tamilnadu

img

வராக்கடன் செங்குத்தாக உயரும் ஆபத்து - சி.பி.கிருஷ்ணன்

தொடர்ந்து அதிகரித்து வரும் வராக்கடன்கள் இந்திய வங்கித் துறையின் மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஐபிசி சட்டத்தின் வாயிலாக பெருமுதலாளிகளின் வராக்கடன்களை முழுவதுமாக வசூல் செய்து விட முடியும் என்று மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு நேர் எதிராக வராக்கடன்களின் அளவு கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மோசமான கடன் (Bad loan) இருந்து வருகிறது. அவ்வகையான கடன்களுக்கு செயல்படாத சொத்து (Non Performing Assets) என்ற  பெயர் நவீன தாராளமய காலகட்டத்தில்தான் கொடுக்கப்பட்டது.  இந்த கடன்கள் அனைத்தும் செயல்படாமல் இருந்தாலும் அவை வசூல் செய்யப் ்பட கூடியவை என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1993 ஆம் ஆண்டு வரை இவ்வாறான செயல்படாத சொத்துக்க ளை(NPA) பற்றிய வழக்குகள் அனைத்தும் சிவில் நீதிமன்றங்களிலேயே நடைபெற்றுவந்தன.

கடன் வசூல் தீர்ப்பாயம் -Debt Recovery Tribunal (DRT) 

கடன் வசூல் மற்றும் திவால் சட்டம் 1993 (Debts of Recovery and Bankruptcy Act) ன் படி கடன் வசூல் தீர்ப்பாயம் (Debt Recovery Tribunal) மற்றும் கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Debt Recovery Appellate Tribunal) போன்றவை ஏற்படுத்தப்பட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நிலுவையிலுள்ள வராக் கடன்கள் தொடர்பான பிரச்சனைகளில் விரைவான தீர்ப்பு கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  இந்த கடன் வசூல் தீர்ப்பாயத்தில் போதுமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்காதது, குறைந்த தீர்ப்பாயங்களைக் கொண்டு மிக அதிக பகுதிகளை உள்ளடக்கிய வழக்குகளை கையாண்டது, அடிப்படை கட்டமைப்பை உருவாக்காதது போன்ற காரணங்களினால் சில குறைபாடுகள் தென்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சிவில் நீதி மன்றங்களை விட கடன் வசூல் தீர்ப்பாயங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் சிறப்பான பங்களிப்பையே செய்தன.  எனினும் சிறு, குறு கடனாளிகளின் வழக்குகளை மட்டுமே இவற்றால் தீர்க்க முடிந்தன. பெரிய கார்ப்பரேட் கடன்களை வசூலிப்பதில் இவற்றின் பங்களிப்பு மிகக் குறைவு.

சர்பேசி (SARFAESI) சட்டம்

2002 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சர்ஃபேசி (Securitization And Reconstruction of Financial Assets and Enforcement of Securities Interest Act ) சட்டம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களை குறிப்பிடத்தகுந்த அளவில் விரைவாக வசூலிக்க வழிவகை செய்தது. இந்த சட்டத்தின் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாங்கள் கொடுத்த கடனுக்கு ஈடாக பெற்ற சொத்துக்களை (mortgaged property) நீதிமன்றத்திற்கு செல்லாமல் தாங்களே ஏலத்திற்கு விட்டு கடன் தொகையை வசூலிக்கும் உரிமையைப் பெற்றன. இதனால் வராக்கடன்களை வசூலிப்பதில் இருந்த காலதாமதம் பெருமளவில் குறைந்தது. ஆனால் இதுவும் சிறு குறு கடன்களை வசூலிப்பதற்கு மட்டுமே பயன்பட்டது. பெரிய கார்ப்பரேட் கடன்களை இவற்றால் வசூலிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து அடமானம் (Collateral Security) இருந்தால் போதுமானது என்ற ரிசர்வ் வங்கியின் கொள்கையேயாகும். 

