tamilnadu

img

இந்தி தான் இந்தியாவா ? கண்ணோட்டம் : மதுக்கூர் இராமலிங்கம்

‘இந்தி திவஸ்’ எனப்படும் இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி மட்டும்தான் இந்தியாவின் மொழியாக இருக்க முடியும் என்றும்இதன்மூலம்தான் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்றும் பேசியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த கருத்து அமித்ஷாவின் கருத்து அல்ல. அவருடைய மூதாதையர்களான ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தையே அவர் தெரிவித்துள்ளார். இவர்களது குல குருவான கோல்வால்கர் ‘தொடர்பு மொழி என்றபிரச்சனைக்கான தீர்வு என்கிற வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பிடிக்கும் வரைவசதியின் பொருட்டு இந்திக்கே நாம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்’என்கிறார். இதைத்தான் அமித்ஷா கூறியிருக்கிறார். அண்மையில் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் இந்தியில் மொழிபெயர்க்கப்படுகிறது; இதை இந்தியில் தயாரித்து பின்னர் பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்தி மொழியின் வழியாகத்தான் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்பதை விடஅபத்தமான வாதம் வேறு இருக்க முடியாது. பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை கொண்ட  நாடாக இந்தியா விளங்குகிறது என்பதுதான் உலக அரங்கில் உயரிய அடையாளமாக உள்ளது. இந்தியாவில் இந்தி பேசுபவர்கள்தான் பெரும்பான்மை; எனவே, அந்த மொழியைத்தான் அடையாளப்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டால், ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவால் முன்வைக்கப்படும்  சமஸ்கிருத மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? வழக்கொழிந்து போன அந்த மொழியைஉயிரோடு வைத்திருக்க இந்தக் கூட்டம் ஏன்இவ்வளவு முயற்சி எடுக்கிறது? அவர்களைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் என்பது தேவபாஷா. அதாவது, தேவ மொழி, உயர்ந்தோர் பேசுகிற உயர்ந்த மொழி. மற்றவையெல்லாம் நீசர்கள் பேசுகிற நீச மொழி. இவர்கள் இந்திக்கு முட்டுக் கொடுப்பது கூட, சமஸ்கிருதம் அந்த இடத்தை வந்து சேரும் வரைதான். 

இந்தியிலும் கூட சமஸ்கிருத வார்த்தைகளை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்றும் இந்துஸ்தானி மொழியிலுள்ள பாரசீகஅரபு வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி விட வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே கூறி வருகிறார்கள். அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். ஆட்சி மொழி ஆணையம் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது: “இந்தியாவில் உள்ள மொழி வகைகளை கண்டு நாம் வெட்கப்படவோ, அவற்றை மறைத்து வைக்கவோ தேவையில்லை. இந்த துணைக்கண்டத்தின் அளவு, பழமையான வரலாறு, பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகளையும் பலவீனக் கூறுகளையும் உட்செரித்தும், அவற்றை ஒன்றுடன் ஒன்று இணங்கிச் செல்ல வைக்கும், செயல்படும் தனிச் சிறப்பான மரபு ஆகியவற்றை சார்ந்தும் நாம் பெருமை கொள்ளத்தக்கதுமான நமது பாரம்பரியச் செல்வம்தான் அம்மொழி வகைகள்.”

இந்தியாவின் பெருமை இதுதான். ஆனால்அதை சிறுமைப்படுத்த அமித்ஷா வகையறா முயல்கிறது. இந்தி மொழித் திணிப்பால் வடமாநிலங்களில் பல மொழிகள் காணாமல் போய்விட்டன. இதுகுறித்து டி.கே.உம்மன் கூறுகையில், ‘இந்தியாவில் வாழும் மக்களில் கணிசமானோர் தமது மொழிப் பண்பாட்டுத் தனித்தன்மையை இழந்து வருவதைக் காண்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடி மக்களும் கிராமப்புறங்களில் வாழும் பரந்துபட்ட உழவர்களும்தான்.  போஜ்புரி, பிரிஜ்பாஷா, மகதி, ராஜஸ்தானி, சதீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்கள், தங்கள் மொழியை மட்டுமல்ல, தனித்த பண்பாட்டையும் இழந்துவிட்டனர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார மொழிகளாக சுருக்கப்பட்டுவிட்டன. இம்மொழிகளைப் பேசுபவர்களை இந்தி மொழிப் பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் இந்திதான் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று காட்டி, அதனை இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்குவதற்கான நியாயங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது’ என்கிறார். 
மோடி அரசின் பல்வேறு தாக்குதல்கள் அனைத்து மொழி பேசும் மக்களின் மீதும்ஒருசேரத்தான் தொடுக்கப்படுகிறது. அவர்கள் ஒன்றுபட்டு போராடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தி பேசும் மக்களுக்கு இடையிலும்,பேசாத மக்களுக்கு இடையிலும் நிரந்தரப் பகைமையைத் தீயை இவர்கள் உயிரோடு வைத்திருக்க முயல்கிறார்கள். இதன் மூலம்கூட்டாட்சித் தன்மைக்கு மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் வேட்டு வைக்கிறார்கள். 

மோடி அரசின் இந்த இந்தி திணிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததோடு, அவரது கொள்கைக்கும் மலர் வளையம் வைத்துவிட்டார்போலிருக்கிறது. இதுகுறித்து, வாயைத் திறக்கக் காணோம்.தமிழக பாஜகவைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல, அமித்ஷா கருத்துக்கு முட்டுக்கொடுத்து வருகின்றனர். எச்.ராஜா காரைக்குடியில் பேட்டி அளிக்கும்போது, அமித்ஷா தாய்
மொழியை படிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறார் என்று விளக்கிவிட்டு அதையே இந்தியில் கூறுகிறார். ராஜாவின் தாய்மொழிப் பற்று பாராட்டத்தக்கது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியின் பிடியில் சிக்கியிருப்பதால் நகைச்சுவையின் உச்சத்தை தொடும் வகையில், ஆறு அறிவு உள்ள மனிதர்கள் ஆறு மொழியாவது படிக்க வேண்டாமா?  என்று கேட்கிறார். இவருக்கு இருக்கிற அறிவுக்கு இந்நேரம் குறைந்தபட்சம் நூறு மொழியாவது படித்திருக்க வேண்டாமா? விலங்குகளுக்கு ஐந்தறிவு என்கிறோம். அப்படியென்றால், ஆடு, மாடெல்லாம் ஐந்து மொழிகள் படிக்க வேண்டுமா? தாவரங்களுக்கு ஓரறிவு என்பதால் செடி, கொடியெல்லாம் ஒரு மொழியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டுமா? அந்த மொழியும் கூட இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பார் அமித்ஷா. அப்படியே ஆகட்டும் என்பார் பொன்னார். “உலகின் தொன்மையான மொழிகளில்ஒன்று தமிழ் என்று மோடி கூறியதற்காக ஆண்டு முழுவதும்  விழா நடத்த வேண்டாமா?தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்” என்று சாபமும் விட்டுள்ளார். மோடி ஒன்றும் மொழியியல் அறிஞர் அல்ல. அவர் சொல்லித்தான் தமிழின் பெருமையையும் தொன்மையையும் உணரக் கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் இவர்கள் இழைத்து வரும் வஞ்சகத்திற்கு விழா எடுக்கும் வகையில்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் விழா கொண்டாடியது. பொன்னார் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது.

;