tamilnadu

img

ஒவ்வொரு அடியிலும் அடக்குமுறையை எதிர்கொண்ட முன்னோடிகள்- இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

இந்தியாவின் மகத்தான புரட்சிகர இயக்கத்தின் தலைவர் மாவீரன் பகத்சிங்கை குறிப்பிட வேண்டும். அவர் தனது கடைசி நாட்களில் கம்யூனிசத்தை நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகாக்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

ஆசியாவின் இதர பகுதிகளைப் போலவே இந்தியாவிற்கும் கம்யூனிச, சோசலிசச் சிந்தனைகள் என்பவை ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி பிரம்மாண்டமாக எழுந்து மாபெரும் புரட்சி நடத்தி மிகப்பிரம்மாண்டமான ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது தொடர்பான ஏராளமான செய்திகளும் தகவல்களும் கிடைக்கப்பெற்றதன் மூலமாகவே வந்தடைந்தன. அப்படி கிடைத்த தகவல்களில் பல, கம்யூனிசத்தைப் பற்றிய அவதூறு கருத்துக்களையும் திரிபுகளையும் கொண்டதாக இருந்த போதிலும் கூட, அப்படி வந்து சேர்ந்த செய்திகளின் மூலமாக கம்யூனிசம் என்ற சிந்தனை இந்தியாவில் பரவியது. மகத்தான தலைவர் மா சே துங்-கின் வார்த்தைகளில் சொல்வதானால், “புரட்சிகர ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்ட தீக்கணைகள் இந்தியாவிற்கு கம்யூனிசம் என்ற செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தது”. போல்ஷ்விக் ரஷ்யாவில் மக்கள் சமூகம் புரட்சிகரமான எழுச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் கதைகள், இந்தியாவில் காங்கிரஸ் தலைமையின் சமசரக் கொள்கைகளால் வெறுப்படைந்தும், விரக்தியடைந்தும் இருந்த காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் முன்பு இரண்டு மாற்றுப் பாதைகளை முன்வைத்தது: ஒன்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களது இந்திய ஏஜெண்டுகளுக்கு எதிராகவும், ஆயுதமேந்திய தனிமனித போராட்டமே தீர்வு என்பது; மற்றொன்று கம்யூனிசம்.
பகத்சிங்
இங்கே நாம், இந்தியாவின் மகத்தான புரட்சிகர இயக்கத்தின் தலைவர் மாவீரன் பகத்சிங்கை குறிப்பிட வேண்டும். அவர் தனது கடைசி நாட்களில் கம்யூனிசத்தை நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகாக்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இன்னும் பல போராளிகள் இந்த உலகையே குலுக்கிய ரஷ்யப் புரட்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். புரட்சியின் பூமிக்கு செல்ல வேண்டுமென்று பயணத்தைத் துவக்கினார்கள். பனி சூழ்ந்த இமயமலையையும், கடினமான சமவெளியையும் கடந்து ரஷ்யாவுக்குச் சென்று புரட்சியின் அடிப்படையை அறிந்துவர முயற்சித்தார்கள். இப்படியாக இந்திய மண்ணில் சோசலிசம், கம்யூனிசம் என்ற விதைகள் தூவப்பட்டன.
கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றம்
இந்தியாவில் சோசலிச இயக்கத்தின் உதயம் என்பது, 1920களுக்கு முன்பிருந்தே முறையாக வரிசைப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு இணையான வளர்ச்சிப்போக்குகள் நடந்தன. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உதயமானது. துவக்ககால கம்யூனிஸ்ட் குழுக்களும் உதயமாகின. இவை இரண்டும் எத்தகைய சூழலில் நடந்தது என்பது மிக முக்கியமானது. எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் எப்படியெல்லாம் தடைகளையும் துயரங்களையும் தாண்டி திட்டமிட்டப்பாதையில் நடைபோட்டார்களோ அதேபோலத்தான் இந்தியாவிலும் நடந்தது. இந்தத் தலைவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தலைமுறையினர், அவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும் சவால்களையும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்பதுதான் உண்மை. முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்டுகள். எப்படிப்பட்ட கொடிய நிலைமைகளை எதிர்கொண்டு, போராடி, இந்திய நாட்டில் ஒரு அணிதிரட்டப்பட்ட - ஒருங்கிணைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தை பின்னாட்களில் உருவாக்குவதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அந்தக் காலத்தில் செயல்பட்ட எந்தவொரு சோசலிஸ்ட்டும் மறந்துவிட முடியாது. துவக்கக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை இங்கே நான் விவரிப்பதன் காரணம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி செய்த அளப்பரிய பங்களிப்பினை மறுப்பது என்பதல்ல; மாறாக முன்னோடிகள் வகுத்துக்கொடுத்தப் பாதையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தனது பணிகளை முன்னெடுத்துச் சென்றது என்பதை விவரிக்கும் பொருட்டே. நமது முன்னோடிகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பாதிக்கப்படாமல் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது; அவர்கள் பல்வேறு குறைபாடுகளையும் பலவீனங்களையும் சரிசெய்துகொண்டே இயங்க வேண்டியிருந்தது; பிரதானமான பெரிய மாநிலங்களில் கிளைகளை உருவாக்கி அதன்மூலம் ஒரு அகில இந்திய கட்சியாக வளர்த்தெடுக்க முடியாத சூழல் என்பது இருந்தது. இந்த பலவீனங்களும் குறைபாடுகளும் இருந்த போதிலும், கம்யூனிஸ்ட் குழுக்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வந்தன; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பே இது நடந்து கொண்டிருந்தது; இந்த கம்யூனிஸ்ட் குழுக்களை இயக்கிய முன்னோடிகள்தான் இந்திய சோசலிஸ்ட் இயக்கத்தின் உண்மையான முன்னோடிகள்; இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான முன்னோடிகள். அவர்கள் தாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே மூன்று சதி வழக்குகள் அவர்கள் மீது பாய்ந்தன. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்ற முக்கியமான சதி வழக்குகள், சுமார் 10 ஆண்டு காலம், இந்திய மண்ணில் கம்யூனிசத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக ஆட்சியாளர்களின் ஒரு திட்டமிட்ட முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே நூற்றுக்கணக்கான உறுதிமிக்க தொழிற்சங்க வாதிகளும் முற்போக்கு சிந்தனை கொண்ட காங்கிரஸ்காரர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டார்கள். அவர்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலேனும் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் குழுவில் உறுப்பினராக இருந்துகொண்டிருந்தார்கள். அதன் விளைவாக அவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

;