tamilnadu

img

‘இடதுசாரிகளின் திசைவழி நமக்கான நம்பிக்கை’

சாதியும், தீண்டாமையும் ஏன் ஒழிய வேண்டும்; அது இம்மை, மறுமையின் விளைச்சல் என்கின்றனர் வலதுசாரிகள். சமூகத்தில் பெரும்பான்மை யினரிடம் சாதிய உணர்வை அங்கீகரிக்கும் பார்வை இருக்கிறது. சாதிகுறித்து பொது
வெளியில் விரிவான விவாதம் நடத்தப்படுவ தில்லை. மிகச் சொற்பமான அளவிலேயே விவாதம் சென்று கொண்டு இருக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வை வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சாதி ஒழிப்பு 
குறித்து நீண்டகால செயல்திட்டம், குறுகிய கால செயல்திட்டம் வகுத்து செயல்பட வேண்டியுள்ளது.

நமது உடையில், நடவடிக்கைகளில், தொழிலில், பேச்சில் ஏராளமான மாற்றம்ஏற்பட்டுள்ளது. சாதியில் மட்டும் எந்தமாற்றமும் ஏற்படவில்லை. சாதி குறித்த உரை யாடல் நமக்குள்ளேயே சுருங்கிவிடக்கூடாது. இதை பொது விவாதமாக மாற்ற வேண்டும். தற்பொழுது இது குறித்து அனைத்துத் தரப்பும் செவிமடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். நாம் தீவிரமாக செயல்படுவதற்கு சரியான தருணம் இது. சனாதனம் உருவான காலத்தில் இந்துத்துவம் என்கிற கோட்பாடு, சொல்லாடல்,அடையாளம், மதம் எதுவும் கிடையாது. பவுத்தம், சமணம் இருந்த காலத்தில் அதற்கு மாற்றாக, எதிராக உருவானதுதான் சனாதனம். சனாதனத்தின் உயிர்நாடியே பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுதான். ஆண்,
பெண் பாகுபாடுகளையும் அது வலி யுறுத்துகிறது. இதன் மூலம் அதிகாரத்தை நுகரக்கூடியவர்களாக சனாதனிகள் இருக்கின்றனர். இவர்கள் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பில் உடன்பாடு இல்லா தவர்கள். முற்பிறவி, அடுத்த பிறவி எனச்
சொல்லி சாதித் தூய்மையைக் காப்பவர் களாக உள்ளனர்.

சாதிப்பிடிமானம் குறித்த ஒரு நீண்ட உரையாடலை நாம் நடத்த வேண்டும். சாதி குறித்த உரையாடலை நடத்துவதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை ஒன்று திரட்டும் பணியில் பின்னடைவு வந்துவிடுமோ என்ற அச்சம் வருவது இயல்புதான். அந்த அச்சத்தை தகர்த்தெறிந்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையான செயல் பாட்டைக் கொண்டு இருக்கிறது. அதன் விளைவுதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. வெளிப்படையான சாதி ஒழிப்பு குறித்த 
விவாதத்தை, கருத்தரங்குகளை, போராட்டங் களை, மாநாடுகளை நடத்துவோம். சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்போம் என்ற இடதுசாரிகளின் திசைவழி நமக்கான நம்பிக்கையைத் தருகிறது.தலித்களுக்காக தலித்துகள் மட்டுமே போராடிக்கொண்டு இருந்தால் அது கிணற்றுக்குள் கிடந்த கல்லாகவே இருக்கும். அருந்ததியர்  உள் ஒதுக்கீடு வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை வைத்தது. அருந்ததிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தியது. ஆனால், அரசின் காதுகளுக்கு அவை எட்டவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி பேசிய பிறகுதான், தோழர் என்.வரதராஜன் அதற்கு தலைமை தாங்கிய பிறகுதான் ஆட்சி அதிகாரம் இதுகுறித்து யோசித்தது. பிறகுதான் திமுக ஆட்சியில் கலைஞர், அருந்ததியருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கினார்.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் பல கட்டப் போரட்டங்களை நடத்தியது. மாநாடுகள் நடத்தி தீர்மானங்களைப் போட்டது. ஏன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடபயணம் கூட மேற்கொண்டோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்த பிறகுதான், ஜெயலலிதாவின் பங்களா இருக்கும் சிறுதாவூரையும் மீட்க வேண்டுமெனப் போராடியபிறகுதான் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான தனி ஆணையத்தை கலைஞர் அமைத்தார். ஆக, ஒரு பிரச்சினையை இடதுசாரிகள் கையிலெடுக்கிற போதுதான் அது பொது நீரோட்டத்தில் நின்று பேசும் பொருளாகிறது. பொது விவாதமாக மாற்றப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்களை அசைத்துப் பார்க்கிறது.
சமூகத்தில் உள்ள அடிப்படையான பிரச்சனைகளை, முரண்பாடுகளை புரிந்து, உணர்ந்து இருக்கிற இயக்கம் அகில இந்திய அளவில் இடதுசாரிகள் மட்டுமே! இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து இருப்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல. இது சமூகத்தின் தேவை. வரலாற்றுத் தேவை. சமூகத்தில் அடிப்படையான முரண்பாடுகளையும், முதன்மையான முரண்பாடுகளையும் நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.இன்றைக்கு மத்தியில் மிருகபலத்தோடு வந்திருக்கிற மோடி, இந்துத்துவக் கோட்பாடுகளுக்கு சாதகமான சட்டங்களை வலுப்படுத்தியும், அதற்கு எதிரான சட்டங்க ளை நீர்த்துப்போகச் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழலில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், பெரி யாரியவாதிகள் இணைந்து நின்று சனாதன எதிர்ப்புப் போரை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தஞ்சையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆற்றிய உரையிலிருந்து

;