tamilnadu

img

விளையாட்டுக்கதிர் -நிஜத்தில் ஒரு ‘ஹீரோ’!

சாதிப்பதற்கு வயது எப்போதும் தடையாக இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். தனது பத்தொன்பதாவது வயதில் கவிதை வாசிக்க தொடங்கி பத்தாண்டுகளில் புகழின் உச்சிக்கு சென்றவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அவருக்குப் பிறகு,  தடகளத்தில் 72-வது வயதில்  சாதனை படைத்து பட்டுக் கோட்டைக்கு பெருமை சேர்த்திருக்கிறார் திலகவதி.
பேரன், பேத்திகள் கொஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய இந்த வயதில் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறார் அந்த முதியவர். அவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமம். தற்போது பட்டுக்கோட்டை பழைய ஹவுஸிங் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இளம் வயதிலே...
சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் அவரை உடற்கல்வி ஆசிரியராக மாற்றியது. பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி 14 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பள்ளியில் படிக்கும் பொழுதே 1965 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு, பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.
தடையில்லை...
இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவர். இதனால் வயதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. இவரது கணவர் இறந்து விட்டாலும் மனம் தளரவில்லை. மகள்கள் சுஜாதா, அஜிதா இருவரின் திருமணத்தை யும் முடித்துவிட்டார்.
உசுரே...
விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. உடற்கல்வி ஆசிரியராக பணி கிடைத்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதன் மூலம் விளையாட்டோடு, உடல் ஆரோக்கியத்தையும் பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, பேரன் பேத்திகளை கொஞ்சம் வேண்டிய வயதில் ஓட்டப்பந்தயத்திற்காக அலைந்து கொண்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பும் பலருக்கும் அவரது பதில்  “விளையாட்டுகளில் கலந்து கொள்வதால் தான் எனக்கு உசிரே ஓடிக்கொண்டிருக் கிறது” என்பதாகும்.
ஆனந்தம்...
முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் தவறாமல் பங்கேற்று தடை தாண்டும் தடகளத்தில் இப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறார் திலகவதி. அண்மையில் மலேசிய நாட்டில் நடந்த தடகள போட்டிகளில் கலந்து கொண்டார். இந்த தொடரில் 29 நாடுகளைச் சேர்ந்த மூத்தோர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 80 மீட்டர் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் காலில் ஏற்பட்ட காயம் பெரும் தொல்லை கொடுத்து வந்தது. இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இனி அவரால் ஓட முடியாது. சிரமம் என்றும் சொன்னார்கள். ஆனாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் பயிற்சி எடுத்தார். வெளிநாட்டில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பிறகு அவரது சொந்த கிராமத்தில் சமூக ஆர்வலர்களும் கிராம மக்களும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் பாராட்டு விழா எடுத்தனர். ஊர் திரும்பியதும் அவரது பேரப்பிள்ளைகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததும் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
ஏழ்மைக்கு...
“வயதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் ஓடிக்கொண்டே இருப்பதால் உடலில் எந்த நோயும் இல்லை கடைசி நேரத்திலேயும் நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என் மூச்சு மைதானத்தில் இருக்கும் பொழுதே பிரிய வேண்டும்” என்று திலகவதி கூறியிருப்பது தன்னை விளையாட்டில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்பதை மக்களெல்லாம் உணர்த்துகிறது.
ஏழை-எளிய குடும்ப பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்க இலவசமாக பயிற்சி தருவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் மூத்த வீராங்கனை, வரும் ஆகஸ்ட் மாதம் கனடா நாட்டில் உலக அளவில் நடைபெறும் தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று முத்திரை பதிக்க வேண்டும் என்ற அவரது லட்சியம் நிறைவேற ‘மகளிர் தினத்தில்’ அனைவரும் வாழ்த்துவோம்.

;