tamilnadu

img

அணுகு சாலையை தார்ச்சாலையாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இளம்பிள்ளை, நவ.13- இளம்பிள்ளை அருகே அரியனூர் பகுதியில் அணுகு சாலையை தார்ச் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அரியனூர் பகுதியில் உள்ள  சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொம்பாடிபட்டி  பிரிவில் (இளம்பிள்ளை வழி) அணுகு சாலை  சரியான முறையில் இல்லாததால், வாகன ஓட்டுனர்கள் கடும்  அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதுமட்டு மல்லாமல், காவல்துறையினர் தேசிய  நெடுஞ்சாலையில் வந்தால் ஒரு வழிப் பாதையில் வந்ததாக கூறி அபராதம் விதித்து  வந்தனர். பின்னர் அணுகு சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீர் செய்யும் பணியில்  புதனன்று ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியே  வந்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  தார்ச்சாலை அமைக்காமல் சாலையோரம் பள்ளம் தோண்டி அந்த  மண்ணை கொட்டி சாலையை  சரி செய்து  விட்டதாக கண்துடைப்பு பணிகளை செய்தால் எப்படி, நீங்கள் செய்யும் பணி களால் சிறிய மழை வந்தால் கூட சேறும், சகதியுமாக மாறி விடும், எப்படி நாங்கள் கடந்து செல்வது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து பொதுமக்கள் முறையான தார்ச்சாலை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு பணி ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப் பட்டது.