tamilnadu

img

நகர்ப்புறத்திலும் வேலை உறுதித்திட்டம்... சி.ரங்கராஜன் குழு பரிந்துரைக்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்  ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை செய்திடரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 21.9.2020 அன்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் ஊரக வேலைத்திட்டம் போல் நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் ஏற்படுத்த வேண்டுமென்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது. நகர்ப்புற வேலைத்திட்டம் ஏற்படுத்தலாம் என்று முன்மொழிந்துள்ள பரிந்துரையை அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.

தமிழ்நாடு அரசு, சி.ரங்கராஜன் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளிலும் வேலைத்திட்டத்தை துவங்குவதற்கான ஏற்பாடுகளை உடன் துவங்கிட வேண்டும், தற்போதைய பொருளாதார சூழலில், மக்களின் கைகளில் பணத்தை வழங்குவதே பொருளாதார மேம்பாட்டிற்கு சிறந்த வழி என பல்வேறு பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இனி மேலும் காலம்தாழ்த்தாது உடன் திட்டத்தை அமல்படுத்து வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.விதொச தொடர்ந்து 5 ஆண்டுகாலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மனு அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சங்கத்தின் சார்பில் சி.ரங்கராஜன் குழுவிற்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.

;