tamilnadu

img

அம்பலமாகும் ஆர்எஸ்எஸ் -ஆர். அருண்குமார்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் (organiser), 2019 ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஏட்டில் “ஆர்எஸ்எஸ்-ஐ ஆய்வுசெய்வோம்” (“Exploring RSS”) என்று தலைப்பிட்டு ஒரு முகப்புக் கட்டரை வெளியாகி இருக்கிறது. நாக்பூரில் உள்ள பல்கலைக் கழகம் தன்னுடைய பி.ஏ., (இளங்கலைப்) படிப்பிற்கு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ்-உம் தேசத்தைக் கட்டியெழுப்புதலும் (‘RSS and Nation Building’) என்ற பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்திடத் தீர்மானித்திருப்பதற்கு ஆதரவாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இந்த முகப்புக்  கட்டுரையானது,  ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் தேசத்தைக் கட்டி எழுப்பியதில் அதனுடைய பங்களிப்பையும் வானளாவப் புகழ்ந்திருப்பதுடன், இவ்வியக்கமானது உலகிலேயே மாபெரும் தன்னிச்சையான தொண்டுநிறுவனமாகையால் (‘biggest voluntary organization’), ஒவ்வொருவரும் இது குறித்து நன்கு ஆய்வு செய்து அதன் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம் என்றும் கூறியிருக்கிறது. மாணவர் ஒருவர், வரலாற்றின் எந்தப்பகுதியையும் ஆய்வு செய்து படிப்பதற்கு சுதந்திரமான முறையில் அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு அவர் படிப்பதற்கு, அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வரலாறையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஆயினும் இவ்வாறு ஆய்வு செய்வது என்பது ஒருபக்கம்மட்டும் சார்புடையதாக இருந்திடக்கூடாது. உண்மையில் அவ்வாறு கற்பது என்பது அந்த அமைப்பினை ‘ஆய்வு’ செய்யக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும், அதன் அனைத்து முகப்புக்கூறுகளையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

உண்மையில், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் இருக்கின்றன.  எண்ணற்ற அறிஞர் பெருமக்கள், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து மிகவும் கூர்மையான முறையில் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் உண்மை சொரூபத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியும் இருக்கிறார்கள்.

ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளில் ஒன்றில், பேராசிரியர் சி.ஐ.ஐசக் என்பவர், “எந்தவிதத்திலும், ஆர்எஸ்எஸ் ஓர் அரசியல் அல்லது ஒரு குறுகிய மத அடிப்படையிலான அல்லது ஒரு மதத்தின் அமைப்பு கிடையாது. வெளிப்படைத்தன்மை என்பதுதான் இந்த அமைப்பின் கோட்பாட்டுச்சொல் ஆகும்,”  என்று கூறியிருக்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1979 ஆகஸ்ட் 3, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு எழுதியிருந்த ஒரு கட்டுரையில் முன்னாள் இந்தியப் பிரதமரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகருமான ஏ.பி. வாஜ்பாயி இது தொடர்பாக என்ன கூறியிருந்தார் என்று இப்போது நாம் பார்ப்போம்.

 “ஒரு சமூக மற்றும் கலாச்சார அமைப்பு மட்டுமே என்று கூறிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ், தான் எவ்விதமான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக மிகப்பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது,”(“Indian Express, 3rd August 1979). ஆர்எஸ்எஸ் கூறும் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்றால் ‘இந்தியத் தேசம்’ என்றுதான் பொருள் என்றும், இதில் இந்துக்கள் அல்லாதவர்களும் அடக்கம்தான் என்றும் ஆர்எஸ்எஸ்-ஆல் தெளிவாக விளக்கம் தரப்பட வேண்டும் என்றும் வாஜ்பாயி கூறியிருந்தார்.   இதிலிருந்தே ஆர்எஸ்எஸ் என்பது அது கூறிக்கொள்வது போன்று ஒரு கலாச்சார ஸ்தாபனம் அல்ல என்பதும், அது ‘வெளிப்படைத்தன்மை’யுடன் செயல்படும் ஒரு ஸ்தாபனமும் அல்ல என்பதும் தெளிவாகின்றன.

ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள மற்றொரு கட்டுரையில், விராக் பச்போர் (Virag Pachpore) என்பவர்,”இந்தியா, பல்வேறு மொழிகளைப் பேசுகின்றவர்களால், மிகவும் கவர்ச்சிகரமான முறையில் பின்னப்பட்ட, பல்வேறு விதமாக உடை உடுத்துவோர்களால், பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவர்களால் மற்றும் இதுபோன்று பல்வகைத் தன்மைகளுடன், கலாச்சாரப் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறது.  ஆயினும், நம் நாட்டில் காலங்காலமாக பல்வேறு மக்களிடையேயும் வேற்றுமைப் பண்புகளினூடே ஒற்றுமை என்பது எவ்விதமான தங்குதடையுமின்றி அடிப்படையாக அமைந்திருக்கிறது. எனவேதான் உலகிலேயே மிகவும் புராதனமான நாடாக இது விளங்குகிறது. இந்த ஒற்றுமை, எண்ணற்ற வண்ணமயமான வேற்றுமைப் பண்புகளால் வெளிக்காட்டப்படுகிறது.” என்று எழுதியிருக்கிறார்.

எனினும், இவ்வாறு இவர் கூறியுள்ளபோதிலும்கூட, ஆர்எஸ்எஸ் இயக்கமானது ‘வேற்றுமைப் பண்புகளில் ஒற்றுமை’ என்னும் கருத்தாக்கத்தின்மீது மிகவும் வெறுப்புடைய ஓர் அமைப்பு என்பதை எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் மிகவும் ஆழமானமுறையில் ஆராய்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

2019ஆம் ஆண்டு கேரவன் இதழ் ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகிற எண்ணற்ற நடவடிக்கைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.

 இவற்றில் “குருஜி: பார்வையும் பணிகளும் (Guruji: Vision and Mission)” என்று தலைப்பில் உள்ள ஒரு புத்தகத்தில், தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக (சர்சங்சலக்காக) இருந்துவரும் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்துகொண்டு செயல்படும் முஸ்லீம்கள் குறித்து என்ன கூறுகிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

 அந்தப் புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தில், ‘இந்து-இந்தத் தாய்மண்ணின் மகன்’ (‘Hindu-the Son of this Motherland’)என்று தலைப்பிட்டுள்ளதன்கீழ் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:

“உண்மையில், ‘பாரதி’ என்பது ‘இந்து’ என்பதற்கான மாற்றுச் சொல்லாகும். ஆனால், இன்று ‘பாரதிய’ என்று சொல்லைப் பயன்படுத்தும்போது ஏராளமாகக் குழப்பம் ஏற்படுகிறது. இந்தச் சொல் இன்றையதினம் ‘இந்தியன்’ என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாக முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் பார்சிக்கள் முதலான குழுக்களும் உள்ளடக்கம் என்பதுபோல் ஆகிவிடுகிறது. எனவே, நாம் இங்கே இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப்பற்றிப் பேச முன்வரும்போது, இந்த ‘பாரதிய’ என்கிற சொல், நம்மைக் குழப்புவதற்குக் கொண்டு செல்கிறது. ‘இந்து’ என்கிற சொல் மட்டுமே சரியான உணர்வினையும் பொருளையும் வெளிப்படுத்திட முடியும். அந்த ஒரு சொல்லால் மட்டும்தான் நாம் சொல்ல விரும்புகிற விஷயத்தை உண்மையாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்திட முடியும்.”

மேலும், “நம்முடைய அடையாளமும் தேசிய இனமும்” (‘Our Identity and Nationaity’) என்று தலைப்பிடப்பட்டுள்ள மற்றொரு அத்தியாயத்திலிருக்கின்ற கட்டுரை ஒன்றில், கோல்வால்கர் எழுதியிருக்கிறார்: “இந்து சமூகத்தின் உயிர்த்துடிப்புள்ள கொள்கைகள்தான் இந்த தேசத்தின் வாழும் அமைப்புமுறையாகும். “

