tamilnadu

img

அறிவியல் புரிதல்களைப் புகட்டத் தவறியதால்… கல்லீரலியல் வல்லுநர் ஆர்.பி. சண்முகம்

சுகாதாரம், சுற்றுச்சூழல், நோய்ப்பரவல் ஆகியவை குறித்த அறிவியல்பூர்வமான புரிதல்களைப் புகட்டத் தவறியது கொரோனா உள்ளிட்ட கடும் பாதிப்புகளுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் இந்தியாவில் முதல்முறையாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தவரும், சென்னையின் ஆர்.பி.எஸ். மருத்துவமனை நிறுவனருமான மூத்த மருத்துவர் பேராசிரியர் ஆர்.பி. சண்முகம். பேட்டி: அ. குமரேசன்

♦ கொரோனா பற்றிய பல்வேறு தகவல்கள் அரசாங்கத் தரப்பிலிருந்தும் அறிவியலாளர்களின் முயற்சிகளாலும் ஊடகச் செய்திகளா லும் மக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றன. அதேவேளையில் பெரியதொரு இடைவெளி இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நீங்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்ட விரும்புவது என்ன?                                                                                                                                                                                                                                                                                                                         விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது உண்மை, ஆனால் அது ஓரளவுக்குத்தான் உருவாகியிருக்கிறது. சுகாதாரம் பேணுவது பற்றிய அறிவையும் அக்கறையையும் புகட்டத் தவறியிருக்கிறோம். வளரும் தலைமுறைகளுக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் சொல்லப்பட வேண்டும்தான். ஆனால் பழம்பெருமைகளைப் பேசிய அளவுக்கு அறிவியல் உண்மைகளைப் பேசாமல் விட்டுவிட்டோம். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்களில் படித்த, உயர்நிலைகளில் இருக்கக்கூடிய, நடுத்தரப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குக் கூட  உடல் பற்றிய ஞானம் இல்லை என்பதைப் பார்க்கிறேன். விதிவிலக்குகளாக இருக்கக்கூடியவர்களைத் தவிர, பல ஐஏஎஸ் அதிகாரிகளே கூட உடல் பற்றியும் பொதுசுகாதாரம் பற்றியும் பெரிய அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை. எப்போது தெரிந்துகொள்வார்கள் என்றால்,  சம்பந்தப்பட்ட துறைக்கு அவர்கள் மாற்றப்படுகிற போதுதான்.

மருத்துவர்களிலேயே கூட தங்களுடைய மருத்துவ அறிவைத் தொடர்ந்து தற்காலப்படுத்திக்கொள் கிறவர்கள் சிலர்தான். தங்களிடம் வருகிற மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் சொல்வதுதான் அவர்களுக்குப் புதிய தகவல்கள். இதை இப்படிப்பட்ட அதிகாரிகள், மருத்துவர்களின் குறையாக மட்டும் சொல்ல முடியாது. அரசு நிர்வாகம், கல்வி, சமூகம் என ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடு இது. ஊரடங்கைத் தற்காலிகமாகத் தளர்த்துகிறபோது கூட்டம் கூடிவிடுகிறது – அதை எப்படித் தவிர்ப்பது என்று அறிவியல்பூர்வமாகச் சிந்தித்து நடவடிக்கைகள் எடுக்க வைக்கிற ஏற்பாடுகள் இல்லாததன் விளைவுகளையும் பார்க்கிறோம். இன்டெர்நெட் போன்ற நவீன வசதி களைப் பயன்படுத்திப் புதிய நிலைமைகளையும் ஆராய்ச்சி களையும் தெரிந்துகொள்கிறவர்கள் இன்று அதிகரித்திருக் கிறார்கள். இது பெரும்பாலானவர்களின் பழக்கமாக மாற  வேண்டும். அதைத் தூண்டுவதாக நமது கல்வித் திட்டங்கள்  இருக்க வேண்டும்.பள்ளிகள், கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவு மாணவர்களானாலும் அவர்களுக்கு அடிப்படை உடலியல், சூழலியல், சுகாதாரம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் தாங்களாகவே பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்கிற பக்குவம் வளரும். உடம்பார் அழியின் உயிரார் அழியும் என்று திரு மூலர் சொன்னதைப் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.

  கோவிட்-19 தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பற்றிய செய்திகள் நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றனவா?
கல்லீரலைத் தாக்கி, புற்றுநோயைக் கூட வரவைக்கிற  ஹெப்பாடிடிஸ்-பி, ஹெப்பாட்டிடிஸ்-சி என்ற இரண்டு வைரஸ்கள் இருக்கின்றன. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு முதல் வைரஸ்சுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகத்தில் ஹெப்பாட்டிடிஸ்-பி கல்லீரல் நோய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த இரண்டாவது வைரஸசால் ஏற்படும் நோயைத் தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. ஆனால் அந்த நோயைக் குணப்படுத்துவதற்கான அருமையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

