tamilnadu

img

பாஜக அரசின் கார்ப்பரேட் சட்ட மசோதாக்களும் விவசாயிகளின் போராட்டங்களும்...

இந்திய விவசாயத்தினையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடம் அடகு வைப்பதற்கான வேளாண் சட்டங்களை மத்தியில் ஆளும் பிரதமர் மோடியின் பாஜக அரசாங்கம் நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் காற் றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனமாக நிறைவேற்றி உள்ளது. இதைக் கண்டித்து பஞ்சாப்,ஹரியானா உள்பட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தெருவில் இறங்கிதினந்தோறும் கிளர்ச்சி போராட்டங்கள் நடத்திவருகின்றனர். 

அத்தியாவசிய பொருட்களின் பதுக்களுக்கும் விலையேற்றத்திற்கும் வழி வகுக்கும் அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்ட திருத்தமசோதா, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதிலிருந்து மத்திய அரசு விலகிக் கொண்டுகார்ப்பரேட் பெரு முதலாளிகள் வைப்பது தான்சட்டம் என கூறும் வேளாண் விளை பொருள்வணிக ஊக்குவிப்பு சட்ட மசோதா, விவசாயிகள் எதை விளைவிப்பது மற்றும் விளைபொருட்களுக்கு எவ்வளவு விலை தருவது என்பதைக்கூட கார்ப்பரேட் பெரு முதலாளிகளேதீர்மானிப்பதும் ஒப்பந்த சாகுபடி முறைக்கு வழி வகுக்கும் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதானஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்ட மசோதா ஆகியவேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இலவச மின்சாரத்தைப் பறிக்கும் 2020 மின்சார திருத்தசட்ட மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில்பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

251 விவசாய அமைப்புகள் கூடி

நாடாளுமன்றத்தில் இம் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னாலேயே வரவிருக்கின்ற ஆபத்தை முன் உணர்ந்து நாடுமுழுவதும் உள்ள 251 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்று கூடி அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுஎன்ற அமைப்பை உருவாக்கி விவசாயிகளை ஒன்று திரட்டி நாடு முழுவதும் தொடர் கிளர்ச்சிப்போராட்டங்களை நடத்தி வருகிறது. முதற் கட்டமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஉள்ள விவசாயிகளிடம் விவசாயத்தை சீரழிக்கும் வேளாண் அவசர சட்டங்களை எதிர்த்துஒரு கோடி கையெழுத்தை பெற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றிவைத்து தங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்குதெரிவித்தனர். 

இந்த எதிர்ப்புகளையெல்லாம் கணக்கில்எடுத்துக்கொள்ளாமல் மத்திய அரசு வேளாண்மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்தது. எனவே தான் அகில இந்தியவிவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அவசர சட்ட நகல் எரிப்புபோராட்டத்தை நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.பெரம்பலூர் மாவட்டத்திலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கையெழுத்துகளை பெற்று பிரதமருக்கு தபாலில்அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல் மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வேளாண்மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவிவசாயிகள் ஒன்று கூடி அவசர சட்ட நகலைஎரித்து கைதாகி மத்திய அரசிற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜனநாயகப் படுகொலை

விவசாயிகளின் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி பாஜக அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்த போதும்நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டுமிதித்துவிட்டு அடாவடித்தனமாக மூன்றுவேளாண் மசோதாக்களையும் நிறைவேற்றியுள்ளது.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணிஅகாலிதளம் கட்சியின் மத்திய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தபிறகும் தமிழக முதல்வரும் அதிமுக எம்பிக்களும் வேளாண்மசோதாக்கள் நிறைவேற்ற நாடாளுமன்றத் தில் கைதூக்கி ஆதரவு தெரிவித்ததோடு இன்றளவும் வேளாண் மசோதாக்களை ஆதரித்து நாடகமாடி ஏமாற்றி வருகின்றனர்.இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்திய விவசாயமும் விவசாயிகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கப்படப் போவதை உணர்ந்து செப்டம்பர் 25 (இன்று) அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடுதழுவிய அளவில் சாலை மறியல் மற்றும் ரயில்மறியல் தொடர் போராட்டங்களை நடத்த முடிவுசெய்துள்ளனர்.

பெரம்பலூர் விவசாயிகளின் துயரநிலை

மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவுகோரி பெரம்பலூர் மாவட்டத்தில் 150க்கும்மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அனைத்துவிவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் விவசாய பெருமக்கள், இந்த பகுதியில் விளைகிற மக்காச்சோளம், சின்னவெங்காயம், பருத்தி, கடலை போன்ற விளை பொருட்களை அருகிலுள்ள வேளாண் விற்பனை மையத்திற்கே கொண்டு செல்ல முடியாமல் கிராமத்திற்கே வந்து கொள்முதல் செய்கின்ற தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலையில் உள்ளதை விவரித்தனர். ஆனால் பிரதமரும், முதலமைச்சரும் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் அதிக விலைக்கு விற்றுக்கொள்ளலாம் என்று சொல்லி விவசாயிகளை முட்டாளாக்கும் செயலில் இறங்கி உள்ளனர் எனக்குமுறலோடு தெரிவித்தனர். மேலும் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக வேலை இழந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசோதாக் கள் நிறைவேற்றினால் நாங்கள் பார்த்து வரும்இந்த விவசாய தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படும்என்றும் தெரிவித்தனர்.

அதே போல் கிசான் நிதி உதவித்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்குகிணறு அமைக்கும் திட்டம், மாட்டுக்கொட்டகைஅமைத்து தரும் திட்டம், மக்காச்சோளத்தில் படைப்புழு வராமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கும் திட்டம், வரப்பு அமைத்து கொடுக்கும் திட்டம் என எல்லா திட்டங்களிலும் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலபெருமளவு மோசடி நடைபெற்றுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகள் தெரிவித்தனர்.

ஒரு சோறு பதம்...
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்காக சுமார் 3,800 ஏக்கருக்கு மேல் நிலம் கொடுத்த விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கின்றனர். பொருளாதார மண்டலம் அமைக்க அடிமாட்டு விலைக்கு நிலம் பெற்று வீட்டிற்கு ஒருவருக்கு வேலைதருவதாகவும் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம்போட்டுவிட்டு அந்த திட்டத்தை செயல்படுத்தாமல், நிலமும் திரும்ப ஒப்படைக்காமல், வேலையும் தராமல் கார்ப்பரேட் நிறுவனமாகிய ஜீவிகேகுழுமம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. ஒருபானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஒரு மாவட்டத்திலேயே இந்த நிலைமைஎன்றால் நாடு முழுவதும் கார்ப்பரேட் வசம் என்றால் இந்திய விவசாயம் அதோ கதிதான்.இத்தகைய மோசமான அவல நிலைமையை விவசாயிகள் வாழ்க்கையில் கொண்டுவரப் போகும் இந்த வேளாண் மசோதாக்களைஎதிர்த்திட மாபெரும் கிளர்ச்சியில் ஒன்றுபடுவோம்.

கட்டுரையாளர்  : என்.செல்லத்துரை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்

;