tamilnadu

img

கொடூரமான வருங்காலத்தின் முன்னோட்டமான நூறுநாட்கள்

மோடி-2 அரசு தன்னுடைய 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது.  இது மிகவும் குறுகிய நாட்களே என்றபோதிலும், இந்த அரசின் திசைவழி  எப்படி இருக்கும் என்பதை, அதாவது கார்ப்பரேட் மூலதனம் மற்றும் இந்துத்துவா பிணைந்த ஒரு கூட்டுக்கலவையுடன் ஓர் எதேச்சதிகார ஆட்சியாக இருந்திடும் என்பதை, தெளிவாகவே வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த நூறு நாட்களில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை, நாடாளுமன்றம் சிறுமைப்படுத்தப்பட்டதை, நீதித்துறை உட்பட அனைத்து அரசமைப்புச் சட்ட அமைப்புகளும் சிதைக்கப்பட்டு வருவதை, எதிர்க்கட்சி மற்றும் தங்கள் கொள்கைகளுக்கு ஆட்சேபணை சொல்கிற அனைத்துத் தரப்பினர் மீதும் எதேச்சதிகாரமுறையில் தாக்குதல் தொடுக்கப்படுவதை  பார்த்தோம்.

ரப்பர் ஸ்டாம்ப்பாக...

ஜம்மு-காஷ்மீர் மாநிலம்  தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் சொற்புரட்டு மற்றும் சதி ஆகியவற்றின் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு அதன் சிறப்பு அந்தஸ்தைப் பறித்து, அம்மாநிலத்தையே சிதைத்திருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் மீதும் கூட்டாட்சித் தத்துவத்தின்மீதும் மிகப்பெரிய அளவில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு அங்கே வாழும் 80 லட்சம் மக்களுடன் ஒரு மாபெரும் சிறைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற கடுமையான நடவடிக்கைகள் இன்றளவும் தொடர்வதால் அம்மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன. மக்களவைத் தேர்தல் முடிந்தபின் கூடிய முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பல்வேறு சட்டமுன்வடிவுகள், நுணுகி ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலும், விவாதங்கள் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டதைப் பார்த்தோம். மோடி அரசின் நோக்கங்கள் மிகவும் தெளிவானவை. நாடாளுமன்றத்தை,  தங்கள் அரசின்  ரப்பர்ஸ்டாம்ப்பாகப் பயன்படுத்திடவே அது விரும்புகிறது.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளையும், நிறுவனங் களையும் சிதைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக் கின்றன. நீதித்துறையை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. நீதித்துறை நியமனங்களில் அரசாங்கம் எப்படியெல்லாம் தலையிடுகிறது என்பதற்கு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி அகில் குரேஷியை நியமித்திட கொலிஜியம் அளித்திட்ட பரிந்துரையை ஏற்க மறுத்திருப்பது சமீபத்திய எடுத்துக்காட்டாகும்.

தலைகீழாக்கப்படும் நீதிபரிபாலனமுறை

எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான முயற்சிகளுக்கு  மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அமலாக்கத்துறை யும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணியவைத்திட இவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிறுவனங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளைப் புலனாய்வு செய்வது கூர்மையான முறையில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு அச்சுறுத்தப் பட்டு, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பாஜகவிற்குத் தாவுவதற்குத் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை கள் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் முதலானவை, நாட்டின் கிரிமினல் நீதி பரிபாலன  அமைப்பு முறையே, இந்துத்துவா மதவெறிக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் விதத்தில் மிகவும் வேகமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.    பேலுகான் கொல்லப்பட்ட வழக்கில் எவரொருவரும் தண்டிக்கப்படவில்லை. கும்பல் குண்டர்களால் கொல்லப்பட்ட தப்ரேஷ் அன்சாரி வழக்கும் தற்போது நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டிருக்கின்றன. பாதிப்புக்கு உள்ளானவர்களே, குற்றங்களுக்குப் பொறுப்பு என்கிற முறையில் கிரிமினல் நீதி பரிபாலன அமைப்பு தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
 

இவை  அனைத்தும் நாட்டில் மிகவும் ஆழமானமுறை யில் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கின்றன.  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில் வெறும் 5 சதவீதமேயாகும். இது கடந்த ஆறாண்டுகளில் மிகமிகக் குறைவான அளவாகும். இந்தப் புள்ளிவிவரம்கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். கிராமப்புற விவசாய நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதன் விளைவாக, பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கியிருத்தல் ஆகி யவை தற்போதைய நெருக்கடிக்குக் காரணங்களாகும். வேலையிழப்புகள் லட்சக் கணக்கில் ஏற்பட்டிருப்பது நாட்டின் பல்வேறு தொழில் துறைகளையும் பொருளாதாரத்தையும் பாதித்துக் கொண்டிருக்கிறது.

