tamilnadu

img

தோழர் கே.வரதராசன் சிறந்த கம்யூனிஸ்ட் சிறந்த மனிதாபிமானி

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பின்னணியில் அன்றைய ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் சிறந்த தத்துவார்த்த, ஸ்தாபன, அரசியல் பின்புலம் கொண்ட தலைமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்தது. தோழர்கள் ஆர்.உமாநாத், பி.ராமச்சந்திரன், அனந்த நம்பியார், பாப்பா உமாநாத் போன்ற தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை தாங்கினர். பி.ராமச்சந்திரன் கட்சியின் மாவட்டச் செயலாளராக பணிபுரிந்தார். தோழர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊழியர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவதில் அவர் சிறப்புமிக்க பணியாற்றினார்.

1971ல் கே.வரதராசன் திருச்சி மாவட்ட கட்சியில் இணைந்தார். ஸ்ரீரங்கத்தில் ஆச்சாரமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த அவர் அரசுப்பணிக்காக நெல்லைக்கு சென்றபோது, அங்கு கட்சியில் சேர்ந்தார். அரசுப்பணியை துறந்து திருச்சியில் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்ற துவங்கினார். திருவெறும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் அவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். என்.சங்கரய்யா இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வழிகாட்டினார். திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம், அந்தநல்லூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வலுவான விவசாயிகள் இயக்கமும், திருச்சி பிஎச்இஎல், ரயில்வே, துப்பாக்கி தொழிற்சாலை உட்பட நகரின் பல பகுதிகளில் வலுவான தொழிற்சங்க இயக்கமும் செயல்பட்டு வந்தது. 

கே.வரதராசன் விவசாயிகள் சங்க செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் இயக்கம் வளரத் துவங்கியது. அந்தக் காலத்தில் அவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது. துவாக்குடி, வாழவந்தான் கோட்டை, சூரியூர் போன்ற பகுதிகளில் கூலிப் போராட்டங்களை நடத்தி அதன்மூலம் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார். லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. நெய்குப்பை போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடிசைகள் நிலவுடைமையாளர்களால் கொளுத்தப்பட்டன. குலமாணிக்கம், செம்பியக்குடி போன்ற பல கிராமங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களின் போது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதோடு, பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. ஜெயங்கொண்டம் பகுதியிலும் போராட்டங்களின் மூலம் விவசாயிகள் இயக்கம் வலுவாக வளர்ந்தது. எஸ்.என்.துரைராஜ் என்ற தலைவர் குண்டர்களால் தாக்கப்பட்டார்.

இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய கே.வரதராசன் களத்தில் முழுமையாக நிற்பார். கிராமங்களுக்கு செல்லும்போது இரவு அங்கேயே தங்கி கிடைப்பதைசாப்பிட்டு அங்கேயே உறங்கிவிடுவார். அவர் செல்லும் இடங்களில் ஆட்டமும்பாட்டுமாக தோழர்களை உற்சாகப்படுத்துவார். எளிமையான அவரது அணுகுமுறையும், அதேநேரத்தில் போராட்டத்தில் அவரது உறுதியும் அனைவரையும் கவர்ந்துவிடும்.அவசரநிலைக் காலத்தில் கட்சி கேட்டுக் கொண்டதற்கேற்ப அவர் தலைமறைவாக இருந்து பணியாற்றினார். கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரை தலைமறைவு வாழ்க்கை என்பது இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிவிடுவதல்ல, மாறாக ரகசியமாக கட்சிப் பணியாற்றுவது, இயக்கத்தை கட்டுவது என்பதே ஆகும். அந்த வகையில் அவசரநிலைக் கால தலைமறைவு காலத்திலும், கட்சி மற்றும் விவசாய சங்கத்தின் வளர்ச்சிக்காக கே.வரதராசன் கடுமையாக உழைத்தார். 

