tamilnadu

img

தமிழக மின்வாரிய பணியில் பிற மாநிலத்தவரை நியமிப்பதா?

சென்னை:
தமிழக மின்வாரிய பணியில் பிற மாநிலத்தவரை நியமித்ததற்கு வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 2018 டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணிக்கான நேரடி தேர்வுநடத்தப்பட்டது.இந்த தேர்வுகளை நடத்தும் பணி அண்ணா பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.முன்பு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், உலக வர்த்தக மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய தேசத்தின் 18 மிக முக்கிய துறைகளை அதன் காலடியில் கொண்டு போய் சேர்த்தார்.

அதன்விளைவாக தமிழ்நாடு மின்சார வாரியம் 3 கார்ப்பரேஷன் லிமிடெட் கம்பெனிகளாக மாற்றப்பட்டது . இதன்  மூலம் அதிக அளவில் வாரியத்தினுடைய தனியார்மய சதவிகிதத்தை அதிகப்படுத்த முடியும் என்பதே அதன் ஒற்றை நோக்கமாகும்.ஏற்கனவே மூன்றாக பிரிக்கப்பட்ட மின்சாரவாரியத்தை மேலும் பலவீனமாக்கும் வகையில், பிஜேபி அரசின் தவறான பொருளாதார கொள்கையின் கைப்பாவையாக மாறிதமிழக அரசு தற்போது  தமிழக மின்சார வாரியத்தில் வேற்று மாநில தமிழ் தெரியாத38 பொறியாளர்களை நியமனம் செய்துள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு அனைவருக்கும்வேலை தரக்கூடிய கடமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் மாநில உரிமையையும் தொழிலாளர் உரிமையையும் பறிக்காமல் வேலைகளை வழங்கிட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு மிகவும் தவறானது.சில நாட்களுக்கு முன்பு தமிழ்மொழி தெரியாதவர்கள் ரயில்வே துறையில் திருமங்கலத்தில் ஏற்படுத்தவிருந்த ரயில் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டு 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம். இதுபோன்று விபத்துக்கள் மின்சார வாரியத்தை பொறுத்தவரையில் தற்போது நடக்க வாய்ப்பில்லை என்றாலும் இது மிக விரைவில் நடப்பதற்கு வாய்ப்புகளைதமிழக அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேற்றுமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நேரடியாக நியமனம் செய்ததன் விளைவாக ,முக்கியமாக களப்பணி ஆற்றக் கூடியவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய பொறியாளர்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று.  29.05.2019  தமிழக முதல்வர்  தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின்பொறியாளர்  பதவிக்கு  தமிழக முதல்வரால் பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. இதில்  ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்  இடம் பெற்றுள்ளனர். 

தமிழ்நாடு அரசு  2016இல் செய்த திருத்தம்என்பதுதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான். மேலும், நேபாளம், பூடான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது. தற்போது தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சமூக நீதியின் மேல் தொடுக்கப்படும் இவ்வாறான ஒடுக்குமுறைகள் ஒரு பக்கம் தொடர்கிறது. தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேளையில் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக்கூடியவேலை வாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்கின்ற திருத்தத்தை திரும்பப்பெற்று சொந்த மாநிலத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாற்றிட வேண்டும். 

உடனடியாக பிற மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்திய 38 பேரையும் வாபஸ் பெறுவதோடு அந்த பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை நியமிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. இது தொடருமானால் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் தமிழ்நாடு மின்சார வாரியம் அரசையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம்.

;