மக்கள் நீதிமன்றம் (Lok Adalat)

இவற்றின் தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் (Lok Adalat) என்ற தகராறு தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்ற அமைப்பாக விளங்குவதால் வங்கிகளால் எளிதாக தங்களது வாராக்கடன் சார்ந்த வழக்குகளை இங்கு எடுத்துச் செல்ல முடிகிறது. எனினும் இதுவும் வழக்குகளை சந்திக்க அச்சப்படுகின்ற, சட்டத்தை மதிக்கின்ற சாதாரண குடிமக்களிடம் தான் செல்லுபடியாகின்றதே தவிர சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து செல்கிற பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் அல்ல.

வராக்கடன்களில் கார்ப்பரேட்  பெரு முதலாளிகளின் பங்கு

இவ்வாறு மேற்கூறிய இந்த அனைத்து சட்டங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் மூலம் சிறு குறு கடனாளிகள் வாங்கிய கடன்கள் பெருமளவு வசூலிக்கப்பட்டன. ஆனால் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் கடன் பெற்ற பெரு நிறுவனங்களின் வராக்கடன்கள் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தன. ரிசர்வ் வங்கியின்  நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின்படி வணிக வங்கிகளில் வழங்கப்படும் மொத்த கடன்களில் 53% கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு அவற்றில் 82.2% வராக்கடன்களாக உள்ளது. அதே நேரத்தில் சிறு குறு கடனாளிகளுக்கு 47% கடன்கள் கொடுக்கப்பட்டு அவற்றில் 17.8% மட்டுமே வராக்கடன்களாக உள்ளன. இதன்மூலம் வாராக்கடன்களின் மிகப்பெரிய பங்கு கார்ப்பரேட் பெருமுதலாளிகளையே சேரும் என்பது தெளிவாகிறது. 

வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர் முயற்சிகளும், போராட்டங்களும்

இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வங்கி ஊழியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

1. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களுக்கு 100% சொத்து அடமானம் வாங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு மாற்றியமைக்கப்பட வேண்டும். 

2.கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை விரைவாக வசூல் செய்யும் வகையில் வலுவான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

3. கடன் கொடுத்த வங்கிகள் கடனை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்கு னர்கள் அல்லது அவர்களின் கூட்டாளிகளின் சொத்துக்களை நீதிமன்றங்களின் துணையின்றி கையகப்படுத்தும் அதிகாரம் பொருந்திய சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

4. வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாத செயலை (Wilful Default) கிரிமினல் குற்றமாக வகைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு  வங்கி ஊழியர் சங்கங்கள் தனியாகவும் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் மூலமாகவும் கடந்த 23 வருடங்களாக கோரிக்கை விளக்க கூட்டங்கள், சுவரொட்டிகள், கோரிக்கை விளக்க துண்டறிக்கைகள், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கங்கள், வீதி நாடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், வராக்கடனாளிகளின் பட்டியலை வெளியிடல், சமூக வலைதள பிரச்சாரங்கள், சம்பளத்தை இழந்த வேலைநிறுத்தங்கள் போன்றவற்றின் வாயிலாக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துதலை எதிர்த்தும், தனியார் வங்கிகளை அரசுடமையாக்க வலியுறுத்தியும், கார்ப்பரேட் வாராக்கடன்களை வசூல் செய்யும் நடைமுறையை வலுப்படுத்த வலியுறுத்தியும், வங்கிகள் நியாயமான வட்டி கொள்கையை கடைப்பிடிக்க வலியுறுத்தியும், சாதாரண ஏழை, எளிய வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யும் அபராதத் தொகையை கைவிடவும் இடைவிடாது போராடி வருகின்றன. 

பிப்ரவரி 2016ல் பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய திரு. வீரப்பமொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு  கார்ப்பரேட் வாராக் கடன்களை வசூல் செய்ய வலுவான சட்ட மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தது. வேண்டுமென்றே கடன் செலுத்த தவறியவர்கள் (Wilful Defaulters)பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று இந்த அறிக்கை மேலும் கேட்டுக் கொண்டது. ஆனால் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த நிலைக் குழுவின் அறிக்கையை செயல்படுத்த எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.