அவசர நிலைக் காலத்தில் துறையூர் மலைப் பகுதிகளில் தோழர்கள் வழக்கறிஞர் சு.முத்துகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோரோடு இணைந்து 35 கிராமங்களில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டு செங்கொடி பறக்கவிடப்பட்டது. தோழர் கே.வி ஒரு ஜனரஞ்சகமான தலைவர் என்று தோழர் முத்துகிருஷ்ணன் அடிக்கடி குறிப்பிடுவார். தோழர் கே.வரதராசனின் சிறப்புகளில் ஒன்று என்னவென்றால், யாரிடம் எந்தப் பணியை ஒப்படைப்பது என்பதில் முடிவெடுக்கும் குணமாகும். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண் விடல்” என்ற குறளுக்கேற்ப பொருத்தமான தோழர்களிடம் பொருத்தமான பணியை கொடுத்து இயக்க வளர்ச்சிக்கு திட்டமிடுவார். திருச்சி நகரத்தில் ஓட்டல் தொழிலாளர் சங்கம்,பீடித் தொழிலாளர் சங்கம் உருவாக்கி வளர்த்ததில் அவருக்கு பெரும்பான்மை பங்கு உண்டு. திருச்சி நகரில் தோழர்கள் கே.வி.எஸ். இந்துராஜ், ரேடியோ பாலன், வி.பரமேஸ்வரன் போன்ற தோழர்களை அரவணைத்து அவர்களை திறமைமிக்க ஊழியர்களாக மாற்றினார்.
திருச்சி மாவட்டத்தில் எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.கே.தங்கராஜ், எஸ்.என்.துரைராஜ், அண்ணாதுரை, முகமது அலி, பாண்டியன், இந்துராஜ் உள்ளிட்ட பல தலைவர்களை அடையாளம் கண்டு இயக்கப் பணிகளில் ஈடுபடுத்தி தலைவர்களாக உயர்த்தியதில் கே.வரதராசனுக்கு முக்கிய பங்குண்டு.1978ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளராக கே.வரதராசன் தேர்வு செய்யப்பட்டார். அவர் எப்பொழுதும் தனிப்பொறுப்புடன் கூடிய கூட்டுச் செயல்பாடு என்ற லெனினிய கோட்பாட்டை கறாராகப்பின்பற்றுவார். 

தொழிலாளர் வர்க்க கட்சியில் பலதரப்பட்ட பிரிவினர் இருப்பார்கள். அவர்களில் சிலர் திறமைமிக்கவர்களாக இருப்பார்கள். சிலரிடம் திறமைக் குறைவு கூட இருக்கலாம். ஆனால் அனைவரையும் ஒன்றுபடுத்தி கூட்டுச்செயல்பாட்டை வளர்த்தெடுப்பதில் அவருக்கு சிறந்த கண்ணோட்டம் இருந்தது. மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு கூட்டங்களில் கருத்தொற்றுமையையும், அதன் அடிப்படையிலான செயல் ஒற்றுமையையும் உருவாக்குவார். கமிட்டி கூட்டங்களில் காரசாரமான விவாதங்கள் சில சமயங்களில் நடைபெற வாய்ப்பு உண்டு. அனைவர் கூறும் கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டு, கோபப்படாமல் அடக்கமாக பதிலளிப்பார். பிரச்சனையின் தன்மைக்கேற்ப சரியானத் தீர்வை எட்டுவதற்கு முனைவார். ஆனால் எந்தவொரு தோழர் மீதும் தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்டமாட்டார். அனைவரிடமும் அன்பான அணுகுமுறையை பின்பற்றுவார் தோழர்.கே.வரதராசன்.  கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையும் இருக்கும்போதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி திறம்பட செயல்பட முடியும். இல்லையென்றால் தொளதொளப்பாக மாறிவிடும். ஒரு கறாரான கம்யூனிஸ்ட் கட்சியை நடத்துவதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது.திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், வாலிபர், மாதர்கள் என பன்முகப்பட்ட அமைப்புகளை வளர்த்தெடுப்பதில் அவருடைய பங்கு மகத்தானது.நீ ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டுமானால் நீ முதலில் ஒரு சிறந்த மனிதாபிமானியாக இருக்க வேண்டும் என்று தோழர் லெனின் குறிப்பிடுவதுகே. வரதராசனுக்கு முழுமையாகப் பொருந்தும். அவருடைய அர்ப்பணிப்புமிக்க உழைப்பின் காரணமாகவே அவரால் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அளவுக்கும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு அளவுக்கும் உயர முடிந்தது. அவரோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் என்றென்றும் நினைவில் நிழலாடக்கூடியது.

===டி.கே.ரங்கராஜன்===

மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

 

;