tamilnadu

img

வேளாண் நிலம் : கேரள மாநில பள்ளிக் கல்வியில் புதிய வேளாண் சார்ந்த முயற்சிகள்

கடந்த சில வருடங்களாக கேரள மாநில பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல புதிய வேளாண் சார்ந்த முயற்சிகள் பள்ளி மாணவ - மாணவிகளின் பங்களிப்புடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதிய உணவு திட்டத்தின் (Noon Meal Scheme Programme) கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள காலி நிலங்களில் மாநில வேளாண் துறையின் பங்களிப்புடன் தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு, மதிய உணவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்து தேசத்திற்கே மதிய உணவு திட்டத்திற்கு ஒரு முன்மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கி வழிகாட்டி வருகிறது. இதனொரு தொடர்ச்சியாக தற்போது அட்டிங்கல் நகராட்சியில் உள்ள பெருவாரியான பள்ளிகளில் இயற்கை வேளாண் பணிகள் துவங்கப்பட்டு நெல் மற்றும் காய்கறிகள் வளர்க்கப்பட்டு மதிய உணவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் பள்ளிகளில் உள்ள மாணவ காவல் அணிகள் வாயிலாக பள்ளியின் அருகில் உள்ள குளங்களில் மீன் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி வளாகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குளங்களில் சுமார் 1000 மீன் குஞ்சுகள் விடப்பட்டு அட்டிங்கல் நகராட்சியின் உதவி மற்றும் துணையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ரோஹீ, கட்லா, புல் கொண்டை மீன் போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிக்கு அருகில் 200 மீட்டர் தொலைவில் உள்ள குளங்கள் தத்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு மீன் வளர்ப்பு பணிகள் வெற்றிகரமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய மீன் வளர்ப்பு முயற்சிகள் வாயிலாக கழிவுகள் மறு சுழற்சி ஏற்படுவதுடன், அவை மீன்களுக்கு சிறந்த உணவாகவும் உள்ளது. மேலும் பஞ்சதுரத்து திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவர்களை கொண்டு குளங்களின் ஓரங்களில் மூலிகை செடிகளை வளர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள கோயில் குளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு மாணவர்களின் மதிய உணவு தேவையை ஊட்டச்சத்துடன் நிறைவு செய்வதுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கோயில் குளங்களின் பராமரிப்பு மற்றும் தொடர் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணை செய்கிறது.

இத்திட்டத்தை முறையாக அதிகாரப் பூர்வமாக அட்டிங்கல் நகராட்சியின் தலைவர் எம்.பிரதீப் துவக்கி வைத்தார். இவ்வாறு பள்ளி மாணவர்களை கொண்டு பள்ளிக்கு அருகில் உள்ள குளங்களில் மீன் வளர்ப்பு மற்றும் மூலிகை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு, முறையே சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபட செய்வதும், இதனை மதிய உணவு திட்டத்தில் பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்வது கேரள மாநிலத்தின் முன்மாதிரி பள்ளிக் கல்வி திட்டமாக உருவாக்கப்பட்டு, நமது நாட்டிற்கே வழிகாட்டியாக உள்ளது. இத்தகைய முன்னோடி பள்ளிக் கல்வி முயற்சிகள் தேசிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் போது நமது நாட்டில் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் நமது ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனைகளுக்கு, சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

===பேரா. தி.ராஜ்பிரவின்===
;