tamilnadu

img

இடஒதுக்கீடு உரிமை காக்க போராடுவோம்!- எஸ்.பாலா

சுதந்திர இந்தியாவில் காகா கலேல்கரின் தலைமையில் 1953 ஆம் ஆண்டு  பிற்படுத்தப்பட்டவர்கள் ஆணையம் என்பது  உருவாக்கப்பட்டது இது பிற்படுத்தப்பட்டோர் என்ற வரையறைக்குள் பெண்களையும் கொண்டுவந்து 70 சதவீதம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.பிற்படுத்தப்பட்டவர்கள் தெளிவான முறையில் அடையாளம் காண தவறிவிட்டது என பரிந்துரையை நிராகரித்தது. மண்டல் கமிஷன் அறிக்கை 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசாங்கம் பிந்தேஸ்வர்  ஸ்ரீபிரசாத் மண்டல் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. மக்களவை உறுப்பினராக இருந்த மண்டல் இந்திய நாடு முழுவதும் அன்றைக்கிருந்த 406 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு சென்று விரிவான ஆய்வுகளை நடத்தினார் . அவர் ஆய்வுக்காக 11 காரணிகளை உருவாக்கி அதன் அடிப்படையில் விரிவான முறையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளை வகைப்படுத்தினார்.

அதனடிப்படையில் 3734 சாதிகள் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக அறிவியல்பூர்வமாக உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தார். இதில் மக்கள் தொகையில் 52 சதவீதமான மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்தார் .ஏனெனில் நீதிமன்ற தீர்ப்பின் படி 50 சதவீதத்திற்கு மேலாக இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று இருந்தது. அதன் பிறகு நடந்த அரசியல் மாற்றங்களால் இவ்வறிக்கையை அமலாக்க விடாமல் கிடப்பில் போட்டனர். 1989 ஆட்சிக்கு வந்த வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் அடிப்படையில் வேலைவாய்ப்பில்  பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று 1990 ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிவித்தார். இத்தகைய சமூக நீதிக்கு எதிரான வெறுப்பை தூண்டக் கூடிய முறையில், தகுதி, திறமை என பிஜேபியும் ஆர்எஸ்எஸ் வன்முறையை தூண்டிவிட்டன. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பணி நியமனத்துக்கு இட ஒதுக்கீடு பொருந்தும்; பதவி உயர்வுக்கு பொருந்தாது என தீர்ப்பும் அளித்தது.

தமிழகத்தில் சமுக நீதி
சமூகநீதி போராட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 1916 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் துவங்கி இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை முன்வைப்பதில் திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத் திருத்தம்
சுதந்திரத்திற்கு பின் செண்பகம் துரைராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்தது. இதனை ஒட்டி பெரியார் முன்னெடுத்த போராட்டத்தில் திராவிட இயக்கமும் திமுகவும் கம்யூனிஸ்டுகளும் பங்கேற்றனர். போராட்டத்தின் வீச்சு காரணமாக அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர முடிந்தது. இதன் முலம் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க முடிந்தது. 1980இல் எம்ஜிஆர் தலைமையிலான அரசாங்கம் முதலில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி கணக்கில் கொண்டு மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதமும் பட்டியல் இனத்தவருக்கு 18 சதவீதமும் பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் ஆக மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் தமிழகத்திலும் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்களும் சமூக நீதிக்கான முன்னெடுப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. ஆனாலும் இது முழுமையடைய வில்லை. ஏனெனில் ஆளும் வர்க்கமும் அதன் வர்க்க பாசமும் இதனை அமுல்படுத்துவதற்கு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது இன்றைக்கும் இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கை முறையாக பின்பற்றப்பட்டு அதற்குரிய விதத்தில் வேலைவாய்ப்பும் கல்வியும் வழங்கப்படாமல் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக் கீட்டு அமுலாக்கம் சரியான முறையில் இல்லாததன் காரணமாக பின்னடைவு பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கின்றன. 

இழைக்கப்படும் அநீதி
மருத்துவம், பொறியியல், மேலாண்மை சட்டம் உள்ளிட்ட எல்லா உயர் கல்வி நிறுவனங்களும் மத்திய அரசினுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள சூழலில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழகத்தில் பொது மற்றும் பல் மருத்துவத்திற்கான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோரு க்கான மத்திய தொகுப்பில் வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது மிக முக்கியமான சமூக நீதிக்கான கோரிக்கையாகும்.இதில் பாமக சமூகநீதி பேசிக்கொண்டே குறுக்குசால் ஓட்டு வீதமாக 27 சதவீதத்தை கேட்டு குழி பறிக்கும் வேலையை செய்கிறது.  தமிழகத்தில் நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பிறகு நிலைமை மேலும்  நெருக்கடி மிக்கதாக மாறி வாய்ப்புகளை பறித்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் வழங்கப்படாமல் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அநீதி இழைத்து வருகிறது.

தமிழக மருத்துவக்கல்வியில் இடஒதுக்கீடு 
தமிழகத்திலுள்ள மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத நிலையே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆனாலும், மத்திய அரசு தமிழக மக்களின் குரலுக்கு செவிகொடுக் காத நிலையில் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டி லிருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதமானம், பட்டியலின மாண வர்களுக்கு 18 சதமானம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 1 சதமானம் என 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கிட உத்தர விடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்தீர்ப்பில், மாநிலங்கள் வழங்கி யுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும். எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கவுன்சில் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலில் செயல்படும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து இடஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைக்கும் நடைமுறை யையே பின்பற்றி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்குவதில் வேகம் காட்டிய மத்திய அரசு, ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமலாக்காமல் வஞ்சித்து வந்துள்ளது.

இந்த வழக்கிலும் கூட மத்திய அரசின் சார்பிலும், மருத்துவக் கவுன்சில் சார்பிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில் இதே அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டிருந்தது. எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தக் கூடிய முறையில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

போராட்டத்தை முன்னெடுப்போம்
தமிழகத்தின் சமூக நீதி பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முறையிலும், மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திலுள்ள சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு கடந்த  ஆகஸ்ட் 9 அன்று நடந்தது.இம்மாநாட்டின் அறைகூவலின்படி ஆகஸ்ட் 17 (இன்று) தமிழகம் முழுவதும் இட ஒதுக்கீடு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கட்டுரையாளர் :  மாநிலச் செயலாளர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்