tamilnadu

img

வரலாற்றுச் சுவடுகளுடன் டிஆர்இயு நூற்றாண்டு கண்காட்சி

தோழர் முகமது அமீன்நகர்(சென்னை), ஜன.25 - மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் வாழ்த்தப்பட்ட தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு) நூற்றாண்டை கடந்து ரயில்வே தொழிலாளர்களுக்காக பாடுபட்டு வருகிறது.  தென்னிந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான ரயில்வே தொழிற்சங்கமாகும் இது. ஜனவரி 23ஆம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் சிஐடியு அகில இந்திய மாநாட்டு வளாகத்திற்குள் வரலாற்றுச் சுவடுகளுடன், ரயில் பெட்டி வடிவில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 1.6.1918ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே மத்திய தொழிலாளர் சங்கம் நாகப்பட்டினம் ரயில்வே பணிமனையில் தொடங்கப்பட்ட அரிய புகைப்படம், 17.09.1927 அன்று ரயில்வே தொழிலாளர்களின் தியாகபூமியாம் திருச்சி பொன்மலையில் தென்னிந்திய ரயில்வே மத்திய சங்கத்திற்கு மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்  கலைநிகழ்ச்சி
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் சிங்காரவேலர் 1928ல் நாகப்பட்டினத்தில் ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பத்தாண்டுக் காலம் சிறை வாசம் அனுபவித்தார். அதுகுறித்த புகைப்படம், அந்த வழக்கு குறித்த விவரங்கள், தந்தை பெரியார் ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் உரையாற்றியது, 1928ம் ஆண்டு திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடத்திய கலை நிகழ்ச்சி உள்பட, காலத்தைக் கடந்து இன்றும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. முதன்முதலில் 1918ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே மத்திய தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது. பின்னர் 1937ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமாக மாறியது அதன்பின்னர் 1953ம் ஆண்டு தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கமாக மாறியது. 1961ம் ஆண்டு தட்சிண ரயில்வே எம்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) எனப் பெயர் மாற்றப்பட்டது.
டிஆர்.இயு அங்கீகாரத்திற்கு குரல் கொடுத்த அண்ணா
18.4.1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது தட்சிண ரயில்வே எம்ளாய்ஸ் யூனியனுக்கு தொழிற்சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும் எனப் பேசியது; 1946ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.  நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மொட்டையடித்தல், மாடுமேய்த்தல், சங்கு ஊதுதல், கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் எனத் தொடர்ந்து 18 வாரங்கள் பல வகையான நூதன போராட்டங்களையும் கருத்தரங்குகள், வாயிற் கூட்டங்கள், ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி என பல்வேறு போராட்டங்களை மற்ற சங்கங்களையும் இணைத்து டி.ஆர்.இ.யு நடத்தியது. அந்த போராட்டங்களின் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள பிரதிநிதிகளும் பொதுமக்களும் பார்வையிட்டனர்.  தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்ட நிகழ்வுகளும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் தொழிற்சங்க வரலாறும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தொழிற்சங்கம் என்பது வெறும் போராட்டத்திற்கானது மட்டுமல்ல; சமூகப் பணிகளிலும் ஈடுபடும் என்பதைக் குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட ரத்தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இவை இளம் தொழிலாளர்களுக்கு வரலாற்றை அறிந்து கொள்ள உதவியது. ரயில்வே தொழிற்சங்கம் துவங்கி 100 ஆண்டுகளைக் கடந்துள்ளதைக் குறிக்கும் வகையில் ரயில் பெட்டி போன்ற வடிவத்தில் இந்த கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

;