சுருக்கமாகச் சொல்வதென்றால், இவர்கள் கூறும் “இந்து தேசம்” என்பது இதுதான். ஆர்எஸ்எஸ் இயக்கத்தால். சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதன் முதல் தலைவராக இருந்த ஹெக்டேவார் குறித்த சரிதையில் உள்ள ஒரு கட்டுரையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விசுவாசியான சிபி. பிஷிகார் (CP Bhishikar), என்பவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ஹெக்டேவர் முஸ்லீம்களை ‘யவன பாம்புகள்’ - (கிரேக்கர்களை இந்தியில் இவ்வாறுதான் விளிப்பார்கள்) என்றே குறிப்பிடுகிறார். பொதுவாக, அந்நியர்களை இதுபோன்றுதான் விளிப்பது வழக்கம். மேலும் அவர். அவர்கள் எல்லாம் “தேச விரோதிகள்” என்றும் வாதிடுகிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த சாராம்சங்களே, இதர மதத்தினருக்கு கண்மூடித்தனமான வெறுப்பை இவர்கள் கொண்டிருப்பதையும், ‘முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் இந்நாட்டின் அங்கமாக இருக்க முடியாது’ என்று இவர்கள் கருதுவதையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இதுதான் வேற்றுமைப்பண்பு  என்கிற சித்தாந்தத்தின் மீது இவர்கள் காட்டுகிற ‘நம்பிக்கை’யாகும்.

ஹெக்டேவருடன், பாசிஸ்ட் சர்வாதிகாரியான முசோலினியுடன் கலந்துரையாடியவரும், அவரால் மிகவும் ஆகர்ஷிக்கப்பட்டவரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனக் கூட்டத்தில் பங்கேற்ற ஐவரில் ஒருவராகவும் இருக்கின்ற, பிஎஸ் மூஞ்சே (B.S. Moonje), என்பவரும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதை ஒருங்கே பெற்றிருந்தார்கள்.  

கேரவனின் அதே இதழில் வெளியாகியுள்ள மற்றுமொரு கட்டுரையில், மூஞ்சே, ஹெக்டேவரை, மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.  அவர்,  மாணவனாக இருந்தபோது, வீதிச் சண்டையில் மிகவும் திறமைசாலியாக இருந்தார் என்றும், நிதி உதவியெல்லாம் அளித்தார்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“இருபது ஸ்வயம்சேவக்குகள் பங்கேற்ற ஒரு முகாம் ஒன்றில், அவர்கள் கம்பு, கத்தி, ஈட்டி, குத்துவாள், பட்டாக்கத்தி முதலானவற்றைப் பயன்படுத்திட, பயிற்சி அளிக்கப்பட்டது. … அந்த முகாம் முடிந்தபின்னர்,  ஒரு வகுப்புப்கலவரத்திற்கு திட்டமிடப்பட்டது. அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்தவர்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பயின்ற  “ஹெக்டேவர் பையன்கள்” முஸ்லீம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்குப் பொறுக்கி எடுக்கப்பட்டனர்.”

