சேலம், மே 31- சேலம் மாவட்டத்தில் மகளிர் மேம்பாடு, சுகாதாரம், பொருளாதாரம் குறித்த பயன்பாட்டிற்கு “மின்மதி” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் மேம்பாடு, சுகாதாரம், பொருளாதாரம் குறித்த பயன்பாட்டிற்கு “மின்மதி” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, கோவிட் 19, சுயதொழில் குறித்த பயிற்சிகள், வானொலி மூலம் அன்றாட முக்கிய செய்திகள், வங்கிக்கடன், இளைஞர் களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் வழி காட்டும் விளக்கப் படங்கள், இயற்கை விவசாயம், மாடி தோட்டம் அமைத்தல், கால்நடை வளர்ப்பு, சிறுதானிய பயன்பாடு, அழகு குறிப்புகள் உட்பட அனைத்து விதமான பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்மதி செயலியை (Minmathi app) ஆன்டிராய்டு போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஊரக மற்றும் நகர்புறத்தை சார்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அவர்களது குடும்பங்களை சார்ந்த நபர்கள் மின்மதி செயலியினை பதிவிறக்கம் செய்து அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.