tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செயல் திறன் பயிற்சி

 தஞ்சாவூர், நவ.14- பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் செயல்திறன் பயிற்சி முகாம் கோவை ஏபிஜே விஷன் 2020 அமைப்பு சார்பில், நேரு கல்விக் குழுமம், துளசி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆளில்லாத விமானம், மாதிரி ஏவுகணை மற்றும் ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை தலைமையாசிரியர் வி.மனோகரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  அப்துல்கலாம் அமைப்பு குழுவில் உள்ள முனைவர் விஜயராஜ் குமார், பொறியாளர்கள் மனோ ராஜபால், ஜெயக்குமார், நிஷாந்த், முனைவர் செந்தில்குமார், சந்திர பாபு, பழனிச்சாமி, ஹரிஹரன், நாகராஜன், அபிஷேக் மற்றும் கௌதம் உள்ளிட்டோர் டாக்டர் அப்துல் கலாம் பெயரில் ஏபிஜே விஷன் என்ற அமைப்பை உருவாக்கி இதுவரை 21 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 2 லட்சத்து 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்த்து வருவதாக தெரிவித்தனர்.  கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களுக்கு சென்று முகாமிட்டு மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர். இதேபோல கோவை நேரு கல்வி குழுமத்தின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அவர்களது உதவியுடன் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

;