tamilnadu

பானி புயல் எச்சரிக்கை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர்/புதுக்கோட்டை, ஏப்.25-தமிழகத்தில் ஃபானி என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கக்கூடும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம்தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையாக சேதம்ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை மரங்கள்மற்றும் பலவகை மரங்கள் சேதமடைந்தன. இதேபோல கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இப்புயல் காரணமாக பல உயிர்களை பறிகொடுக்க நேர்ந்தது. ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. இதிலிருந்து டெல்டா பகுதிமக்கள் இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் ஃபானி புயல் தமிழகத்தை, குறிப்பாக டெல்டா மாவட்டத்தை தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை,மிகக் கனமழை மற்றும் சூறாவளி காற்றுவீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புயல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஃபானி புயல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை

புயல் மற்றும் மழைக்காலங்களில் துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிகை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.  அனைத்துறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் TNSMART என்ற செயலியை தங்களது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து வானிலை ஆராய்ச்சிமையம் சென்னை மண்டல அலுவலகத்திலிருந்தும், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திலிருந்தும் வரப்பெறும் புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறிந்து கொள்ளலாம். பொது மக்களும் மேற்கண்ட செயலியை தங்களது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

;