tamilnadu

img

கஜா புயலில் விழுந்த தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தஞ்சாவூர், மே 4-காவிரி டெல்டா மாவட்டத்தை உலுக்கிய கஜா புயலில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், மா, முந்திரி உள்ளிட்ட பலவகையான மரங்கள் அடியோடு சாய்ந்தது. புயலில் சாய்ந்த தேக்கு மரங்களை ஏலத்தில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை பெருக்கிட ஆர்வம் காட்டாத தமிழக அரசின் அலட்சியத்தால் சமூக விரோதிகள் நாள் தோறும் புயலில் விழுந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், வெட்டாறு, கல்லணை கால்வாய், கல்யாண ஓடை உள்ளிட்ட பாசன ஆறுகள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்கிறது. இந்த ஆறுகளின் இருகரைகளிலும் வனத்துறை சார்பில் தேக்கு மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டுள்ளன. இதில் முதிர்ச்சியான மரங்களையும், அவ்வப்போது மழை காலத்தில் சாய்ந்து கீழே விழும் மரங்களையும் வனத்துறையினர் அகற்றி அதனை ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு வருவாயை ஏற்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலில் கல்லணை கால்வாய், கல்யாண ஓடை ஆறுகளின் இரு கரையோரம் இருந்த லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் அடியோடு சாய்ந்து கீழே விழுந்தன. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் கீழே விழுந்த மரங்களை ஆற்றின் கரையிலேயே ஓரமாக அகற்றி வைத்தனர். புயல் வீசி 6 மாத காலம் ஆகியும் இந்த மரங்களை சேகரித்து, அதனை மொத்தமாக ஏலம் விட்டு அரசுக்கு வருவாயை ஏற்படுத்தாததால், சமூகவிரோதிகள் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் மேலஉளூர், துறையூர், பருத்திக்கோட்டை பகுதிகளில் விழுந்த ஆயிரக்கணக்கான தேக்கு மரங்கள் ஆறு மாதமாக வெயில், மழையில் கிடப்பதால் அவை வீணாகி வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக சிறப்பு ஏலம் வைத்து புயலில் விழுந்த தேக்கு மரங்களை விற்பனை செய்து அரசுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

;