tamilnadu

img

மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில் புதிய தொடக்கம்...

மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் சுழன்று கொண்டிருந்த விவாதங்களுக்கும் ஆதங்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நேர்மறையாக  சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் தொடக்கமாக இத்தீர்ப்பு தனித்துவம் பெறுகிறது.  இந்திய சமூகநீதி வரலாற்றுப் புத்தகத்தில்  இத்தீர்ப்புக்காக சில பக்கங்கள் ஒதுக்கப்படும்.

தமிழக கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துகல்வி நிறுவனங்களிலும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பட்டியலினத்தினர், பழங்குடிகள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.1950 இல் செண்பகம் துரைசாமி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றமும்  புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதற்கு முந்தைய இடஒதுக்கீட்டு  அரசாணை  செல்லாது என்று அறிவித்த போது தமிழகத்தில்  பெரியார் தலைமையில் நடைபெற்ற  போராட்டங்களால் ஜவகர்லால் நேரு அரசு  அரசியலமைப்புச் சட்டத்தை  முதல் முறையாகத் திருத்தியது.   சட்டக்கூறு15 ல் புதிய உட்பிரிவு (4) சேர்க்கப்பட்டு  பட்டியல்சாதி, பழங்குடிகள், சமூக நிலை மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம்  அரசுக்குஅளிக்கப்பட்டது.  அதன் பிறகு தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு பகிர்வு சதவீதம் பலமுறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 69 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது. 

மண்டல் ஆணைய பரிந்துரையின்படி 1990 இல்வி.பி.சிங் அரசு வழங்கிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 27 சதவீத  இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் 1992ல் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அப்போதும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று1993 இல் “தமிழ்நாடு 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம்”ஐ இயற்றிகுடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றது. அரசியலமைப்புச்சட்டக்கூறு 31- பி இன்படி  அட்டவணை 9 இல் இணைக்கப்பட்டது. அதனால் நீதிமன்றத் தலையீட்டிலிருந்தும் காப்பாற்றப்பட்டது.  அச்சட்டப்படி தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசுப் பணிகளிலும் பட்டியலினம் - 18 சதவீதம்;  பழங்குடிகள் - 1 சதவீதம்;  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  -  50 சதவீதம்முறைமையில்  மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.  2016 இல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகும்கூட இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி இந்த இடஒதுக்கீடு முறைமை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தொடருகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநில அரசும் தத்தம் இடஒதுக்கீட்டு தத்துவத்தை பின்பற்றுகின்றன.

மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு
அரசியலமைப்புச் சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருந்த போதிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகமத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. 1990 இல் வி.பி.சிங்அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இடஒதுக்கீடு அளித்தது. கல்வியில் அளிக்கவில்லை. அதற்கு மேலும் 16 ஆண்டுகள் கடந்தது.  
2005-இல் உச்சநீதிமன்றம் இனாம்தார் வழக்கில் அரசியலமைப்புச் சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்களை இடஒதுக்கீடு அளிக்கச் சொல்வதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது.   இதனால் ஏற்பட்ட பின்னடைவைச் சரிப்படுத்த  93 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 2005- இன் மூலம் பிரிவு 15-இல் புதிதாக உட்பிரிவு ( 5)இணைக்கப்பட்டு   அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தினர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு அளிக்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு இடஒதுக்கீடு நிர்ணயிக்கும் வகையில்  “மத்திய கல்விநிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம் 2006 (Central Educational Institutions (Reservation in Ad
mission) Act, 2006 என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அது அரசு மற்றும் அரசு நிதியுதவி  பெறும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது.   அதற்கு தனியான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை.

அப்போது  முற்பட்ட வகுப்பின மாணவர்களுக்கு  கிடைத்துவந்த பொதுப்பிரிவு இடங்கள் குறையாதபடி   ஒவ்வொரு நிறுவனங்களிலும் இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.  இருந்தாலும் இந்த 2006  சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.அசோக்குமார் தாக்குர் வழக்கில் முதலில் இடைக்கால தடை விதித்த போதும் இறுதியில் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு10.04.2008 அன்று 2006 சட்டம் செல்லுமென ஒருமனதாகதீர்ப்பு அளித்தது. மேலும் 2006  சட்டத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தொடுக்கப்பட்ட அபயநாத் வழக்கில் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகுதான் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து மத்திய  கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-இல் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்றபுதிய வகைமையை முதல் முதலாக மோடி அரசு 124 ஆவதுஅரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தியது.

