tamilnadu

img

பள்ளிப் பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதராக சித்தரிப்பதா? இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்....

சென்னை:
சிபிஎஸ்இ  8 ஆம் வகுப்பு பள்ளிப் பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை  புரோகிதர் போல் சித்தரித்துள்ளதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியின் ஆகச்சிறந்த புலவர்களில் ஒருவராக திகழ்பவர் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர். அவர் இயற்றிய திருக்குறளில் உள்ள 1330 குறள்களில் எந்தவொரு குறளிலும் குறிப்பான எந்தவொரு மதமோ அல்லது அதற்கான அடையாளங்களோ இல்லை. தமிழ் சமூக பண்பாட்டில் இலக்கியங்களின் வளர்ச்சி சனாதன மனுவாத சித்தாந்தங்களை எதிர்த்தே வளர்ந்துள்ளது. இந்நிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதமிழகத்தில் எப்படியேனும் தனது இருப்பை நிறுவிட எத்தனையோ ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவருக்கு காவி உடையும், பூணூலும் அணிவிக்கும் கொடும் காரியத்தை செய்து வருகிறது. தற்போது8-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர் களுக்கான பாடப்புத்தகத்தில் முழுவதுமாக ஒரு புரோகிதர் படத்தை போட்டு திருவள்ளுவராக பிரசுரித்துள்ளது. தமிழக அரசும் வழக்கம்போல் கைகட்டி மௌனியாக வேடிக்கைப் பார்க்கிறது.

இந்நடவடிக்கை தமிழ் மக்களையும் அவர்தம் தொன்மையான இலக்கியத்தையும் இழிவுபடுத்தும் செயலாகும். செல்லுமிடமெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார் பிரதமர்மோடி. ஆனால்   இம்மாதிரியான நடவடிக்கைகள் அவர்களின்  கபடநாடகத்தை அம்பலப்படுத்துகிறது. எனவே மத்திய அரசும் சிபிஎஸ்இ நிர்வாகமும் இவ்வாறான வரலாற்று புரட்டு நடவடிக்கையை சரிசெய்திட வேண்டும். மேலும் மத்திய அரசின் இந்நடவடிக்கையை கண்டித்தும், தமிழ் விரோத நடவடிக்கைக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

;