‘ஆசியான்’ அமைப்பில் புருனே, கம்போடியா, மலேசியா, லாவோஸ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய பத்து நாடுகள் உள்ளன. இந்த ஆசியான் அமைப்பு நாடுகளுடன் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் சேர்ந்து 16 நாடுகளுக்குள் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (RCEP) Regional Comprehensive Economic Partnership ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இது ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும்.
கூட்டு ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால் 16 நாடுகளுக்குள் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவது. அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தங்குதடையின்றி மற்ற நாடுகளுக்குள் கொண்டு சென்று அங்குள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்வது. இந்த ஒப்பந்தம் குறித்து கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கம்போடியாவில் நடந்த மாநாடு முதல், 16 நாடுகளுக்குள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. 2019 நவம்பர் 4 அன்று தாய்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கையெழுத்திட இருந்தார். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கடைசி நிமிடத்தில் அவர் கையெழுத்திடவில்லை. அதற்கான காரணம் என்னவெனில் “அனைத்து இந்தியர்களும் பெறக்கூடிய நலன்களை, இந்த கூட்டு ஒப்பந்தத்தோடு நான் அளவிடும் போது எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே காந்திஜியின் வார்த்தையும், எனது சொந்த மனச்சாட்சியும் என்னை இந்த கூட்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கவில்லை” என்று ஒரு மெகா நாடகத்தை பாங்காக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி அரங்கேற்றிவிட்டு, நாடு திரும்பினார்.
பாதிப்புகள்
இந்த தடையற்ற கூட்டு ஒப்பந்தத்தினால் 16 நாடுகளிலிருந்தும் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்கள் எல்லா நாட்டு சந்தைகளிலும் தங்குதடையின்றி கிடைக்கும். உதாரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலிருந்து பால் இறக்குமதி செய்யப்பட்டால் இந்தியாவில் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் பால் தொழிலை நம்பி 10 கோடி விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களுக்கு பால் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. தற்போது நடைமுறையில் உள்ள பால் மற்றும் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரி 64 சதத்தை இந்தியா திரும்பப் பெற ஒப்புக் கொண்டால் உள்நாட்டு சந்தையில் பால் விலை வீழ்ச்சியடையும். இது பால் விவசாயிகளின் நலன்களை பாதிக்கும். காய்கறி, தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டால் இந்திய வேளாண்மை தொழில் கடுமையாக பாதிக்கப்படும். இந்திய விவசாயிகள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் தற்போது ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். கட்டுப்படியான விலை இல்லை, கடன் வசதி இல்லை, இடுபொருட்கள் மற்றும் விதையின் விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் 85 சதவீத விவசாய சமூகத்தில் பேரழிவை தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழக அரசின் சாகுபடி ஒப்பந்த பண்ணையம்
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் 2019 என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி சமீபத்தில் ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதுபோன்ற சட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை என்று சுய தம்பட்டம் வேறு அடித்து வருகிறார்கள். அதாவது புதிய சட்டத்தின் படி கொள்முதலாளர்கள் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும் போது அன்றைய தினத்தின் விலையையே பொருள்களை உற்பத்தி செய்து கொடுக்கும் போது வழங்கிட பாதுகாப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளர் அந்த பகுதியைச் சேர்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ஒப்பந்த பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்த அலுவலர் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். எனவே, இச்சட்டம் தமிழக விவசாயிகளுக்கு உரிய முறையில் விலை கிடைக்க வழிவகை செய்கிறது என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.
விவசாயிக்கு உதவாத சட்டம்
வேளாண் பொருட்களுக்கானவிலையை விவசாயிகளும், நிறுவனமும் அல்லது வர்த்தகர்கள் ஏற்படுத்தி கொள்வார்கள் என்று சட்டம் குறிப்பிடுகிறது. விவசாய உற்பத்திக்கான விலையை அரசு தீர்மானிப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இச்சட்டம் வழிவகுக்கிறது. உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதம் விலை உயர்ந்து தீர்மானிக்க வேண்டுமென்கிற சுவாமிநாதன் குழு பரிந்துரை இனி ஏட்டில் மட்டும் இருக்கும். கம்பெனிகள் தங்களுக்கு லாபம் வரக்கூடிய வகையில் தான் விலையை தீர்மானிப்பார்களே தவிர விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க இந்த சட்டம் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. மாறாக பெரும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு பயன்தரவே இச்சட்டம் வழிவகுக்கிறது.
குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிப்பது; கொள்முதல் உத்தரவாதம், அரசு மானியம், விவசாய கடன் ஆகிய பொறுப்புகளிலிருந்து அரசு முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ளும் உள்நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. கம்பெனிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளை வற்புறுத்துவார்கள். இதனால் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கோ அல்லது மக்களின் அத்தியாவசியமான உணவு தானிய உற்பத்தி செய்வதிலோ பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நிலம் வைத்திருக்கும் முறையை பார்த்தால் குறைந்தது அரை ஏக்கர் முதல் 1 ஏக்கர், 2 ஏக்கர், 3 ஏக்கர் என்று வைத்திருப்பவர்கள் தான் அதிகம் பேர். இவர்களோடு கம்பெனிகள் அல்லது ஒப்பந்த நிறுவனம் எப்படி ஒப்பந்தம் செய்யும் என்பதற்கான விபரம் இல்லை. தமிழகத்தில் கரும்பு, கண்வலிகிழங்கு, சீனியாஅவரை, நித்தியகல்யாணி, நிலஆவரை, கறிக்கோழி, ஈமுகோழி மற்றும் மூலிகைப் பயிர்கள் ஒப்பந்த சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்த சாகுபடியில் கரும்பில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. பல விவசாயிகள் கரும்பு பயிரிடுவதையே நிறுத்திவிட்டார்கள். மற்ற பயிர்களை விவசாயிகள் பெரிய அளவில் இப்போது பயிரிடுவதில்லை. கறிக்கோழியில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஈமு கோழி பண்ணைகள் மின்னல் போல மறைந்து விட்டன.
தமிழகத்தில் மானாவாரி, பயிர்களான உளுந்து, பாசி பயிறுவகைகள், கம்பு, சோளம், எள், மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடும் விவசாயிகளிடம் ஒப்பந்த சாகுபடி எவ்வாறு செய்யப் போகிறது என்பது பற்றி எதுவும் இல்லை. நெல், வாழை உள்ளிட்ட பாசன விவசாயிகளிடம் எவ்வாறு ஒப்பந்த சாகுபடி செய்யப்போகிறது என்ற விபரம் எதுவும் இல்லை.
மத்திய அரசின் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமும் மாநில அரசின் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டமும் விவசாயிகளையும், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதில் எள்முனை அளவிலும் சந்தேகம் இல்லை. இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய பாதிப்புக்கு மக்களை கொண்டு செல்லும் என்பது பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை. எனவே அதன் பாதிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நம் முன் உள்ளது. அவ்வாறு கொண்டு செல்லும் போது விவசாயிகள் பெரிய அளவில் திரள்வதற்கான வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகளை ஒன்றுதிரட்டி மோடி, எடப்பாடி ஆகியோரது அரசுகளின் விவசாய விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
கட்டுரையாளர் : மாநிலப் பொருளாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்