இடஒதுக்கீட்டின் மேற்பரப்பிலும் உள்ள டுக்குகளிலும் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் தாக்குதல் நாளுக்கு நாள் பல முனைக ளிலும் கூர்மையடைந்து வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் சமூக நீதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் எனப்படுகிற உயர் வருமானம் ஈட்டுவோர் அல்லது பொருளாதார நிலையில் மேம்பட்டோரை விலக்கிவைக்கும் நடைமுறையில் அப்படிப்பட்ட உயர் வருமானம் ஈட்டுவோரைக் கண்டறியும் ஆண்டு வருமானக் கணக்கீட்டு அளவுகோல்களிலும் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தையும் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இது இடஒதுக்கீட்டின் மீது குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் உள்ள டுக்கைச் சேதப்படுத்துகிறத் துல்லியத் தாக்குத லாகும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் கட்டுப்பாடுகளும்
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல பத்தாண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சீண்டப்படா மல் இருந்தது. 1950 இல் அமலுக்கு வந்த அரசிய லமைப்புச் சட்டத்தில் சமூக நிலை மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்த போதும் அப்படி யொரு இடஒதுக்கீடு கிடைக்க அவர்கள் 40 ஆண்டு கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1953 ல் காகா கேல்கர் ஆணையம் பரிந்துரைத்தும் அமல் படுத்தப்படவில்லை. 1979 இல் ஜனதா கட்சி ஆட்சி யில் நியமிக்கப்பட்ட மண்டல் ஆணையம், 1980 இல் தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரை செய்தபோதும் அது பத்தாண்டுகளாகக் கிடப்பில் கிடந்தது. அமலுக்கு வந்தபோதே பல்வேறு கட்டுப் பாடுகளும் நிபந்தனைகளும் அதன் முதுகில் மொத்தமாக வைத்துக் கட்டப்பட்டது.
40 ஆண்டுகாலத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு மண்டல் ஆணைய பரிந்துரைகளின் அடிப்ப டையில் 1990 ஆகஸ்ட் 7 அன்று வி.பி.சிங் அரசு, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சங் பரிவார சக்திகள் நாடு முழுவதும் பெரும் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டன. வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாரதிய ஜனதாக் கட்சி திரும்பப்பெற்று அரசைக் கவிழ்த்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட இந்திரா சஹானி என்ற வழக்கில் 15.12.1992 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் கிரிமி லேயர் எனப்படுகிற உயர் வருமானம் ஈட்டுவோர் என்ற புதிய வகைமையை உருவாக்கியது. அரசி யலமைப்புச் சட்டத்திலேயே சமூக நிலை மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், வேறு வழியில்லாமல் இடஒதுக்கீடு அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதே சமயம் அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் குறிப்பிட்ட உச்சவரம்பிற்கு அதிகமான வருமானம் ஈட்டுபவர்களை உயர் வருமானப் பிரிவினர் என வகைமைப்படுத்தி இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கிவைக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்தது.
உயர் வருமானத்திற்கான அளவுகோல்கள்