இதுதான் ஆர்எஸ்எஸ், அது துவக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்தே, போதித்திடும் ‘சகிப்புத்தன்மை’யின் வரலாறாகும்.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது ‘உருவாகி மலர்ந்தபின்‘ கடந்த சில ஆண்டுகளில் நன்கு வளர்ந்து ‘கனிந்து பக்குவப்பட்டு விட்டது’ என நம்புகிறவர்கள், “நரகத்தின் நிலவறைகள்: ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரின் ஒப்புதல் வாக்குமூலங்கள்” என்னும் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். இந்நூலை எழுதியவர், சுதீஷ் முன்னி என்பவராவார்.  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு பிரச்சாரகராக இருந்து பின்னர், இதன் மீதிருந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு, ராஜினாமா செய்துவிட்டு இந்தப் புத்தகத்தை எழுதினார். சுதீஷ் முன்னி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆவணங்கள் பலவற்றிலிருந்து மிகவும் விரிவான அளவில் மேற்கோள்கள் காட்டியிருக்கிறார். மேலும் ஆர்எஸ்எஸ்-இன் முக்கியமான இயக்கத் தலைவர்கள், அறிவுஜீவிகள் பலருடன் விவாதங்கள் மேற்கொண்டதையும் அப்போது அவர்கள் கூறிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ‘மறைத்துவைக்கப்பட்டுள்ள அரசியலையும்’ (‘hidden politics)  அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அதேபோன்று, கே.வி. நிதிஷ் என்கிற 23 வயது ஆர்எஸ்எஸ் ஊழியர் ஒருவர், தன்னுடைய உள்ளூர் பயிற்சிமுகாமில் (local shakha),  தனக்கு தேகப்பயிற்சி அளிக்கப்பட்ட சமயத்தில் ஒரு மூத்த தலைவர் தங்களிடம் கூறியதை நினைவு கூர்ந்திருக்கிறார். அவர் என்ன கூறினார் தெரியுமா? “நீங்கள் ஒருவரைக் குண்டாந்தடியால் அடிப்பதாகவும், அவரின் முகத்தில் குத்துவதற்காகவும் பயிற்சி செய்யும்போது  அந்த நபரை கம்யூனிஸ்ட்டுகளின் முகங்களாகவும், முஸ்லீம்களின் முகங்களாகவும் கற்பனை செய்துகொண்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்,” என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் இவ்வாறு நம் எதிரிகளைக் கற்பனை செய்துகொண்டு தாக்கும்போது அது நம்மை மேலும் முரட்டுக்குணமுடையவர்களாக மாற்றிடும் என்றும் கூறியிருக்கிறார். “நாம், நம் சகோதரிகளை ஏமாற்றி வலைவீசிப் பிடிக்கின்ற முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் போராட வேண்டியது அவசியம் என்று நாங்கள் அடிக்கடிக் கூறப்பட்டோம்,” என்றும் கே.வி. நிதிஷ் கூறுகிறார்.

“எங்களின் கூட்டங்கள் சிலவற்றில் பிரச்சாரகர்களும் மூத்த தலைவர்களும் எங்களிடம், நாம் முஸ்லீம் பெண்களைக் கவர்வதற்கு, எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள்,” என்றும் நிதிஷ் கூறுகிறார்.

தீரேந்திரா கே. ஜா என்னும் மற்றுமோர் இதழாளர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளை மிகவும் விரிவானமுறையில் சமீபத்தில் வெளியாகியுள்ள,  “துறவிகளின் விளையாட்டுக்கள்” (Ascetic Games) என்னும் தன்னுடைய புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் இவர், ஆர்எஸ்எஸ்/விசுவ இந்து பரிஷத் வகையறாக்கள் எப்படியெல்லாம் இந்து மதத்தை அரசியலாக்கி இருக்கிறது மற்றும் கிரிமினல்மயமாக்கி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

அவர் பல சாதுக்களையும், மதத் தலைவர்களையும் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊழியர்களையும், தன்னுடைய புத்தகத்திற்காக பேட்டி கண்டு, அவற்றின் மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் அதன் கீழ் இயங்கும் பரிவாரங்களின் சூழ்ச்சித்திட்டங்களையும் அம்பலமாக்கினார். மக்கள் சாதுக்களை மிகவும் மதித்து வந்ததால்,  அவர்கள் இதில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.

ஜா, எப்படி விசுவ இந்து பரிசத், இவர்களின் கொடூரமான திட்டங்களுக்கு உதவின என்பதற்கு,  அயோத்தியில், ஸ்வர்கத்வாலில் இருந்த சத்சங் ஆஷ்ரம கோவிலின் மதகுருமாரான ரகுனந்தன் தாஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார். விசுவ இந்து பரிசத், அயோத்தியில் இருந்த சாதுக்களுக்கு கிரிமினல் நடவடிக்கைகள் மூலமாக எதையும் பெறக்கூடிய விதத்தில் நன்கு பயிற்சி அளித்திருக்கிறது… கோவில் இயக்கம் என்ற பெயரில், விசுவ இந்து பரிசத் அயோத்தியில் இருந்த அமைதியை அழித்து ஒழித்தது. கோவில்களில் தங்களுக்குச் சாதகமாக நடக்கக்கூடிய மதத் தலைவர்களை நியமித்திட வன்முறை, பண பலம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை வெளிப்படையாகவே பயன்படுத்தப்பட்டன. குண்டர்கள், சாதுக்கள் என்ற  போர்வையில் மிகவும் அதிகாரம் படைத்தவர்களாக மாறியிருந்தார்கள். வயதான மற்றும் நேர்மையான மதத்தலைவர்கள் இவர்களை எதிர்த்திட முடியாமல் பலியானார்கள். விசுவ இந்து பரிசத், மதத்தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றதன் காரணமாக, அயோத்தியில் சாதுக்களுக்கு இருந்து வந்த மரியாதை முற்றிலுமாக மறைந்தது. அவற்றை மீளவும் பெற முடியவே இல்லை.

