tamilnadu

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

திருவண்ணாமலையில் தொற்று 589ஆக உயர்வு

திருவண்ணாமலை, ஜுன் 12- திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று  22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நாவல்பாக்கம், காட்டாம்பூண்டி, கிழக்கு ