tamilnadu

img

கூட்டுறவு நூற்பாலைகள் பாதுகாக்கப்படுமா?

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்டநூற்பாலைகள் மூடப்பட்டன. தமிழக அரசு சார்பில் 18 கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வந்தன. ரூ. 500 கோடிக்கு மேல் நட்டம் ஏற்பட்டதால் 13 ஆலைகளுக்கு ஆட்சியாளர்கள் மூடுவிழா நடத்தினர். பாரம்பரியமிக்க கூட்டுறவு நூற்பாலை மதுரை - மேலூர், சேலம் அம்மாபேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர், பல்லாவரம் (மில்), கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, தேனி ஆலைகளும் இதில் அடங்கும். இந்த
ஆலைகளை திறக்க மாநில அரசு, அதிகாரி கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அந்த குழுவின் பரிந்துரை புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இத்தகைய பின்னணியில்தான், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் வையாவூர் கூட்டுறவு நூற்பாலையை திறக்க அரசு முன்வருமா? என காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், “ரூ.70 கோடிநட்டத்தில் இயங்கி வந்த அந்த நூற்பாலையின் நிலத்தின் சொத்து மதிப்பைக் காட்டிலும்நட்டம் அதிகமானதால் ஆலை மூடப்பட்டது.  தற்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு அந்த நிலம் வழங்கப்பட்டு விட்டது. எனவேஆலையை திறக்க சாத்தியமே இல்லை. நட்டத்தில் இயங்கிய 6 கூட்டுறவு நூற்பாலைகள் ரூ. 175 கோடியில் நவீனமயமாக்கப்பட்டும் கடனில் இயங்கி வருகிறது. அதை திரும்பவும் இயக்குவதற்கு ரூ. 585 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது. அவற்றை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதால், கடந்த காலங்களில் மூடிய ஆலைகளைத் திறக்கும் எண்ணமே கிடையாது” என்று அரசின் நிலைபாட்டை வெட்ட வெளிச்சமாக்கினார்.

ஓரம்போ... ஓரம்போ...
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 மில்லியன் கிலோ பருத்தி நூல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு துவங்கிய சரிவு இந்த ஆண்டிலும் நீடித்ததால்கடந்த ஜூன் மாதத்தில் 55 மில்லியன் கிலோ மட்டுமே ஏற்றுமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இது கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் மிக மிகக் குறைவாகும். ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்ட போதிலும் பருத்தி நூல் உற்பத்தி இந்த வருடம் 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. கலப்பு மற்றும் பருத்தி அல்லாத நூல் உற்பத்தியும் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. இருப்பினும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஏற்றுமதிச் சந்தையில் இந்திய நூல்பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து மிக குறைந்த விலையில் கிடைப்பதால் ஜவுளித் தொழிலில் இந்தியா கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக ஆலைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை இழப்புஏற்பட்டுள்ளது. இதனால்தான் நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களே தெரிவிக்கிறார்கள். பெரும் இழப்பை சந்திக்காதவர்கள் மட்டுமே இதில் தப்பிப் பிழைத் தவர்கள்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட பஞ்சு, நூற்பாலை கள் மூடப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் 300 ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 1.30 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாற்று வேலையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ஏராளமான ஆலைகள் விற்பனைக்கு வந்தும் வாங்கும் நபர்கள் மறு சீரமைப்பு செய்து திறப்பதற்கு சுமார் ஆயிரம் கோடி வரை செலவாகும் என்பதால் ஒருவரும் முன்
வரவில்லை என்று பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இதனால், அந்த ஆலைகளின் உபகரணங்கள் எதற்கும் பயன்படுத்த முடியாமல் பாழடைந்து வருகின்றன.

‘நவீன அரக்கனும் நந்திகளும்’
உதாரணத்திற்கு, புதுச்சேரியின் ரோடியர் மில் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலோ -பிரஞ்ச் டெக்டைல்ஸ் (ஏஎஃப்டி) சுதேசி, பாரதி பஞ்சாலைகளையும் திருபுவனை ஸ்பின்னிங் ஆலையையும் நம்பித்தான் ஒரு கால கட்டத்தில் புதுவையின் பொருளாதாரமே இருந்தது.பத்தாம் தேதி சம்பளம் என்றால் அடுத்த நாள்புதுவையின் கடை வீதிகளில் தேர் திருவிழாபோல் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்தள வுக்கு வாங்கும் சக்தி அதிகரித்திருந்தது.தாராளமயக் கொள்கை காலடி வைத்ததி லிருந்து நெருக்கடியும் அதிகமானது. ஒட்டு மொத்தமாக உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் குடும்பங்களும் நடுத்தெருவில் நிர்க்கதியாய் நின்றன. பரிதவித்து வரும் அந்த குடும்பங்களுக்கு நிவாரணம் கேட்டு சிஐடியு தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்துபோராட்டம் நடத்தி வந்தன. சிறிதேனும் நிவாரணம் கொடுக்க முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு முன் வந்தும், பாஜகவின் அறிவிக்கப்படாத முகவராக செயல்பட்டு வரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ‘நந்தியாய்’ நின்று தடுத்து விட்டார்.

எங்கே செல்லும் இந்த பாதை?
ஜவுளித் தொழிலின் நெருக்கடி அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவையும் வெகுவாகப் பாதித்துள்ளது. 1,250 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வந்த அந்த மாநிலங்களில் ஏற்றுமதி சரிவு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் ஏராளமான ஆலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் பேர் தொழிலிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநிலங்களில் மகாராஷ்டிராவில் செயல்பட்டஆலைகளின் எண்ணிக்கையும் 85 விழுக்காடுகுறைந்துள்ளது. உ.பியில் 65 விழுக்காடு மூடப்பட்டுள்ளது. வேலையிழந்த தொழிலாளர் களுக்கு பணப்பயன் மட்டுமல்ல பல மாத சம்பளமும் வழங்கப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனையாகும்.
இதுகுறித்து மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு சிறிதும் கவலையில்லை என்பதை மத்திய பாஜக அரசின் சமீபத்திய புள்ளி விபரங்கள்படி நாட்டில் சிறிய அளவிலான தொழில் (எஸ்.எஸ்.ஐ அல்லாத) 1,400 ஜவுளி ஆலைகள் உள்ளன. இதில் 752 ஆலைகளுடன் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா (135), ஆந்திரா (112) மூன்றாவது இடத்திலும் உள்ளது என்கிறது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற பெயரில் மத்திய பாஜக அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி, கருப்புப் பணத்தை முழுமையாக கைப்பற்றி அரசின் கஜானாவுக்கு கொண்டுவரும் மிகப்பெரிய ஆயுதமாக அறிவித்த பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கை, தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கானோருக்கு குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் ஜவுளித்துறை பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இதிலிருந்து மீட்டெடுக்க வழி கேட்டால் தமிழகத்தில் ஜவுளித்துறை உற்பத்தியை பெருக்க மாநில அரசுடனும் தொழில்துறையினருடன் இணைந்து பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறுவது ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு என்ன விலை’ என்கிற பழமொழியாக உள்ளது.

===சி. ஸ்ரீராமுலு===

 

;