பல்வேறு இடர்களைக் கடந்து 1993 இல் மண்டல் ஆணைய இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்ட போது உச்சநீதிமன்ற நிபந்தனை யின்படி உயர் வருமானம் ஈட்டுவோர் யார் என்ப தைக் கண்டறியும் தகுதிகளும் அளவுகோல்களும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டன. ஆறு அளவு கோல்கள் வரையறுக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், ஆளுனர் உள்ளிட்ட அரசியலமைப்பு பதவிகள் வகிக்கும் ஆட்சியாளர்கள், உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகளில் உயர் பதவிவகிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட ஆட்சிப்பணி அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் உயர்நிலை அதி காரிகள், பாதுகாப்புப் படைகளில் கொலோனில் என்ற நிலைக்கு மேல் பதவி வகிப்பவர்கள் அனைவரும் உயர் வருமானம் ஈட்டுவோர் என 5 அளவுகோல்கள் நேரடியாக இறுதிப்படுத்தப்பட்டது. இந்த வகைமையில் சேராத அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழில், உற்பத்தி, வணிகம், வர்த்த கத்தில் ஈடுபடுவோர், தொழில்முறை வல்லுநர்கள் உள்ளிட்டவர்களில் உயர் வருமானம் ஈட்டு வோரைக் கண்டறியும் நடைமுறைதான் சிக்கலான ஆறாவது அளவுகோல். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு இலட்சம் என்ற அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது குடும்ப ஆண்டு வரு மானம் ஒரு இலட்சம் என்ற உச்சவரம்புக்கு அதிகமாக இருந்தால் அவர் உயர் வருமானம் ஈட்டுவோர் என்றும் ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அல்லாதவர் எனப்படுவார். அத்தகைய உயர் வருமானம் ஈட்டுகிற குடும்பத்தின் மாணவர் அல்லது போட்டியாளர் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும் 27% இடஒதுக்கீட்டு வட்டத்திற்குள் நுழைய இயலாது. அதற்கு வெளி யிலேயே நிறுத்தப்படுவார்கள். இதில் சற்று ஆறுதலான அம்சம் ஒன்று இருந்தது. அதாவது ஆண்டு வருமானம் கணக்கீட்டு அளவுகோலில் ஊதியமும் விவசாய வருமானமும் இணைக்கப் படவில்லை. அதாவது மாத ஊதியம் மற்றும் விவ சாய வருமானம் அல்லாமல் இதர வகைமையி லான வருமானம் மட்டுமே மொத்த ஆண்டு வருமா னத்தில் கணக்கிலெடுக்கப்படும். இதன் அடிப்படை என்னவென்றால் ஒருவருடைய மாத ஊதியம் அல்லது விவசாய வருமானம் என்பது அவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை பொருளாதாரம். அதனை அளவுகோலாகக் கொண்டு அவருடைய பொருளாதார நிலையைத் தீர்மானிக்கக்கூடாது என்பதே. இந்த அடிப்படை எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த 27 ஆண்டுகளாக நீடிக்கிறது. 2014 இல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதலே இந்த அடிப்படைத் தத்துவத்தை மத்திய பா.ஜ.க. அரசு மாற்ற முயற்சித்து வருகிறது.
மாறும் உச்சவரம்பும் மாறாத அடிப்படையும்
1993ல் நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலட்சம் என்ற உச்சவரம்பு விலைவாசி உயர்வுக்கேற்ப 11 ஆண்டு கள் கழித்து 2004 இல் ஒரு 2.5 இலட்சமாகவும் 2008 இல் 4.5 இலட்சமாகவும் 2013 இல் ஆறு இலட்சமாகவும் 2017 இல் எட்டு இலட்சமாகவும் உயர்த்தப்பட்டு மறுநிர்ணயம் செய்யப்பட்டது. அப்போதெல்லாம்கூட மாத ஊதியம் மற்றும் விவசாய வருமானம் ஆகியவை ஆண்டு வருமா னத்தில் சேர்க்கப்படவில்லை.
தற்போது மத்திய அரசு மேற்சொன்ன உச்ச வரம்பை 8 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக உயர்த்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளது. எதிர்வரும் பீகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரின் வாக்கு வங்கியை கவர்வதற்கான பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட நகர்வு என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்துடன் பா.ஜ.க. அரசு சத்தமில்லாமல் ஒரு பாதகத்தைச் செய்யத்துடிக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் கணக்கீடும் அளவுகோலில் நடைமுறையில் பெற்றோரின் மாத ஊதியமும் விவசாய வருமான மும் சேர்க்கப்படும் என்பதே. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இடஒதுக்கீடு பெறு வதற்கான தகுதியிலிருந்து கணிசமான குடும்பங்கள் வெளியேற்றப்படுவார்கள். குறிப்பாக மாத ஊதியம் பெறும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இடஒதுக்கீட்டின் பயன் பாட்டெல்லை மேலும் சுருக்கப்படும்.
