tamilnadu

img

தண்ணீரின்றி காயும் பயிர் காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட தவிச வலியுறுத்தல்.....

தஞ்சாவூர்:
திருமலைசமுத்திரம் பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு 50 முதல் 70 நாட்களைக் கடந்த நிலையில், 20 முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் கிடைத்தால், பயிர்களைக் காப்பாற்ற முடியும் எனவிவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், “காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். இதில், உடனடியாக தண்ணீர்திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை. 

பயிர்கள் கடும் வெயில் காரணமாக மடியத் துவங்கி விட்டது.  எனவே, உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஏற்கனவே விவசாயிகளிடம் 4 ஆழ்துளை கிணறுகள் இருந்தும், பொருளாதாரப் பிரச்சனைகளால், மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளனர். அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்து, மின் இணைப்பு வழங்கினால், விவசாயத்தைக் காப்பாற்றலாம் என்றார். திருமலைசமுத்திரம் விவசாயி நாகராஜன், “தற்போதைய உடனடித் தேவை கருகும் பயிரையும், விவசாயிகள் உயிரையும் காப்பது தான். எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்றார்.

;