ஐபிசி சட்டம்

மே 2016-ல் பாஜக கூட்டணி அரசு கார்ப்பரேட் வாராக்கடன்களை வசூல் செய்ய Insolvency and Bankruptcy Code (IBC) என்ற ஓரு புதிய திவால் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஓர் இயக்குநர் குழு உருவாக்கப்பட்டு வாராக் கடன் தொடர்பான வழக்குகள் அந்தக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த குழுவின் மூலம் தேசிய சட்ட தீர்ப்பாயத்திற்கு -National Company Law Tribunal (NCLT) வழக்குகள் எடுத்துச் செல்லப்படும். இந்தத் தீர்ப்பாயம் 180 நாட்களில் இருந்து 270 நாட்களுக்குள் வராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களை முழுமையாக விற்பதன் மூலமோ அல்லது பகுதி பகுதியாக பிரித்து விற்பதன் மூலமோ கிடைக்கும் தொகையை வசூலிக்கும். மத்தியில் ஆளும் அரசு இந்தத் திட்டத்தின் மூலம் வாராக் கடன்கள் முழுவதையும் மிக விரைவாக வசூல் செய்ய முடியும் என்றும், இதுவே வாராக்கடன் பிரச்சினைகளுக்கு சர்வரோக நிவாரணியாக அமையும் என்றும் பெருமையாக மார்தட்டிக் கொண்டது.

ஜூன் 2017 -ல் 12 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 3,45,000 கோடி ரூபாய் வாராக்கடன் சார்ந்த வழக்குகள் இந்த தீர்ப்பாயத்திற்கு (NCLT) கொண்டு செல்லப்பட்டது. இந்த தொகையானது அப்போதைய அனைத்து வங்கிகளின் மொத்த வாராக்கடன்களில் 25% ஆகும். மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் இந்த 12 வழக்குகளில் இதுவரை 7 வழக்குகள் மட்டுமே தீர்ப்பாயத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. தீர்த்து வைக்கப்பட்ட ஏழு வழக்குகளின் மொத்த வராக் கடன் மதிப்பு 2,13,731 கோடி ரூபாயாக இருந்த நிலை யில் வசூல் செய்யப் படவேண்டிய தொகையாக தீர்ப்பாயம் அறிவித்தது வெறும் 1,12,894 கோடி ரூபாய் மட்டுமே. இந்தத் தொகையும் ஒரே தவணை யாக கிடைக்காது. மாறாக நான்கு முதல் ஐந்து தவணையாக ஐந்து வருடங்களில் தான் கிடைக்கும். இதன் மூலம் 1,00,837 கோடி ரூபாய் கார்ப்பரேட்நிறுவ னங்களுக்கு ஒரேயடியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.'

 ஐபிசி சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பற்றியும், இந்த சட்டம் கடனை திருப்பித் தராத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே முழுக்க முழுக்க நன்மை தரக்கூடியதாக உள்ளது என்றும், இதன் மூலம் வங்கிகளில் உள்ள வைப்புதாரர்களின் பணம் சட்டரீதியாக கொள்ளையடிக்கப்படுகிறது என்றும் வங்கி ஊழியர் இயக்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றது. ஆனால் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் பிரதான ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்த தீர்ப்பாயத்தின் மூலம் வசூல் செய்யப்படக்கூடிய தொகையை மட்டும் கூறி அதில் பெருமளவு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை மூடிமறைத்து பொது மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றனர்.