வருமான வரியும் இடஒதுக்கீடும் ஒன்றல்ல
வருமான வரிச் சட்டத்தில் ஆண்டு வருமானம் என்பது ஊதியத்தையும் உள்ளடக்கியுள்ளது என்ப தால் வல்லுநர் குழு ஆலோசனையின்படி இட ஒதுக்கீட்டு ஆண்டு வருமான கணக்கீட்டிலும் ஊதியம் சேர்க்கப்படுவதாக மத்திய அரசு நியாயப் படுத்துகிறது. ஆனால் இது எவ்வித தர்க்க, தார்மீக, சட்ட நியாயங்களின்படியும் ஏற்புடையதல்ல. முதலில் வருமானம் என்பது நிலையானதல்ல. ஒவ்வொரு ஆண்டும் வருமானத்திற்கேற்ப கூடக் குறைச்சலாக வருமான வரி செலுத்தினால் போது மானது. இது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். ஒரு ஊழியர் ஒரு சமயம் வேலையிழந்தாலும் வருமானம் இழந்தாலும் அல்லது உயிரிழந்தால் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அது மட்டுமல்ல வருமான வரி கணக்கீட்டில் காப்பீட்டுத் தொகை, வீட்டு வசதிக்கடன், வாழ்க்கைச் செலவு, கல்விச் செலவு, அலுவல் நிர்வாகச் செலவு, வாக னம் மற்றும் கட்டிடங்கள் தேய்மானம் உள்ளிட்ட பல கழிவுகளும் விலக்குகளும் உள்ளது. எனவே வருமான வரியில் ஊதியத்தைக் கணக்கிடுவதில் தவறில்லை. ஆனால் பெற்றோரின் ஊதியத்தி னால் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரு மாணவர் அல்லது போட்டியாளரின் அப்பா சில ஆண்டுகள் கழித்து வேலையிழந்தாலோ அல்லது உயிரி ழந்தாலோ அந்த மாணவருக்கு கல்வியிலும் போட்டியாளருக்கு வேலைவாய்ப்பிலும் மீண்டும் இடஒதுக்கீடு கிடைக்குமா? என்றால் நிச்சயம் கிடைக்காது. எனவே நிலையற்ற வருமானத்தை யும் அதில் வாழ்வாதாரமான ஊதியத்தையும் விவசாய வருமானத்தையும் அடிப்படையா கக்கொண்டு இடஒதுக்கீட்டை மறுப்பது என்பது சமூக அநீதியே ஆகும்.
பாதிக்கப்படும் சம்பளதாரர்கள்
ஆட்சியில் அங்கம் வகிப்பவர்கள், ஆட்சிப் பணி யிலிருக்கும் உயர்மட்ட அதிகாரிகள், பரம்பரையாக பலநூறு ஏக்கர் நிலங்களை ஆண்டு அனுபவித்து வருகிற பெரும் நிலவுடைமையாளர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் குடும்பங்கள் கிரிமிலேயர் மூலம் இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றப்படு வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. கிரிமிலே யரின் உண்மையான நோக்கம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மாத ஊதியம் மற்றும் விவசாய வருமானம் ஆகியவை வருமானக் கணக்கீட்டில் சேர்க்கப்பட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் நடு நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வகைமையினரில் ஒரு பகுதியினர் இடஒதுக்கீட்டு எல்லையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களின் இளம் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசு , ஆசிரியர், பொ துத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் 20 ஆண்டுகள் பணி புரிந்துவரும் ஊழியர் ஒருவரின் மாத ஊதியம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாகத்தான் இருக்கும். இதற்கு அவர் உயர்மட்ட அதிகாரியாக இருக்க வேண்டியதில்லை. 2 ஆம் நிலை, 3 ஆம் நிலை ஊழியர்கள் 15 -20 ஆண்டுகள் பணியி லிருந்தால் கணிசமான ஊதியம் பெறும் நிலையை அடைந்திருப்பார்கள். கடைநிலை ஊழியர்கள்கூட பணி நிறைவடையும் நிலையில் அத்தகைய ஊதியம் பெறக்கூடும். தற்போது ஐ.டி. செக்டார் எனப்படுகிற தகவல் தொழில் நுட்பத் துறை உள்ளிட்ட சில தனியார் நிறுவன ஊழியர்கள் தொடக்க நிலையிலேயே கணிசமான ஊதியம் பெறுகிறார்கள். சில குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார் கள். இவர்களை எந்தத் தராசில் எடையிட்டாலும் உயர்வருமானப் பிரிவினராகக் கருதமுடியாது. வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்பின் பய னாகக் கணிசமான ஊதியம் பெறும் நிலையை அடைந்தவர்கள். தொடக்கத்திலேயே ஒரு இலட்சத் திற்கும் அதிகமாக ஊதியம் பெறும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் 20 ஆண்டுகால பணிமூப்பின் பயனாக நல்ல ஊதியம் பெறும் ஊழியருக்கும் வித்தியாசம் இல்லையா? ஆனால் தற்போது மத்திய அரசு புகுத்த முயற்சிக்கிற அளவுகோ லின்படி மாத ஊதியம் என்பது ஆண்டு வரு மானத்தில் சேர்க்கப்பட்டால், இத்தகைய பல குடும்பங்கள் கிரிமிலேயர் உச்சவரம்பை கடக்க நேரிடலாம். அதனால் இடஒதுக்கீடு மறுக்கப்படும் நிலை ஏற்படும். இவர்களில் பெரும்பாலோர் முதல் தலைமுறையாக பட்டப்படிப்பு பயின்று பணியிலி ருப்பவர்கள். இவர்களது அடுத்தத் தலைமுறையை இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றுவது எந்தக் காரணங்களுக்காகவும் பொருத்தமல்ல. அதுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத நிலை யற்ற பொருளாதார நிலையை வைத்துக் கொண்டு இடஒதுக்கீடு மறுப்பது சமூக நீதி மறுப்பாகும்.
