தோழர் என்.சங்கரய்யாவுக்கு வயது 99 என்று சொல்வதைவிட, தொண்டுக்கு வயது 99, தியாகத்திற்கு வயது 99, ஒழுக்கத்திற்கு வயது 99, தூய்மைக்கு வயது 99 என்று சொல்லலாம்.
ஒரு மனிதன் நூறாண்டு வாழ்வதென்பது தனிமனிதக் கட்டுப்பாடு சார்ந்தது. மரபணுக் கள் சார்ந்தது மற்றும் காலம் சார்ந்தது. ஆனால், தியாக வாழ்வு வாழ்வது என்பது அவரவர் மனம் சார்ந்தது; கொள்கை சார்ந்தது.
தோழர் சங்கரய்யா இயக்கத் தின் இதயத்தைத்தான் பெற்றுக் கொண்டார் அல்லது தனது இதயத்தை இயக்கத்திற்குக் கொடுத்தார் என்றே கருத வேண்டும்.
பொதுவுடமை இயக்கம் இந்த மண்ணுக்குத் தந்த மகத்தான செல்வம் பொதுவாழ்வில் அது கட்டமைத் திருக்கும் வீழாத விழுமியமே. அந்த விழுமியத்தை வார்த்தெடுத்தவர்களுள் தலையாய ஒருவர் தோழர் சங்கரய்யா அவர்கள்.
தனது 99 ஆண்டுகளில் 8 ஆண்டுகளைச் சிறைக்குத் தந்திருக்கிறார். 3 ஆண்டுகளைத் தலைமறைவு வாழ்க்கைக்குத் தந்திருக்கிறார். நினைவு தெரிந்த நாளிலிருந்து தனது மிச்ச வாழ்க்கையை சமூகத்திற்குச் சாறாய்ப் பிழிந்து தந்திருக்கிறார். கட்சியில் அவர் வகித்த பொறுப்புகளுக்கெல்லாம் அவர் பெருமையும், பெருமிதமும் தந்திருக்கிறார். விடுதலைப் போராட்ட வீரர் - இலக்கியக் கலைஞர் - கலப்பு மணங்களைக் கட்டிக்காத்தவர் - சத்தியத்தைச் சங்கநாதம் செய்த பேச்சாளர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பழுத்த பெருந்தலைவர் என்.சங்கரய்யா.
அனைத்துலகப் பார்வை கொண்ட எந்தக் கட்சியும் தாய்மொழியைத் தாங்கிப் பிடிக்கவில்லையென்றால் அது மண்ணிலிருந்து உதிர்ந்துவிடும். ஆனால் சங்கரய்யா போன்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தாய்மொழித் தமிழை அதிகார பீடத்தில் அமர்த்திப் பார்க்கவே ஆசைப்பட்டுப் பாடுபட்டார்கள். அதிகார மையங்களில் தமிழே அரசாள வேண்டும் என்று தங்கள் எலும்புகளை எண்ணிக் கொடுத்தார்கள்; குருதியைக் கொட்டிக் கொடுத்தார்கள். விழுமியங்கள் கரைந்து கொண்டிருக்கிற இன்றைய பொது வாழ்க்கையில் சங்கரய்யா போன்றவர்கள் தியாகத்தின் சாட்சியாக நிற்கிறார்கள். பொதுவாழ்க்கை யின் சுடர் சங்கரய்யா போன்றவர்களின் தியாகத் தீயில் ஏற்றப்பட வேண்டும்.
ஒரு நூற்றாண்டு காணும் தலைவன் இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பார் என்பதுதான் தோழர் சங்கரய்யாவின் வெற்றி. தோழர் சங்கரய்யா நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவது என்பது, 14வது ஆம் நாள் வளர்பிறையைப் பௌர்ணமியாக வாழ்த்துவது போன்றது. “தலைவர்களின் தோழர், தோழர்களின் தலைவர் என்.சங்கரய்யா அவர்களே! இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்” என்று உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்.