tamilnadu

திறக்கப்படாத மேட்டூர் அணை காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டூர்,ஜூன் 12- மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டால் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள் எந்த பிரச்சனையும் இன்றி விவசாயம் செய்து வருவார்கள். ஆனால் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததின் காரணமாகவும், இவ்வருடத்தின் பருவ மழை மிகவும் தாமதமாக தொடங்கிய காரணத்தாலும் கர்நாடகாவில் இருந்தோ கேரளத்தில் இருந்தோ தமிழக அணைகளில் நீர் நிரம்ப வில்லை. இதனால் வழக்கம் போல் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக இம்முறை  நீர் திறந்துவிடப்படாது என்று அறிவிக்கப்பட்டு ள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். கேரளாவில் பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் கபினி அணை விரைவாக நிரம்பி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்கும். அதன் பின்னரே பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும்.  16 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இந்த நீரை நம்பித்தான் உள்ளது. ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் போதிய மழையின்மை காரணமாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இம்முறையும் தண்ணீர் திறக்கப்படவில்லை. 2011ஆம் ஆண்டு தான் மேட்டூரில் 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. 

;