தேவை உள்வகைமைப்படுத்தலும் உள் ஒதுக்கீடுகளுமே
நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்ற வகைமையில் 6000 க்கும் அதிகமான சாதிகள் அடங்கியுள்ளது. அனைத்து சாதிகளின் சமூக மற்றும் கல்வி நிலையின் மட்டம் சமமானது அல்ல.உயர்மட்டத்திலிருக்கிற மேம்பட்ட சாதிக ளான நிலவுடைமைச் சாதிகளே இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பயன்களைத் தொடர்ந்து அனு பவித்துவருகிறார்கள். அடிமட்டத்திலிருக்கிற நாடோடிகள், அரை நாடோடிகள், ஒட்டர், போயர், குயவர், மீனவர் உள்ளிட்ட சாதிகளுக்கு எந்தப் பலன்களும் சென்று சேர்வதில்லை. அல்லது மிகக் குறைவாகவே சேர்கிறது. உயர் மட்டத்திற்கும் அடிமட்டத்திற்கும் பெருத்த வேறுபாடுகளுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை உள்வகை மைப்படுத்தி உள் ஒதுக்கீடு வழங்கும் வழிமுறை கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமை யிலான வல்லுநர் குழு 6000 சாதிகளில் வெறும் 40 சாதிகள் அதாவது 1 சதவீத சாதிகள் மட்டுமே 50 சதவீதம் இடஒதுக்கீட்டு பலன்களை அனுப விக்கின்றன என்ற தரவுகளை வெளியிட்டுள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள் இடஒதுக்கீடு சமச்சீராகவும் சமத்துவமாகவும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சமூக மற்றும் கல்வி நிலையில் ஒரே தன்மையுடைய ஒரே மட்டத்திலுள்ள சாதிகளை இணைத்து குறைந்தது 5 பிரிவு களாக உள்வகைமைப்படுத்த வேண்டும். தமிழ் நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்று சில மாநிலங்களில் இது போன்ற உள்வகைமை உள்ளது. மத்தியப் பட்டியல் தெளிவாக உள்வகை மைப்படுத்தப்பட்டு 27% இடஒதுக்கீட்டை ஒவ்வொரு உட்பிரிவுக்கும் பிரித்து உள் ஒதுக்கீடு செய்து பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போது தான் இடஒதுக்கீட்டுப் பலன்கள் வேறுபட்ட மட்டங்க ளிலிருக்கும் வகுப்புகளுக்கு சமச்சீராகவும் சமத்துவமாகவும் சென்று சேரும். ஒவ்வொரு உள்வகைமையிலும் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படியும் அளவுகோல்களின் படியும் உயர் வருமானம் கொண்டோரை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கலாம். எனவே மத்திய அரசு ஊதியம் என்ற அளவுகோலை ஆண்டு வருமானக் கணக்கீட்டில் சேர்க்கும் முயற்சியை கைவிட்டு பிற்பட்ட வகுப்புகளை உள்வகைமைப் படுத்தி இடஒதுக்கீட்டை சமச்சீராகப் பகிர்ந்தளிக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் உயர்வருமானப் பிரிவினர் ஏற்புடைதல்ல
மண்டல் ஆணைய இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உருவாக்கிய கிரிமிலேயர் என்ற புதிய வகைமையை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டிலும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் 2019 நவம்பர் மாதத்தில் நாகராஜன் வழக்கில் உத்தரவிட்டுள் ளது. இது சமூக நீதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. பட்டியலினத்தவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு என்பது அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கல்வி மறுப்பு, சாதியப் பாகுபாடுகள், தீண்டாமைக்கொடுமைகள், வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கான பரிகாரம்தான். பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுத் தத்துவத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இன்றும் அவர்கள் மீதான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. ஒரு பட்டியலினத்தவர் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தாலும் கோவில்களுக்குள் அனுமதி மறுக்கிற அவலம் அரங்கேறுகிற நாட்டில் உயர் வருமானம் கொண் டோர் என்ற அளவுகோலில் பட்டியலினத்தவ ருக்கும் பழங்குடிகளுக்கும் இடஒதுக்கீடு மறுப்பது வன்கொடுமையின் புதுவடிவமே. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி முந்தைய நிலையை மீட்டெடுக்க வேண்டும்.
தொடர்புக்கு - anandhan.adv@gmail.com