இந்த கொரோனா வைரஸில் என்ன சிக்கல் என்றால், அது உருமாறிக்கொண்டே இருக்கிறது. அதாவது, உருப்பெருக்கியில் பார்க்கிறபோது கொம்புகொம்பாகத் தெரிகிறதே, அந்தக் கொம்பு முனையில் இருக்கிற புரோட்டீன் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகவேதான், அதை நிலைப்படுத்தித் தடுப்பதற்கான மருந்து கண்டு பிடிப்பது அறிவியலாளர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது, ஆயினும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இதில் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். அது சரியான தடுப்பு மருந்து வருவதற்கு வழி செய்யும் என்று மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது. இங்கேயும் அடுத்த கட்டத்தை அடைந்துள்ள ஆராய்ச்சி, பரிசோதனை பற்றிய செய்திகள் வருகின்றன. இந்தப் பரிசோதனைகள் வெற்றி  பெறுமானால் உலகத்திற்கே ஒரு முக்கியமான பங்களிப் பாக அமையும். குறைந்தது ஓராண்டாவது ஆகக்கூடும் என்ற நிலையில் ஹெர்ட் இம்யூனிட்டி என்று சொல்லப் படும் இயற்கையான நோய்த் தடுப்பாற்றலும் வளரக்கூடும்.

  கொரோனா பரவல், உலகளாவிய ஆராய்ச்சிகள் என்ற பின்னணியில், ஒருங்கிணைந்த மருத்துவ முறை  வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அது எந்த அளவுக்கு சாத்தியம்?
நாங்கள் எம்பிபிஎஸ் படித்த காலத்தில் அது ஒருங்கி ணைந்த மருத்துவம் என்றுதான் குறிப்பிடப்பட்டது. உடற்கூறு, அங்கங்களின் செயல்பாடு, மருந்துகளின் தாக்கம் என்று தனித்தனியாக இருந்த பாடங்களை ஒரே படிப்பின் கீழ் கொண்டுவந்தார்கள். அதில் பல்வேறு மருத்துவமுறைகளையும் தெரிந்துகொள்கிற வாய்ப்பும் அமைந்தது. இன்று பல வகையான மருத்துவங்களையும் ஒரே அமைப்பில் கொண்டுவருவது, குறிப்பிட்ட சிகிச்சை க்குத் தேவையான மருத்துவத்தை மேற்கொள்வது என்ற பொருளில் ஒருங்கிணைந்த முறை என்பது முன்வைக்கப் படுகிறது. மருத்துவம் மக்களுக்குப் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் இது ஒரு நல்ல லட்சியம்தான்.

நடைமுறையில் இருக்கிற பிரச்சினை என்ன வென்றால், பல்வேறு மருத்துவமுறைகளில் குறிப்பிட்ட  மருந்துகளின் அறிவியல் அடிப்படைகள் என்ன என்று விளக்குகிற ஆராய்ச்சிகள் இல்லை. மருந்தாகப் பயன் படுத்தும் குறிப்பிட்ட இயற்கைப் பொருளில் உள்ள வேதிப்பொருள்கள், அந்த வேதிப்பொருள்கள் செய லாற்றுகிற தன்மைகள் என்று பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு மருந்தின் விளைவுகள் என்ன என்கிற ஆராய்ச்சி எவ்வளவு முக்கி யமோ அதே அளவுக்கு, அந்த மருந்தின் பக்கவிளைவுகள் பற்றிய ஆராய்ச்சியும் முக்கியம். இப்போது கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகளில் கூட, அதன் பக்கவிளைவுகளைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக, புற்றுநோய் தடுப்பு மருந்து என்பதாக ஒன்றை அமெரிக்கா வில் பயன்படுத்தியபோது, ஆயிரக்கணக்கான குழந்தை கள் ஊனத்துடன் பிறந்தன. பக்கவிளைவுகள் பற்றிய ஆராய்ச்சியைப் புறக்கணித்ததன் விளைவு அது. சம் பந்தப்பட்டவர்கள் மீது பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆங்கில மருத்துவமுறை செல்வாக்குப் பெற்றதன்  பின்னணியில் வணிகப் பின்னலமைப்பு, அரசியல் அதிகாரம் போன்றவை இருந்தாலும், அறிவியலாளர் களின் ஆராய்ச்சியும் மையமாக இருக்கிறது. அறிவிய லாளர்கள் உலகத்திற்காகக் கண்டுபிடிக்கிறார்கள், அதைப் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் கைப்பற்றிக்கொள்கின்றன என்பதுதான் உண்மை. மற்ற பல மருத்துவங்களிலும் குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகள், அவற்றின் வேதியல் தன்மைகள், அவை செயல்படும் விதங்கள், விளைவுகள், பக்கவிளைவுகள் பற்றிய ஆவணப்பூர்வமான ஆராய்ச்சிகள் நிலைபெறுகிறபோதுதான் ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் சாத்திய மாகும். அப்போதுதான் பாரம்பரிய மருந்துகளின் பலன் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். எங்களிடம் வருகிற நோயாளிகளில் கணிசமானவர்கள், பக்கவிளைவுகள் பற்றிய பதிவுகள் இல்லாத மருந்துகளை எடுத்துக்கொண்ட வர்களாக இருக்கிறார்கள். ஆகவே பெருமைக்குரிய மருத்துவங்கள் பற்றிய பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் தேவைப்படுவதை ஒப்புக்கொண்டு அதற்கான முயற்சிகள் அக்கறையோடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

