tamilnadu

மக்காச்சோள இழப்பீடு! எடப்பாடி அரசின் ஏமாற்று வேலை

தமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருப்பூர், தர்மபுரி, விழுப்புரம், அரியலூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழு

வால் (ஆர்மிவோர்ம்) மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் ஏக்கர் சேதமடைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக 1 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோள விவசாயம் செய்த விவசாயிகள் மானாவாரி பகுதியில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும் இறவை பாசனத்தில் ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் வரையும் செலவு செய்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கிட வேண்டும். பூச்சிகளை உற்பத்தி செய்யும் விதைகளை வழங்கிய அமெரிக்க கம்பெனிகளான மன்சான்டோ உள்ளிட்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமான விதைகளை விற்பனை செய்ததற்கு அனுமதி வழங்கிய தமிழக வேளாண்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதின் விளைவாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அவர்கள் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள மானாவாரி பயிருக்கு ஏக்கர் ஒன்றிற்கு 2964 ரூபாய், இறவை பாசன மக்காச்சோளத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு 5400 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.மக்காச்சோளம் பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுக்கும் பணிகள் செய்தனர். ஆனால் கணக்கெடுத்த நிலையிலே உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று வரை இழப்பீடு கிடைக்கவில்லை. விவசாயிகளின் வாக்குகளை பெறுவதற்காக தமிழக அரசு வெற்று அறிவிப்பு கொடுத்துள்ளதோ என்று ஐயம் விவசாயிகளுக்கு எழுகிறது. தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டை உடனே வழங்கிட வேண்டும். போலியான அறிவிப்புகளை கொடுத்து மக்களை ஏமாற்ற எடப்பாடி அரசு நினைக்குமேயானால் விவசாயிகள் நல்ல பதிலடியை கொடுக்க ஒன்று திரள வேண்டும்.

- கே.பி.பெருமாள்

;