வேறு எந்த இடஒதுக்கீட்டு பிரிவிலும் வராத பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவினருக்கு மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத  இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் அளிக்கும்வகையில்    சட்டப் பிரிவுகள்  15 மற்றும் 16  இரண்டிலும்  புதியஉட்பிரிவுகள் (6)  புகுத்தப்பட்டது.  ஆக தற்போது மத்தியமருத்துவக் கல்லூரிகளில் உட்பட மத்திய கல்வி நிறுவனங்களில்  பட்டியலினத்தினர் - 15,  பழங்குடிகள் -7.5,  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 27,  பொருளாதாரத்தில் பின் தங்கியவர் - 10 என ஆக மொத்தம் 59.5 சதமான இடஒதுக்கீடு அமலாகி வருகிறது.  

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்
மருத்துவக் கல்லூரிகள் குறைவாக உள்ள மாநிலம் மற்றும் பகுதிகளிலுள்ள மாணவர்களுக்கும் மருத்துவம் கற்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக 1984-ஆம்ஆண்டு பிரதீப் ஜெயின் வழக்கில் பி.என்.பகவதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பின்படிதான் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறை உருவாக்கப்பட்டது.  தினேஷ்குமார் வழக்கிலும் 1986-இல் உச்சநீதிமன்றம் இதனை மீண்டும் உறுதிப்படுத்தியது.  ஒவ்வொரு மாநிலமும்தங்கள் மாநில மருத்துவக் கல்லூரி இடங்களில் குறிப்பிட்ட சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கவேண்டும். இதற்குத் தனியாக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.   தொடக்கத்தில் ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு 30 சதவீத  இடங்களை ஒப்படைக்க வேண்டுமெனத்  தீர்மானிக்கப்பட்டு தற்போது ஆண்டுதோறும் 15 சதவீத  இடங்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவீத இடங்கள் ஒப்படைவு செய்யப்படுகிறது.     
மாநில  மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில்  அந்தந்த மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் மத்திய  மருத்துவக் கல்லூரிகளில் 2006  இட ஒதுக்கீட்டு  சட்டத்தின்படியும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.  ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு அல்லது மாநில அரசுகளின்  எந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையும் அமல்படுத்தாமல் இந்தியமருத்துவக் கவுன்சில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுஇடங்கள் என்பது தனிக் கல்லூரி அல்ல. அனைத்து மாநிலங்களிலிருந்தும்  ஒப்படைக்கப்பட்ட 15 மற்றும் 50 சதவீத இடங்களின் தொகுப்புதான். மாணவர்களை மாநில அரசு தேர்வு செய்யாமல் மருத்துவக் கவுன்சில் ஒரு அகில இந்திய நுழைவுத் தேர்வின் மூலம் அகில இந்திய அளவில் தேர்வு செய்கிறது. இதுதான் வேறுபாடு. 

தற்போது நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு தனித்த நுழைவுத் தேர்வும் இல்லை. நீட் தேர்வில் தேர்வானவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு சேர்க்கைக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.  இந்தியாவில் எப்பகுதியில் குடியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் தரப்பட்டியல் தகுதியின்படி தேர்வு செய்யப்படுவார்கள்.  அவ்வளவுதான்.  ஏழு கடல் ஏழு மலை தாண்டி அடர்ந்த காட்டுக்குள்இருளடைந்த குகைக்குள் அமைக்கப்பட்டதல்ல அகில இந்தியஒதுக்கீட்டு இடங்கள் என்பது. இதற்காகத் தேர்வாகும் மாணவர்கள் எவ்வித தனித்த கல்லூரிகளில் சேர்க்கப்படுவதில்லை. எந்த மாநிலம் இடங்களை ஒப்படைத்ததோ அந்த மாநிலத்திலுள்ள மாநில மருத்துவக் கல்லூரிகளில்தான் சேர்க்கப்படுகிறார்கள். பிறகு ஏன் மருத்துவக் கவுன்சில் இடஒதுக்கீட்டை மறுக்கிறது?

