tamilnadu

img

அடக்குமுறை காலத்தில் உதவிய நடிகவேள் எம்.ஆர்.ராதா - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 11

தமிழ்நா டக உலகிலும், சினிமா உலகிலும் கடந்த இருபதாம்  நூற்றாண்டில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என பல வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். பெரியாரின் கொள்கை வழிநின்று நாடகங்கள் மூலம் மக்களுக்கு மூட நம்பிக்கைகள், மூடவழக்கங்களை எதிர்த்து முற்போக்குக் கருத்துக்களை விதைத்தவர் எம்.ஆர்.ராதா, ஜீவா போன்ற கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களோடும் நெருக்கமாக இருந்தார். ராதாவின் நாடக அரங்கத் திரைச்சீலையில் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கம் எழுதப்பட்டிருக்கும். 1950ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் ராதா திருச்சியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த காவல்துறை அதிகாரி உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற திரை முழக்கத்தைப் படித்துவிட்டு ராதாவிடம் “நீங்கள் என்ன கம்யூனிஸ்டா?” என்று கேட்டார். அதற்கு ராதா “பசியால் வாடும் உழைப்பாளிகளை ஆதரித்துப் பேசினால் அவன் கம்யூனிஸ்டா” என்று திருப்பிக் கேட்டார். திரையைக் கழற்ற முடியாது என்று கூறிவிட்டார். இதற்கிடையில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் அதிகாரி போய்விட்டார்.

ராதா 1907ஆம் ஆண்டு சென்னையில் ராஜகோபால் நாயுடு என்பவரின் மகனாய் பிறந்தார். மெட்ராஸ் ராஜகோபால் நாயுடு ராதாதான் எம்.ஆர்.ராதா, அவர் தந்தையார் முதல் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர். போரில் மரணமெய்தினார். ராதா சிறுவனாக இருந்த போதே வீட்டில் கோபித்துக் கொண்டு ஓடிப்போனார். எழும்பூர் ஜங்சனில் பெட்டி தூக்கி சுமைப்பணியாளராய் சொந்த வாழ்வைத் துவங்கினார். அங்கிருந்து ஆலந்தூர் - டப்பி ரெங்கசாமி நாயுடு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பாலபார்ட் வேடங்களில் நடித்தார். பல கம்பெனிகளைச் சுற்றிவிட்டு சென்னை ஜெகநாதய்யர் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சி.எஸ்.ஜெயராமன், யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம், பி.டி.சம்பந்தம், கே.சாரங்கபாணி ஆகியோர் இருந்தனர். ராதா இக்கம்பெனியில் நடிகர், கார் டிரைவர், மெக்கானிக் மற்றும் எலெக்ட்ரீசியனாக பல வேலைகள் செய்தார். ஆரம்பத்தில் ராதா தேசிய இயக்கத்தில் தொண்டராக இருந்தார். காந்திஜி மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) வந்த போது அங்குதான் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அங்கு அந்நியத் துணி பகிஷ்காரம் பற்றிய காந்தியின் பேச்சைக் கேட்டதும் தான் உடுத்திய வேட்டி சட்டையைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு ராதா கோவணத்துடன் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். ராதாவுக்கு மாவீரன் பகத்சிங்கை மிகவும் பிடிக்கும். அவர் தூக்கிலிடப்பட்டதும் பல நாட்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார். 

ராதா தனது ஒரு மகளுக்கு ரஷ்யா என்று பெயரிட்டது சோவியத் நாடு மீதான ஈர்ப்பால் தான். அதுபோல் மற்றொரு மகளுக்கு பெரியாரின் அண்ணன் மகனும் காங்கிரஸ் தலைவருமாக இருந்த சம்பத் மீதான மரியாதையால் சம்பத்ராணி என்று பெயரிட்டார். இவர்கள் இருவருக்கும் பெரியார் தான் திருமணம் செய்து வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறைக் காலத்தில் கட்சித் தலைவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். ஜீவா ராதாவின் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார். ராதாவின் நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்த போது அங்கிருந்த சாமியார் ஒருவரைப் பார்த்து “உங்களிடம் சாமியார் எப்படி?” என்று கேட்டார். ராதா பதிலளிக்கவில்லை. ஜீவாதான் சாமியார் வேடத்தில் இருந்தார். தொடர்ந்து ஜனசக்தி பத்திரிகைக்கு நிதி தேவைப்பட்டதால் ராதாவை ஜீவா அணுகினார். ராதா ஜனசக்திக்காக பத்து நாடகங்களை நடத்தி நிதி வசூலித்துக் கொடுத்து உதவினார்.

அந்தக் காலத்தில் ஒரே நாடகம் ஒரு ஊரில் 100 நாள், 150 நாள் நடக்கும். திருமால் நாடகத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் காட்சியில் அவரின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுற்றும்படி செய்திருந்தார். எலெக்ட்ரீசியன் ராதா, அதைப் பார்த்துவிட்டு பிரபல தொழிலதிபர் சேஷசாயி “இதை எப்படிச் செய்தே?” என்று கேட்டுவிட்டு ராதாவின் பரமரசிகராகிவிட்டார்.  மதுரையில் நாடகம் நடந்த போது டி.வி.சுந்தரம்.அய்யங்கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருந்தார். அங்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க ராதா போவார். இதனால் டி.வி.எஸ்.அய்யங்காருக்கும் ராதாவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்பு ராதா சிறையிலிருந்த போது டி.வி.எஸ்.சின் மகன், அப்பாவின் நண்பர் என்ற முறையில் சிறையில் சென்று பார்த்துள்ளார். கோவை ஜி.டி.நாயுடு ராதாவை மிகவும் நேசித்து அவரது நிரந்தர ரசிகரானார்.

திராவிட இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவுக்கு நடிகவேள் என்ற பட்டத்தை சூட்டினார். ராதா  முதன் முதலாக “ராஜசேகரன்” என்ற படத்தில் நடித்தார். பின்பு ”சந்தனத் தேவன்” படம் வெற்றிபெற்றது. ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அதை பெருமாள் முதலியார் படமாக்கினார். திருவாரூர் தங்கராசு கதை வசனம். அப்படத்தில் நடிக்க உயர்ந்த தொகையாய் ஒன்றே கால் லட்சம் வாங்கினார். ஏனென்றால் அப்போது ராதா எம்ஜிஆரை சுட்ட வழக்கில் சிறையில் இருந்தார். எம்.ஜி.ஆருடன் தகராறு - துப்பாக்கிச்சூடு - ஐந்தாண்டு சிறை வாசம் ஆகியவற்றால் ராதாவின் திரை வாழ்வில் தொய்வு ஏற்பட்டது. தோழர் வி.பி.சிந்தன் கத்திக்குத்துக்காளாகி அரசு மருத்துவமனையில் இருந்த போது பதைப்புடன் வந்து அவரைப் பார்த்து ஆறுதல் கூறிச் சென்ற ஒரே நடிகர் எம்.ஆர்.ராதா தான். ராதாவின் வீட்டில் லெனின்-ஸ்டாலின் சேர்ந்திருக்கும் பெரியளவு படம் இடம்பெற்றிருக்கும். அந்த வீட்டில் தான் அவரது மகன் ராதாரவி குடியிருக்கிறார். ஆனால் அவர் ராதாவின் கோட்பாடுகளுக்கு எதிரான மதவெறி அமைப்பான பாஜகவில் சேர்ந்துள்ளார்.