tamilnadu

எங்கே போனது குடிமராமத்துப் பணி?

1934ஆம் ஆண்டு முதல் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பைப் பொறுத்து  தண்ணீர் திறக்கப்படும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. 1942-45ம் ஆண்டுகள் உட்பட சில ஆண்டுகள் மட்டும் மே மாதமே  தண்ணீர் திறக்கப்பட்டது. கடைசியாக 2011ம் ஆண்டு, ஜுன் 6ம் தேதி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக வழக்கமாக திறக்க வேண்டிய ஜுன் 12-ந்தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறக்கப்படவில்லை.  கடந்த ஆண்டு 2018 ஜுலை 19-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதுபோல இந்தாண்டும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பினாலோ அல்லது காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் பேரில் கர்நாடக அரசு மேட்டூர் அணைக்கு திறந்துவிட்ட பிறகோதான் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறு கின்றனர். காவிரி டெல்டாவில் ஆண்டுதோறும் சம்பா சாகுபடி 16.25 ஏக்கரிலும் குறுவை சாகுபடி 3 லட்சம் ஏக்கரிலும் நவரை சாகுபடி 1.25 லட்சம் ஏக்கரிலும் ஆகமொத்தம் 20.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். இந்தாண்டு இதுவரை 88600 ஏக்கரில் குறுவை சாகுபடி பம்ப்செட்டு பாசனத்தில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகளும் நாகை மாவட்டத்தில் 20 ஆயிரமும் திருவாரூரில் 15 ஆயிரமும், கடலூரில் 1895 ஆழ்துளைக்கிணறுகளும் உள்ளன. குறுவையில் கோ-51, ஏடிடி- 36, ஏடிடி-43 ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறு கின்றனர்.

கடந்த ஆண்டு 3 லட்சத்து19 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடை பெற்றது. இந்தாண்டும் அதே அளவு சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்தாண்டும் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது.  இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே குடிநீர் பிரச்சனை கடந்த 7 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பருவமழை சரியான அளவில் பெய்யாதது என்பதல்ல; போதுமான அளவிற்கு பெய்தாலும் அதை சேமித்து வைப்பதற்கு ஆக்கப்பூர்வமான நட வடிக்கையை அரசு எடுக்காததுதான் பிரதான காரணமாகும். மழை நீரை உரிய முறையில் சேமித்து பாதுகாப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏரி, குளம், குட்டைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் ஆண்டுக்காண்டு குறைந்து வருகின்றன. இதனால் ஆறுகள் வாய்க்கால்களாகவும் ஏரிகள் சிறு கண்மாய்களாகவும் குளங்கள் குட்டைகளாகவும் குட்டைகள் காணாமலும் போய்க்கொண்டுள்ளன.  ஒவ்வொரு ஊரிலும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க முன்பு குடிமராமத்துப்பணி முறையாகவும் முனைப்பாகவும் நடந்தது. இப்பணிகள் படிப்படியாக குறைந்து சமீபகாலமாக குடி மராமத்துப்பணியையே அரசு மறந்து போய்விட்டது. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகள் இருக்கும் பகுதிக ளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் தேவையே பிரதான குறிக்கோள் என்பதை உணர்ந்து செயல்பட்டு தூர்வாரி சீரமைக்க அரசு முன்வரவேண்டும்.

தூர்வாரும் பணிகளை கவனிக்கும் ஒப்பந்த காரர்களும் லாப நோக்கோடு செயல்படாமல் ஊர் நலனை குறிக்கோளாகக் கொண்டு செயல்படவேண்டும்.  தமிழ்நாட்டில்  39,200 ஏரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 14,000 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் மீதமுள்ள ஏரிகள் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டிலும் இருப்பதாக சொல்லப்படு கிறது. இந்த விவரத்தின் அடிப்படையில் மேற்கண்ட ஏரிகள் தற்போது உள்ளனவா? இப்போது உள்ள ஏரிகளின் எண்ணிக்கை என்ன என்பதை அரசு வெளியிடவேண்டும்.  மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் எத்தனை? அவற்றை தூர்வாருவதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? தூர்வா ரும் பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை அரசு தெரிவிக்க வேண்டும்.  மேலும் நீர்நிலைகளை பலர் ஆக்கிர மித்திருப்பதால் அவற்றின் அளவு சுருங்கி, கொள்ளளவும் குறைந்திருக்கிறது. ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அத்துறையின் செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அப்புறப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவ டிக்கைகள் பற்றி அறிக்கை  பெறவேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடக் கூறியுள்ளனர்.  இத்தகைய நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொண்டாலே ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணியும் முழுமையாக நடைபெற்று நீர்நிலைகள் முற்றிலும் பாதுகாக்கப்படும்.

;