ஜா, இன்றைக்குள்ள சாதுக்களை பலவாறாகப் பிரித்து  அடையாளப்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் அனுப்பி வைக்கப்பட்டு, சாதுக்களாக மாறியுள்ள, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள். இவர்களின் ஊடுருவல் மூலமாகத்தான், ஆர்எஸ்எஸ்-உம்,. விசுவ இந்து பரிசத்தும் பல்வேறு மடாலயங்களில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக வளர்ந்து, கடவுள் நம்பிக்கையாளர்களைத் தங்கள் வலைகளுக்குள் விழ வைத்தார்கள்.

அவர், ஆர்கனைசர் (1982 ஆகஸ்ட் 1) இதழில் வெளியான “ஹரித்வார் வரலாறு படைக்கிறது”  என்னும் ஓர் அறிக்கையை மேற்கோள் காட்டுகிறார். அதில், விசுவ இந்து பரிசத் தன்னுடைய ஆட்களில் 100 பேரை, புதிதாக  அமைக்கப்பட்ட “சான்ஸ்கிரிதி ரக்ஷா யோஜனா” ‘Sanskriti Raksha Yojana’ திட்டத்தின்கீழ்  சந்நியாசிகளாக ஆக்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத்திட்டத்தின் கீழ் சந்நியாசிகள் மக்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று கதவுகளைத் தட்டினார்கள். அவர்களின் சாதி அல்லது வர்க்க நிலையைப் பார்த்திடாமல் அவர்களுக்கு ‘தர்மத்தை’ (தங்கள் மத போதனையைச்) செய்தார்கள். இவை அனைத்தும் இந்து வரலாற்றில் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.  

ஜா தன் கட்டுரையை நிறைவுசெய்யும்போது, இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்ட ‘சந்நியாசிகள்’ பாமர மக்கள் மத்தியிலும், மதத் தலைவர்கள் மத்தியிலும் செயல்படுவதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஜா, 1983இல் ஹரித்துவாரில், பாரத மாதா கோவிலைக் கட்டிய சத்யாமித்ரானந்த கிரி வரலாற்றையும் தோண்டி எடுத்து வெளிக்கொணர்ந்திருக்கிறார். இவர் மதத்தை தேசியவாதத்துடன் வரிசைப்படுத்தியவர். பாரத மாதா கோவில் மக்களின் வழிபாட்டுத்தலமாகத் திறந்துவிடப்பட்டபோது, பிரதமர் இந்திரா காந்தி பாரத மாதா சிலைக்கு முன்பு ஆரத்தி எடுத்தார். … அந்த மாதாவின் கைகளில் இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை வைப்பதற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விசுவ இந்து பரிசத்தின் கொடிபோன்று காவி வண்ணத்தில் முக்கோண வடிவத்திலிருந்த கொடியை ஏந்தி இருப்பதுபோல் வைக்கப்பட்டிருந்தது. பாரத மாதாவின் சிறப்புமிக்க புதல்வர்களாக சாவர்க்கரும் மற்றவர்களும் அங்கேயிருந்த அடையாளப் பலகைகளில் வரையப்பட்டிருந்தார்கள். 

சத்யாமித்ரானந்த் கிரி மாணவராக இருந்த காலத்திலேயே, இந்து மடாலயங்கள் பலவற்றில் எண்ணற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்களை சாதுக்களாக நியமனம் செய்திடும் வேலைகளில் இறங்கியிருந்தார். பின்னர் அவர்கள் மேலும் பல ஆர்எஸ்எஸ் ஊழியர்களை சாதுக்களாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் மடாலயங்களில் ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள்.

