tamilnadu

img

வேளாண் நிலம் : விவசாயிகளுக்கு உதவும் புதிய விரைவுத் தகவல் குறியீடு தொழில்நுட்பம்

கடந்த சில ஆண்டுகளாக வேளாண் மற்றும் தோட்டக் கலை துறைகளில் அதிக அளவு தகவல் தொழில்நுட்பம் பயன்பாடு பெருகி வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள், விவசாய பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள், பண்ணை கருவிகள் பயன்பாடு மற்றும் வாடகைக்கு கிடைக்கும் இடங்கள் மற்றும் வாடகை விபரங்கள், வானிலை தகவல்கள், வேளாண் சந்தை விலை நிலவரங்கள் போன்றவை இணையதளங்கள், கைபேசி செயலிகள் வாயிலாக துரிதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்வாயிலாக தமிழகத்தில் பிற மாநிலங்களிலும் முன்னோடி விவசாயிகள், விவசாயக் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்றவை அதிக பயன்பெற்று வருகின்றன. இத்தகைய நடைமுறை சூழலில் விவசாயிகளுக்கு மேலும் டிஜிட்டல் முறையில் உதவி செய்யும் நோக்கில் புதியதாக விரைவுத் தகவல் குறியீடு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் டிஜிட்டல் இந்தியா செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைக்கு வந்து விவசாயிகளுக்கு ஒரு நல்ல உதவிகரமாக உள்ளது.

விரைவுத் தகவல் குறியீடு தொழில்நுட்பம்
தற்போது வேளாண் மற்றும் கிராமப்புறச் சந்தைகளில் விவசாயிகள் பல செடிகளின் நாற்றுகள், கன்றுகள் வாங்கி பயன்படுத்துவது பல காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் சில நேரங்களில் விவசாயிகள் பல முகவர்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் போது நல்ல விலை கொடுத்தும் தரமில்லாத கன்றுகளை வாங்கி ஏமாறும் சூழல் நடைமுறையில் உள்ளது. பல உற்பத்தியாளர்களிடம் பெற்று சில்லரை கடைகளில் செடி விற்பனை செய்யும் போதும் இத்தகைய தவறுகள் நடைமுறையில் ஏற்படுகிறது. பல செடிக் கன்றுகள் நீண்டகால தோட்டக் கலைப் பயிர்கள் பல ஆண்டுகள் கழித்து உற்பத்திக்கு அல்லது விளைச்சலுக்கு வரும் போது தான் விவசாயிகளுக்கு தெரியும். இதனால் கடுமையான உற்பத்தி இழப்புகள், கால விரயம் மற்றும் பொருளாதார இழப்புகள் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இத்தகைய நடைமுறைச் சூழலுக்கு சிறந்த தீர்வாக விரைவுத் தகவல் குறியீடு தொழில்நுட்பம் உள்ளது. 

மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் காயங்குளம் வட்டார அலுவலகத்தில் விற்பனை செய்யப்படும் தென்னை கன்றுகளில் விரைவுத் தகவல் குறியீடு தொழில்நுட்ப விலைப் பட்டியல் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக இளம் கன்றுகளை வாங்குபவர்கள் இந்த விலைப் பட்டியலில் உள்ள க்யூ ஆர் குறியீட்டை தங்களின் கைபேசி வாயிலாக நுட்பமாக சோதித்து பார்க்கும் போது அவர்களுக்கு சில நிமிடங்களில் அனைத்து தகவல்கள் விற்பனை உற்பத்தி பற்றிய தகவல்களும் கிடைத்துவிடும். இதன் வாயிலாக தென்னை கன்றுகளை வாங்கும் விவசாயிகள் அவற்றின் தரத்தை எளிதாக சோதித்து அறிந்து கொள்ள முடியும். இதில் ரகங்கள், அவற்றின் தோற்றம் குறித்த தகவல்களையும் பெற முடியும். 
மேலும் ஒவ்வொரு விரைவுக் குறியீடும் கடவுச் சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால், விலைப் பட்டியலை மாற்றவோ அல்லது போலியாகவோ தயாரிக்க முடியாது. தற்போது சுமார் 25 ஆயிரம் தென்னை கன்றுகள் இப்புதிய முறை குறியீடு கொண்டு வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய தொழில்நுட்பத்தை பல நீண்டநாள் பயிர்கள் விற்பனையிலும் ஈடுபடுத்தும் முயற்சிகளை விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வெகுவிரைவில் இப்புதிய தொழில்நுட்பம் ஒட்டு முறை செடிகள், திசு வளர்ப்பு செடிகள், தோட்டக் கலைப் பயிர்கள், பழ மரங்கள் மற்றும் பல வணிகப் பயிர்கள், கன்றுகள் விற்பனையில் பயன்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் வாயிலாக தரமான கன்றுகளை நமது விவசாயிகளின் உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் சிறப்பாக நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும், இதன் வாயிலாக பல மோசடிகள், தவறுகள் திருத்தப்பட்டு விவசாயிகளுக்கு தரமான கன்றுகள் கிடைப்பதன் வாயிலாக நமது வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்கள் உற்பத்தியையும் எளிதாக பெருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

====பேரா. தி.ராஜ்பிரவின்====

;