♦  நாடு முழுவதுமான கொரோனா சிகிச்சை அனுபவத்திலிருந்து அரசும் குடிமக்களும் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது என்று எதைச் சொல்வீர்கள்?
சூழலியல், சுகாதாரம் ஆகிய இரண்டையும் பற்றிய பொதுநல அக்கறை சார்ந்த கொள்கை அரசுக்குத் தேவை. தனியார் துறையே இருக்கக்கூடாது, தனியார் நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைக்கவே கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. வணிக நோக்கம், பணம் சம்பாதிப்பது என்று இருக்கிற வரையில் தனியாரை ஈடுபடுத்துவது தொடரவே செய்யும். ஆனால், அவர்களி டம் எதை ஒப்படைப்பது, எந்த அளவுக்கு ஒப்படைப்பது என்ற வரையறை வகுக்கப்பட்டு அது நேர்மையாகப் பின்பற்றப்பட வேண்டும். அண்மையில் ரத்தன் டாட்டா தற்போதைய கடுமையான சூழலில் ஊழியர்களை வெளியேற்றுவது கொடுமை என்று கூறிய செய்தி வந்திருக்கிறது. இப்படி தனிப்பட்ட முறையில் பாராட்டுக்குரிய அணுகுமுறைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

ஆனாலும் அடிப்படையில் தனியார்துறையினரின் நோக்கம் லாபம்  குவிப்பதுதான். மக்கள் நலனுக்காக நிற்பது, இயற்கை  வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச் சூழலை மேம்படுத்து வது போன்ற கொள்கைகள் பொதுநல அக்கறையுள்ள அரசுக்குத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும். இந்த அடிப்படையில், பொதுசுகாதாரத்தைப் பேணுவது, அதற்கான அரசுத்துறை கட்டமைப்புகளை வலுப்படுத்து வது, அந்தக் கட்டமைப்புகளை எங்கும் பரவலாக்குவது, அந்த வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது என்ற கொள்கை எல்லா நாடுகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற படிப்பினை கொரோனாவால் கிடைத்திருக்கிறது. அரசுகள் அதைப் பின்பற்ற வேண்டும், குடிமக்களும் இது ஏதோ அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று பார்க்காமல் தங்களுடைய ஆரோக்கிய வாழ்வோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று உணர்ந்து இப்படிப்பட்ட கொள்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

  கொரோனா தடுப்புக்காகக் கொண்டுவரப் பட்ட ஊரடங்கு இன்னும் எத்தனை காலம் தொடர வேண்டும்? ஊரடங்குக்குப் பிறகும் மக்கள் எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
எந்த நடவடிக்கையும் அறிவியல்பூர்வமாக இருந்தால் தான் முழு நன்மை கிடைக்கும். ஊரடங்குக் கட்டுப்பாடு களுக்கும் இது பொருந்தும். பணிகளுக்குச் செல்ல முடியாத ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவும் அத்தி யாவசியப் பொருள்களும் கிடைப்பது முக்கியம். வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டால் அவர்களே  இதையெல்லாம் சுயமரியாதையோடு உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அப்படி அவர்கள் வேலைக்குப் போகிறபோது பொருள்கள் நுகர்வு அதிகரிக்கும், உற்பத்தி பெருகும், நாட்டின் பொருளாதாரம் உறுதிப்படும். கொரோனா போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரிகிற வரையில் முகக்கவசம் அணிந்து வெளியே செல்வது, இடைவெளி விட்டு நடமாடுவது, வீடு திரும்பிய தும் கைகளைக் கழுவுவது போன்றவற்றைப் பொதுமக்கள் பின்பற்றத்தான் வேண்டும். பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கத்தான் வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகளையும் நீண்ட நாட்கள் மூடிவைத்திருக்க முடியாது. வீடுகளில் இருக்கிற குழந்தைகளுக்காக ஆன்லைன் பாடங்கள் என்று நடத்துகிறார்கள், என் பேத்தி பல மணி நேரம் அதிலே உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன் – கொடுமையாக இருக்கிறது. பள்ளிகளையும் கல்லூரிகளையும் எப்போது திறக்கலாம், நுண்ணுயிரிகள், சுகாதாரம், சூழலியல் பற்றிய பொது அறிவைப் புகட்டுவதற்கான முயற்சிகளையும் பள்ளிகளில் தொடங்கலாம். என்னென்ன வழிகாட்டல்களைப் பின்பற்றச் செய்யலாம் என்று சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதித்து விதிகளை உருவாக்கலாம். கல்விக் கூடங்களில் அந்த விதிகள் கறாராகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தலாம். அதே போல் கண்டிப்பான ஏற்பாடுகளுடன் பஸ், ரயில் போக்குவரத்தையும் தொடங்கலாம். இப்படிப்பட்ட அணுகுமுறைகள் பொதுமக்களுக்குத் தெம்பூட்டுவதாகவும் அமையும்.