ஜா, விஜய் கௌசல் மகாராஜ் என்னும் விருந்தாவன்னை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பிரச்சாகராக இருந்து பின்னர் சாதுவாக மாறியவரை மேற்கோள் காட்டுகிறார்:“முன்பு ஒரு காலம் இருந்தது. சாதுக்களும் சங்கிகளும் வெவ்வேறு விதத்தில் சிந்தித்தார்கள், பேசினார்கள். இருவரும் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களும் வெவ்வேறாக இருந்தன.  ஆர்எஸ்எஸ் பின்னணியில் வந்த சாதுக்கள், இந்து மதம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து  மிகவும் தெளிவானமுறையில் இருந்தார்கள். அவர்கள் தேசப் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் பெருமை குறித்து சமூகத்தின் மற்ற பிரிவினர்களைவிட மிகவும் அதிகமாகக் கவலைப்பட்டார்கள். எனினும், பின்னர் காலம் செல்லச் செல்ல நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக சங்கிகளுக்கும் சாதுகளுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களின் விளைவாக இவர்களுக்கிடையே இருந்த வேற்றுமைகள் எல்லாம் சமப்படுத்தப்பட்டுவிட்டன.  இப்போதெல்லாம் இவர்கள், அவர்கள் சங்கிகளாக இருந்து சாதுக்களாக மாறியவர்வகளாக இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி,  ஒரேமாதிரி பேசத் தொடங்கிவிட்டார்கள்.”

“இன்றையதினம், சாதுக்களில் பெரும்பாலானவர்களின் அரசியல் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அது மிகவும் நேரடியானது. அதாவது, இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்பதே அக்குறிக்கோளாகும்,” என்று ஜா கூறுகிறார்.

 மேலும், ஜா மிகவும் சரியாகவே சுட்டிக்காட்டியிருப்பது போல, ஆர்எஸ்எஸ்-இன் இன்றைய பங்கு என்பது சாதுக்கள் மத்தியில் அவர்கள் செயல்படுகையில், இப்போதிருக்கின்ற மதச்சார்பற்ற இந்தியாவை மாற்றி, அந்த இடத்தில் அதற்குப் பதிலாக ஓர் அரசியல்ரீதியான இந்துயிசம் உருவாவதை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்தில் சாதுக்களில் ஒரு பிரிவினரை, ‘ஆன்மீக எந்திரமாக’, ‘காலாட்படை வீரர்களாக’  மாற்ற வேண்டும் என்பதேயாகும்.  ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று கற்பனை செய்வதே கடினமாக இருந்தது. ஆனால் இன்று இதுபோன்ற ‘ஆன்மீக எந்திரம்’,  சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் நன்கு செயல்பட்டிருக்கிறது. பாஜகவை ஆட்சி அதிகாரத்திலும் அமர வைத்திட மற்ற காரணிகளுடன் துணை புரிந்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ், மத அடையாளங்கள், பண்டிகைகள் மற்றும் கும்பமேளா போன்று மக்கள் கூடும் விழாக்கள் என அனைத்தையும் தன்னுடைய சித்தாந்தத்தை மேம்படுத்திடப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

  ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மதத்தின் போர்வையில் பிற மதத்தினருக்கு எதிராகப் பரப்பிக் கொண்டிருக்கம் பகைமை மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளை ஜா மிகவும் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகள் கக்கும் பிளவுவாத விஷத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற, நாட்டுப்பற்றுள்ள அனைவரும் இவர்களின் இத்தகு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திட வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக, விசுவ இந்து பரிசத் மற்றும் சங் பரிவாரத்தின்கீழ் இயங்கும் அனைத்து இயக்கங்களையும் சமூகரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மற்றும் பொருளாதாரரீதியாகவும் அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே தோற்கடித்திட முடியும். வரலாற்றை ஆய்வு செய்வதும், அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் இவ்வாறு இவர்களுக்கு எதிராக பல முனைகளிலும் மேற்கொள்ளவிருக்கும் போராட்டங்களுக்கு மிகவும் முக்கியமாகும்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 11.8.19)

(தமிழில்: ச.வீரமணி)