tamilnadu

img

இந்தாண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

சென்னை:
தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமில்லை என்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, திறப்பு குறித்து உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்
இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்காக தமிழக அரசு, கல்வி தொலைக் காட்சி வாயிலாகவும், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாகவும் தற்போது பாடங் களை நடத்தி வருகின்றன. இருப்பினும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டியுள்ளது.இதற்கான தேதியை முடிவு செய்தல், பொதுத் தேர்வுக்கான பாடங்களை நடத்தி, மாணவர்களை தயார் செய்தல் ஆகியவை அவசியமாகியுள்ளன.பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. இதுகுறித்து ஆய்வு நடத்தி முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழகத்தில்இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள் ளதா என நவ.11ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில், பள்ளிக்கல்விச் செயலர் தீரஜ்குமார், ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ஆலோசனையில், பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு தேதிகளை முடிவு செய்தல்,40 சதவீத பாடக் குறைப்பு, 2 ஆம் பருவ பாடப்புத்தகம் விநியோகம், ‘நீட்’ தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் மதிப்பெண் களை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை. அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்த பின், உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பார்.

நீட் தேர்வுக்கான பயிற்சி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை வரும் டிசம்பர் முதல் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. பாடத்திட்ட குறைப்பு தொடர்பான புளூபிரின்ட்டை மாணவர்களுக்கு அளிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி, 10 தினங்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.