tamilnadu

img

இமாச்சலப்பிரதேச பெண் விவசாயிகளின் புதிய சாதனை முயற்சி

இமாச்சலப்பிரதேச மாநில பெண்விவசாயிகள் தங்களின் கடுமையான உழைப்பு காரணமாக மாநில அரசின் சார்பில் அதிக அளவு மானியத்துடன் கூடிய பட்டுப் புழு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பல தலித்பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் செயல்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றபெண்களுக்கு மாநில அரசின் சார்பில் 90 சதவீதம் மானியத்துடன் ரூபாய் 1.20 லட்சம்அளவிற்கு கூடங்களை கட்டி பட்டுப்புழு வளர்க்க உதவி வழங்கப்பட்டது.இத்திட்டத்தின் படி பெண்கள் முசுக்கொட்டை (மல்பெரி) செடிகள் வளர்க்கவும் மழைக் காலத்தில் ஊக்கம் வழங்கப் பட்டது. இதன் வாயிலாக சுமார் 300 முசுக்கொட்டைச் செடிகள் (மல்பெரி) வளர்க்கப்பட்டு பட்டுப் புழுவிற்கு தீவனமாக வழங்கப்பட்டது. இதனால் பெண் சாகுபடியாளர்கள் மல்பெரி இலையை ரூ.500 முதல்ரூபாய் 1000 வரை விற்பனை செய்யும் வாய்ப்பையும் பெற்றனர். இதன் வாயிலாக கிராமப்புற மகளிருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மேலும் அதிகளவு மானியம் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் பட்டுப் புழுவும் மிகவும் குறைந்த விலையில் மானியத்துடன் வழங்கப்படுவதால் பெண் விவசாயிகள் அதிக அளவு லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

மேலும் படுக்கை சுத்திகரிப்பு வலைகள், கிருமி நாசினிகள் போன்றவை இலவசமாக தரப்படுவதால் பெண் விவசாயிகளால் சரியான முறையில் தரமான முறையில் பட்டுப் புழுக்கள் உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் பெண் விவசாயிகள் அதிகம் பயன்பெறுகின்றனர். மேலும் நோய் தாக்குதலில் இருந்து தங்களது பட்டுப் புழுக்களையும் பாதுகாத்து கொள்கின்றனர்.இதுதவிர வீட்டுக்கு வீடு முகவர்கள் வாயிலாக பட்டுப் புழுக்களின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, அறைகளில் பய
னாளிகளின் வீடுகளில் துப்புரவுப் பணிகள் முறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உள்ள பெண் விவசாயிகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, பல விழிப்புணர்வு முகாம்கள் மல்பெரி சாகுபடியை மேற்கொள்ள ஊக்கம் வழங்கப் படுகிறது.தற்போது பட்டுப் புழு கூடுகள் (Cocoons) முறையாக மூன்று ரகங்களாகதரம் பிரிக்கப்படுகிறது. கடந்த வருடம் நன்றாக காய்ந்த கூடுகள் ஒரு கிலோவிற்கு ரூ.850 வரை சராசரி விலை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்தது. இதன் வாயிலாக விவசாயிகள் வருடத்திற்கு 2-2,5 லட்சம் வரை வருடத்திற்கு வருமானம்பெறுகின்றனர். இதனால் பெண் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்ந்து வருகிறது. தற்போது அதிக அளவுமானியத்துடன் கூடிய பட்டுப் புழு வளர்ப்புதிட்டம் நாளுக்கு நாள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 2012 - 2013 காலகட்டத்தில் சோலன்மாவட்டத்தில் 37 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். தற்போது 585 பேர் இதில் கலந்து கொண்டு வருமானம் ஈட்டிவருகின்றனர்.

மேலும் மாநில அளவில் சுமார் 10,840 விவசாயிகள் (அதில் பெரும்பாலும் பெண்விவசாயிகள்) கலந்து கொண்டு இத் திட்டங்களில் மிகவும் குறைந்த முதலீட்டில் ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். முன்பு பாரம்பரியமாக மல்பெரிமரங்கள் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் 10 மாவட்டங்களில் பெருகி விவசாயிகளுக்கு அதிக அளவுவருமானம் மற்றும் லாபம் பெற்றுத் தருகிறது. இவ்வாறு சிறு மற்றும் குறு பெண்விவசாயிகள் குறிப்பாக தலித் விவசாயிகள் வாழ்வில் ஒரு பொருளாதார உயர்வு மற்றும் அதிகாரமயமாக்கும் முயற்சிகள் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பெரியவெற்றி பெற்றுள்ளது என்பது பாராட்டுக்குரிய சாதனையாகும்.

====பேரா. தி.ராஜ்பிரவின்====

;