மத்திய அரசின் ஒப்புதல்

உண்மையை வெகுகாலம் மூடி வைக்க இயலாது என்பதற்கு ஏற்ப சில வாரங்களுக்கு முன் நிதியமைச்சர் ஊடகங்களின் வாயிலாக அறிவித்த நிவாரண அறிவிப்பின் ஒரு பகுதியாக இதுவரை ஐபிசி மூலம் எடுத்துக் கொள்ளப்பட்ட 221 வழக்குகளில் மொத்த வாராக்கடனான 4,13,000 கோடி ரூபாயில் 44% வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் மதிப்பு 1,84,000 கோடி ரூபாய் என்றும் அறிவித்தார்.  இதன் மூலம்  மீதமுள்ள 56%  அதாவது 2,29,000 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது

ஐபிசி சட்டத்தின் குளறுபடிகள்

மேலும் 22.05.2020 தேதியிட்ட பிசினஸ் லைன் பத்திரிக்கை செய்தியின்படி நிதி நிறுவனங்கள் 2020 மார்ச் மாத இறுதிவரை தீர்ப்பாயத்தின் முன் கொண்டு சென்ற 1604 தீர்க்கப்பட்ட வழக்குகளில் 221 வழக்குகளில் அதாவது 14 சதவீத வழக்குகளில் மட்டுமே கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறது. மேலும் 914 வழக்குகளில் (57%) நிறுவனங்களை கலைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. (இதன் மூலம் இந்நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் சொற்பமான பணம் கடன் கொடுத்த வங்கிகளுக்கு அளிக்கப்படும். இதனால் இந்த நிறுவனங்களில் வேலைபார்க்கும் பல்லாயிரம் தொழிலாளிகளின் வேலை செய்யும் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது). மீதமுள்ளவற்றில் 312 வழக்குகள் (19%) மேல்முறையீட்டிற்கு சென்றுள்ளன. 157 வழக்குகள் (10%) திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

 மேலும் பிப்ரவரி 29, 2020 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5.01 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனுடைய 13566 வழக்குகள் தீர்ப்பாயத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே திரும்பப் பெறப்பட்டுள்ளன என்ற இந்திய அரசின் அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகள் ஏன் திரும்பப் பெறப்பட்டன? அதில் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?  5.01 லட்சம் கோடி ரூபாய் வராக் கடனை வசூல் செய்ய வேறு என்ன வழிமுறைகளை அரசு செயல்படுத்தப் போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். மேலும் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் ”கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மேலும் ஒரு வருட காலத்திற்கு வாராக்கடன்கள் தொடர்பான புதிய திவால் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது. எனவே அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் ”ஐபிசி சட்டம் மிகவும் வலுவானது” என்ற ஆளும் கட்சியின் பிரச்சாரம் எவ்வளவு போலியானது என்பதை வெட்டவெளிச்சமாக அம்பலப்படுத்துகிறது. மேலும் கார்ப்பரேட்டுகளின் வராக்கடனை வசூலிக்க வலுவான சட்டம் வேண்டும் என்ற வங்கி ஊழியர் சங்கங்களின் நியாயமான போராட்டங்களை வலுப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

 2014 ம் ஆண்டில் பாஜக கூட்டணியின் அரசு அமைந்த போது பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு 2,16,000 கோடி ரூபாயாக இருந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இதன் அளவு பாய்ச்சல் வேகத்தில் நான்கு மடங்கு அதிகரித்து சுமார் 8,95,000 கோடி ரூபாயாக  மாறியது. அதன் பிறகு 2019 -ல் பல்வேறு தள்ளுபடிகளுக்கு பிறகு அந்த தொகை ரூபாய் 7,39,000 கோடி என்று மாறியுள்ளது. 2020 ம் ஆண்டிற்கான மொத்த வாராக்கடன் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. எனினும் கார்ப்பரேட் நிறுவன வராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் அணுகுமுறையை பார்க்கும் போது இந்த நிதியாண்டில் வங்கிகளின் ஒட்டு மொத்த வராக்கடன் தொகை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் செங்குத்தாக உயரக்கூடும் என்றே தெரிகிறது. 

 எனவே அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும், ஒன்றிணைந்து மத்திய அரசின் இந்த தவறான அணுகுமுறைக்கு எதிராக இயக்கம் நடத்துவதன் மூலம் நாட்டின் வங்கித்துறையையும், அதில் உள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொது மக்களின் சேமிப்பையும் காப்பாற்ற வேண்டும். 

 (பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வெளி வந்த கட்டுரையின் 
தமிழாக்கம் :க. சிவசங்கர், நெல்லை