tamilnadu

img

நலவாரிய சட்டம் - ஊரக வேலைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துக.... அமைச்சர்களிடம் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கோரிக்கை....

சென்னை:
விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களுக்கு சட்ட அந்தஸ்துடன் கூடிய ‘தமிழ்நாடுவிவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை மீண்டும் செயல்படுத்திடவும், வீட்டு மனைப் பட்டா வழங்கிடவும், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை முழுமை யாக ஆய்வு செய்து செயல்படுத்திட வேண்டு மெனவும் வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற  உறுப்பினர்கள் ஆகியோர்  வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 

பருவநிலை மாற்றம், ஒன்றிய அரசின் தவறான வேளாண் கொள்கைகள், விவசாயம் நவீனமயமாக்கல் உள்ளிட்டக் காரணங்களால் வேளாண்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்த நிலையில், விவசாயக் கூலி வேலைகளை நம்பி மட்டுமே வாழ்ந்து வரும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையையும் - வருமானத்தையும் இழந்து தவித்து வரும் நிலைஉள்ளது. 35 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடற்றவர்களாக - வீட்டுமனை யற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். 

முந்தைய தங்களது கழக ஆட்சிக்காலத்தில்நடைமுறைப்படுத்தப்பட்ட 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின் மூலம் நில மேம்பாடு செய்து 2,10,427 ஏக்கர் நிலம் 1,75,355 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நிலச் சீர்த்திருத்தச் சட்டம் - நில மேம்பாடுத் திட்டங்களின் மூலம் உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, அரசு புறம்போக்கு - கோவில் நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்திட வேண்டும். வீட்டுமனை- மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு மனையும் - மனைப் பட்டாவும் வழங்கிட வேண்டும். கோவில்மனைகளில் குடியிருப்போருக்கு அதற்கான தொகையை அரசே செலுத்தி, மனையை அவர்களுக்குச் சொந்தமாக்கிட வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களுக்கும், நிலமற்றவர்களுக்கும் வழங்கிட வேண்டும். கிராமப்புற ஏழைகளின் வருமானத்திற்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் தரமான உணவுகள் கிடைக்கவில்லை. ஆகவே, விவசாயப் பணிகளுக்கான கூலியை - ஆண் தொழிலாளர்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.600 ஆகவும், பெண் தொழிலாளர்களுக்கு 4 மணி நேரத்திற்கு ரூ.400 ஆகவும் குறைந்தபட்ச சட்டக்கூலியாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். 

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் செயல்முறைப் படுத்தப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியச் சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்திடவேண்டும். சட்டமன்றத்தில் திருமண உதவி நிதிபெறுவதற்கான தகுதி குறித்து கடுமையான வரையறைகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது திருமண உதவி திட்டங்கள் சாதாரண ஏழைகளுக்கு எளிய முறையில் கிடைத்திடும்விதத்தில் அமையவில்லை.. எனவே அரசின் தற்போதைய அறிவிப்பை ரத்து செய்து அனைவருக்கும் திருமண உதவித் தொகை கிடைக்கும்வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைத்திட்டம் கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக மற்றும் ஒன்றிய பாஜக அரசால் கடுமையாகச் சிதைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக எந்திரப் பயன்பாடு மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊழல் முறைகேடுகளாக மாற்றப்பட்டுள்ளது. போதிய ஊழியர்களை நியமித்தும், தற்போதைய அமுலாக்கத்தை முழுமையாக ஆராய்ந்தும் அனைத்துப் பயனாளிகளுக்கும் முழுமையான வேலை - கூலி தாமதமின்றி வழங்க வேண்டும்.

தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலைநாட் களை 200 ஆகவும் உயர்த்திட ஒன்றிய அரசை வற்புறுத்திடவும், பேரூராட்சிப் பகுதிக்கு வேலைத்திட்டத்தை விரிவுபடுத்திட, நாடாளுமன்றத்தில் உரிய சட்டத்திருத்தத்தை செய்திட ஒன்றியஅரசை வற்புறுத்திட வலியுறுத்தி சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். 60 வயதைக் கடந்த அனைத்து முதியோருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். உதவித் தொகையை குறைந்த பட்சம் ரூ.2000 ஆக உயர்த்திட வேண்டும். வீடில்லாத ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தில் காங்கிரீட் வீடுகள் அமைத்துத்தர வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் வாயிலாக வீடுகள் அமைத்துத்தர வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் துயர் போக்கிட, பொதுவிநியோகத்தின் வாயிலாக கொரோனா கால திட்டமாக தற்போதுவழங்கப்படும் மளிகைத் தொகுப்புடன் காய்கறி,சமையல் எண்ணெய் சேர்த்து நிரந்தரமாக தொடர்ந்து வழங்கிட வேண்டும். தமிழக ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களை பணி வரன்முறை செய்து பணி நிரந்தரமாக்கவும், ஊதியம் மற்றும் சமூகப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுநிறைவேற்றி விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத்தலைவர் வி.பி.நாகை மாலி, கொறடா எம்.சின்னத்துரை, பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் அ.பழநிசாமி, மலைவிளை பாசி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். 

;