மூர்க்கத்தனமான முயற்சிகள்

பொருளாதார மந்தம் தன் கோர முகத்தை இவ்வளவு மோசமானமுறையில் காட்டியபோதிலும், மோடி அரசோ பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அந்நிய கார்ப்ப ரேட்டுகளின் நலன்களைத் தூக்கிப்பிடிக்கும் விதத்திலான கொள்கைகளையே இன்னமும் விடாப்பிடியாகத் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருக்கிறது. 2019-20 மத்திய பட்ஜெட், அந்நிய மூலதனம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு, எண்ணற்ற சலுகைகளை அளித்திருக்கிறது. மேலும் அந்நிய நிதிமூலதனத்தின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து, அந்நிய முதலீட்டாளர்களின் மூலதன ஆதாயங்கள் மீது விதித்திருந்த மிகைவரியையும் (சர்சார்ஜையும்) விலக்கிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட மூர்க்கத்தனமான முறையில் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திடத் திட்டமிட்டிருக்கிறது.    இவ்வாறு தனியாரிடம் தாரை வார்ப்பதற் கான துறைகளில் ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, வங்கி மற்றும் கனிமவளத்துறைகளும் அடங்கும்.

கிராமப்புற மக்களின் தேவைகளை ஓரளவுக்கு ஈடுசெய்வதற்கு உதவிடும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான பொதுச் செலவினங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக,  அந்நிய மூலதனத்தை முகத்துதி செய்வதற்குத் தான் மோடி அரசு முனைப்பாக இருக்கிறது. நிலக்கரிச் சுரங்கத்துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு, மோடியின் “தேசிய” அரசு அனுமதி அளித்திருப்பதன் மூலம், நாட்டின் நிலக்கரி வளங்களை பன்னாட்டு அந்நிய நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்லவும், பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் நலிவடைந்திடவும் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

தேசிய ராணுவ அரசாக...

மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் திட்டமிட்டமுறையில் இறங்கியிருக்கிறது. சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகள் பலவற்றைப் பறித்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மோசமான ஒன்று, தற்போது நிதி ஆணையம், நாட்டின் ராணுவத்திற்கு ஆகும் செலவினங்களைக்கூட மத்திய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது குறித்துப் பரிசீலித்திட வேண்டும் என்று கேட்டிருப்பதாகும்.   இது அமல்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வரிவருவாயில் கணிசமான அளவிற்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்திலும், தேசியப் புலனாய்வு முகமை சம்பந்தமான சட்டத்திலும் கொண்டுவந்திருக்கின்ற திருத்தங்கள் இந்த அரசை, சேமநல அரசு என்ற நிலையிலிருந்து தடம் புரளச் செய்து, ஒரு  தேசிய ராணுவ அரசாக மாற்றியிருக்கின்றன. அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் மிக எளிதாக இந்தச் சட்டங்களின் வழியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அரசமைப்புச்சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கான கருத்தாக்கமே அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. மோடி-அமித் ஷா இரட்டையர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டினை நாடு முழுதுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக, இவர்கள் ஏற்கனவே ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்போர் அனைவர் குறித்தும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதற்காக அறிவிக்கை ஒன்றை வெளி யிட்டிருக்கிறார்கள். இது, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற் கான அடிப்படையாக மாறிடும். இது, நாட்டிற்குள் நுழைந்துள்ள “ஊடுருவலாளர்களை” (முஸ்லிம்கள் என்று  திருத்தி வாசித்துக் கொள்க) களையெடுக்கப் பயன்படுத்தப் படும். அதே சமயத்தில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவு ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. இது நிறைவேறிவிட்டால் நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள, புலம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்கள் அனைவருக்கும் குடியுரிமை அளிக்க முடியும்.   

இளைய பங்காளியாக...

இக்குறுகிய காலத்தில், மோடி அரசு, அமெரிக்காவின் இளைய பங்காளியாகத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் வேகமாக இறங்கி இருக்கிறது. இந்த அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை என்பதே, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்து வதற்கான முடிவுதான். இத்துடன் அமெரிக்காவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக் கின்றன. அமெரிக்காவுடனான அடிப்படைப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA-Basic Exchange and Cooperation Agreement) கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு, மோடி-2 அரசின் நூறு நாள் ஆட்சி என்பது இனிவருங்காலமும் எந்த அளவிற்குக் கொடூரமானதாக இருக்கும் என்பதற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது.

இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு முன்பாக, நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தையும், அரசமைப்புச்சட்ட விழுமியங்களையும் பாதுகாப்பதற் கான  பெருஞ்சுமையுடனான கடமைகள் காத்துக்கொண்டிரு க்கின்றன. அவர்கள், மக்களைத் தங்கள் வாழ்வாதாரங்கள், வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அணிதிரட்ட வேண்டியிருக்கிறது.  இக்கடமைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் மக்களை எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு விரிவான முறையில் அணிதிரட்டி ஒற்றுமைப்படுத்தி, போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். நாடும், நாட்டு மக்களும் எதிர்கொண்டிருக் கும் ஆழமான பிரச்சனைகளிலிருந்து அவர்களது கவனத்தைத் திசைதிருப்பும் விதத்தில், மோடி அரசு “தேசிய வாதம்” என்ற பெயரில்  கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவா பெரும்பான்மைவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்த வேண்டியிருக்கிறது.

செப்டம்பர் 11, 2019  தமிழில்: ச. வீரமணி
 

 

;