மருத்துவக் கவுன்சில் விதிகளும் மறுக்கப்படும் இடஒதுக்கீடும் 
இளநிலை மருத்துவப்  படிப்புச் சேர்க்கைக்கான விதிமுறைகள் 1997 ஆண்டும் மருத்துவ  மேற்படிப்புச் சேர்க்கைக்கான விதிமுறைகள் 2000 ஆண்டும் உருவாக்கப்பட்டது.  இந்த விதிமுறைகளின்படி ஒரு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள மாநிலத்தில் அமலிலுள்ள சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகள்  5(4),  9(7) விதிகளின் படியும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அப்படியான இடஒதுக்கீடு வழங்கப்படாமல் சமூக நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. 2020 மே 9 அன்று  மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.  அதில் தமிழ்நாட்டில் உள்ளஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை. 2019 மருத்துவ மேற்படிப்புச் சேர்க்கையில் மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாததால் 1973 ஓபிசி மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அனைத்து மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக 8137 இடங்கள் அளித்துள்ளன. இதில் மத்திய சட்டப்படி 27 சதவீத இடஒதுக்கீடு கணக்கிட்டால் ஓபிசி மாணவர்களுக்கு 2197 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிடைத்தது வெறும் 223 இடங்கள் மட்டுமே. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் அளித்த இடங்கள் 866 ஆகும். இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஓபிசி மாணவர்களுக்கு தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டப்படி 50 சதவீத இடஒதுக்கீடான 433 இடங்கள் கிடைக்கவில்லை. மருத்துவ மேற்படிப்பில் நடப்பாண்டில் 425ஓபிசி/எம்பிசி மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளார்கள்.  

சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள 2018-2019 ஆண்டறிக்கையை ஆய்வு செய்தால்பல்வேறு மருத்துவப் படிப்புகளில் 2018-19 கல்வியாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எப்படி ஓபிசி மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். அந்தஆண்டில் இளநிலை மருத்துவம், இளநிலை பல் மருத்துவம்,    மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு ஆகியவைகளில் முறையே 4061,  329, 7972, 233 என மொத்தம் 12595 இடங்கள் உள்ளன. இதில் ஓபிசி மாணவர்களுக்குக்  கிடைத்தது முறையே 66, 7, 220, 6 என மொத்தம் 299 இடங்கள் மட்டுமே. மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருந்தால் ஓபிசி மாணவர்களுக்கு மொத்தமாக 3400 இடங்கள் கிடைத்திருக்கும். ஆனால் வெறும் 299 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. 3000 க்கும் மேற்பட்ட ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஒப்படைத்த இடங்களில் 50 சதவீதஇடஒதுக்கீடும் கிடைக்கவில்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே நிலைதான். 

ஒளியேற்றிய  தமிழக அரசியல் கட்சிகள்
சத்தமில்லாமல் அரங்கேறிவந்த இந்தச் சமூக அநீதியை எதிர்த்து தமிழக சமூகநீதி வரலாற்று விழுமியங்களின் தொடர்ச்சியாக தமிழக அரசும் தி.மு.க, சிபிஎம், சிபிஐ, திக,மதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் தனித்தனியாகஉச்சநீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்தன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் அளித்த இடங்களில் தமிழகச் சட்டப்படி ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரினர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சி இந்தச் சட்டப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதில் எவ்விதஆச்சரியமும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி கலந்துகொண்டாலும் 27 சதவீத இடஒதுக்கீடு போதும் என்ற வேறுபட்ட வாதத்தை முன்வைத்தது தனது தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது. 2006 சட்டப்படி உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசிபிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சலோனி குமாரி வழக்காகும். இதனைக் காரணம்காட்டி இந்திய மருத்துவக் கவுன்சில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீட்டை நிராகரித்தது. ஆனால் இப்பிரச்சனைக்கும் சலோனி குமாரி வழக்கிற்கும் தொடர்பில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை 1984-இல் உச்சநீதிமன்றம் உருவாக்கியதால் உச்சநீதிமன்றமே இடஒதுக்கீட்டு முறையையும் முடிவு செய்யவேண்டுமென்ற  மருத்துவக் கவுன்சில் முன் வைத்த வாதத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.  

மத்திய மருத்துவக் கல்லூரிகளில் மத்தியச் சட்டப்படி ஓபிசிமாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்போது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தடையில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின்படி மூவர்குழு அகிலஇந்திய ஒதுக்கீட்டில் தமிழக இடங்களுக்கு ஓபிசி  இடஒதுக்கீட்டை விரைவில் முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு தமிழக இடங்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்போது  மற்ற மாநில இடங்களுக்கும் மறுக்க இயலாத நிலை ஏற்படும். இயல்பாக விரிந்து பரவும். தமிழக அரசியல் கட்சிகளின் சட்டப்போராட்டத்தால் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநில ஓபிசி மாணவர்களின் மருத்துவக் கனவில் விளக்கேற்றுகிற வரலாறு நிகழும்.

;