tamilnadu

img

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராவும் அ.சவுந்தரராசன் எழுப்பிய கேள்வியும்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடுமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது மத்திய புலனாய்வுத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த கொடூரம் வெளிவந்த உடன் பலரும் கேட்டது, அந்த காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருக்குமே என்பதுதான். ஆனால், சாத்தான்குளம் சிசிடிவி காட்சிகள் அன்றாடம் அழிந்துபோகுமாறு செட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும் தொழில்நுட்ப உதவியுடன் அந்தக் காட்சிகள் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல் நிலையங்களுக்கு சிசிடிவி கேமிரா வந்தததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான காரணமாகும். 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் நாள் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசன் ஒரு கேள்வியெழுப்பினார். காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதுதான் அந்தக் கேள்வி.

அதற்கு பதிலளித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே படிப்படியாக சிசிடிவி கேமிரா பொருத்தும் திட்டம் நடைமுறையில்  உள்ளது என்றும், மாநிலத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் சிசிடிவி கேமிரா பொருத்தப்படுமென்றும் பதிலளித்தார்.இதனடிப்படையில் தான் சாத்தான்குளம் காவல்நிலையம் உட்பட அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இன்றைக்கு ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.அதேபோல, சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தனி நபர் மசோதாவை அ.சவுந்தரராசன் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். ஆனால், அது ஆட்சியாளர்களால் ஏற்கப்படவில்லை. அவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருந்தால் இன்றைக்கு சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க, தண்டிக்க பேருதவியாக இருந்திருக்கும்.மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கிற வாய்ப்புகளை கம்யூனிஸ்ட்டுகள் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்கு காவல்நிலையங்களுக்கு வந்துள்ள சிசிடிவி கேமிரா ஒரு சாட்சியாக இருக்கிறது.

;