tamilnadu

img

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா மீண்டும் கைது!

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஆனந்த நடராஜர் சிலை உட்பட மொத்தம் 13 சிலைகள் காணாமல் போயின. இந்த வழக்கை அப்போதைய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.க்களான காத்திஃப், காதர் பாட்சா மற்றும் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையின் போது, தீனதயாளன், மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ் என்பவர் மூலமாக இந்த சிலைகளை லண்டனுக்கு கடத்தி அங்கு சுபாஷ் கபூர் என்பவரின் அருங்காட்சியகத்துக்கு விற்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.


இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி.க்கள் காத்திஃப், காதர் பாட்ஷா ஆகியோர் தீனதயாளனை கைது செய்யாமல் இருக்க பெருமளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இது தொடர்பான வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தீனதயாளன், வல்லப பிரகாஷ், சுபாஷ் கபூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


இதையடுத்து நாறும்பூ நாதர் கோவில் சிலைகள் திருட்டு குறித்து விசாரித்து வந்த டி.எஸ்.பிக்கள் காத்திஃப், காதர் பாட்சா, காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


இதனை தொடர்ந்து டி.எஸ்.பி. காத்திஃப் ஓய்வு பெற்றதையடுத்து, காதர் பாஷா பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானார். கடுமையான தேடலுக்கு பிறகு 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


இந்நிலையில், காதர் பாட்சா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

;