிஸத்தின் மீதுகொண்டிருந்த நேசத்தையும், முசோலினியை அவர் சந்தித்ததையும் கண்டோம்.அதே பிரியத்தை “குருஜி” நாஜி ஹிட்லர் மீது கொண்டிருந்தார். எதற்கு என்று கேளுங்கள்: “இன மற்றும் கலாச்சாரத் தூய்மையைப் பேணுவதற்காக யூதர்கள் எனப்பட்ட செமிடிக் இனத்தாரை நாட்டை விட்டு வெளியேற்றி ஜெர்மனி உலகை அதிர வைத்தது. இனப் பெருமையானது அதன் உச்சத்தை தொட்டது. ஆழமான வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றாக மாற முடியாது என்பதை ஜெர்மனி காட்டியது. இந்துஸ்தானத்திற்கு இதிலே நல்லதொரு பாடம் உள்ளது.” (நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை) இவருக்கு இனம் என்பது மதவழி இந்து இனம் என்பதை அறிவோம். ஆக அந்தஇனத் தூய்மையைக் காப்பாற்ற பிற மத இனங்களை வெளியேற்ற வேண்டும் என்பதே ஹிட்லரிடம் இவர் கற்றுக் கொண்ட பாடம்.

இந்த இனத் தூய்மைவாதம் மனுவாதத்தை ஏற்காதவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்று வந்து முடிந்தால்ஆச்சரியப்படாதீர்கள். இத்தகையவர்கள் அரசு அதிகாரத்துவத்திலும் ஹிட்லரைப் பின்பற்றி ஜனநாயக உரிமைகளை முழுமையாகப் பறிக்க முனைவார்கள் என்பதையும் எதிர்பார்க்க வேண்டியதுதான். நூரானிதனது நூலுக்கு தந்துள்ள முழுப் பெயர்: “ஆர்எஸ்எஸ்-இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல்”.இந்த அபாயத்தை நாம் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கக் கூடாது. அதனுடைய மிரட்டல் மத நல்லிணக்கத்திற்கு, மனிதநேயத்திற்கு, மதச்சார்பற்ற அரசுக்கு, சட்டத்தின் ஆட்சிக்கு, சமதர்மச் சிந்தனைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால். ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே. இந்தியாவின் வர்க்கப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு ஒரு முக்கியமான அத்தியாயமாக இருக்கும். அதனது மனுவாத மதவெறியை முறியடிப்பது சோசலிச லட்சியத்திற்கான வர்க்கப் போராட்டப் பாதையை செப்பனிடுவதாகும்.மனு(அ)தர்மத்தை வீழ்த்தாமல் சமதர்மத்தை நோக்கி நகர முடியாது. அப்படியாக வர்க்கப் போராட்டத்தின்  பிரிக்கவொண்ணா பகுதியாக இந்தப் போராட்டம்உள்ளது. இதை உணர்ந்து நமது உழைப்பாளி வர்க்கம்தனது கடமைகளில் ஒன்றாக இதையும் வரிக்கும். மனித குலமே உழைப்பால் பிறந்தது, உழைப்பால் சுழல்வது. அது மனது வைத்துவிட்டால் இந்த சங் பரிவாரம் எம்மட்டு? அதன் வீழ்ச்சி உறுதி, நாட்டின் எழுச்சி நிச்சயம்.

(முற்றும்)
 

;