tamilnadu

இஎஸ்ஐ திட்டத்தில் முதலாளிகளின் பங்களிப்பினைக் குறைப்பதா?

புதுதில்லி, ஜூன் 16- தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தில் (இஎஸ்ஐ) முதலாளிகள் செலுத்தவேண்டிய பங்குத்தொகையை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2018க்கு முன்பு இஎஸ்ஐ திட்டத்திற்கு  வேலையளிப்பவர்கள் 4.75 சதவீதமும், தொழிலாளர்கள் 1.75 சதவீதமும் பங்குத்தொகை செலுத்த வேண்டும் என்றிருந்தது. இது, 2018 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற 175ஆவது முத்தரப்பு மாநாட்டில் குறைக்கப்பட்டு, இஎஸ்ஐ திட்டத்திற்கு வேலையளிப்பவர்கள் சார்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் ஊதியத்தில் 4 சதவீதமாகவும் தொழிலாளர் தரப்பில் 1 சதவீதமாகவும் மொத்தத்தில் 5 சதவீதம் என்று ஒருமனதாக மாற்றியமைக்கப்பட்டது. இப்போது மோடி-2 அரசாங்கம் தானடித்த மூப்பாக, தொழிலாளர் தரப்பில் எவ்விதக் கலந்தாலோசனையுமின்றி, வேலையளிப்பவர்கள் அளிக்க வேண்டிய பங்குத்தொகையை 3.25 சதவீதம் என்றும், தொழிலாளர் தரப்பில் 0.75 சதவீதம் என்றும் மொத்தத்தில் 4 சதவீதம் என்றும் குறைத்துள்ளது. இது 2018 செப்டம்பரில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டின் முடிவினை முழுமையாக மீறிய செயலாகும். இவ்வாறு பங்குத்தொகையைக் குறைத்திருப்பதன்மூலம் வேலையளிப்பவர்களுக்கு சுமார் எட்டாயிரம் கோடி ரூபாயிலிருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் வரை ஆதாயம் கிடைத்திடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. முத்தரப்பு மாநாட்டின்போது இது குறித்து அரசு எதுவுமே கூறாமல் மறைத்துவிட்டது. இவ்வாறு நயவஞ்சகமான முறையில் அரசாங்கம் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது. இதனை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். (ந.நி.)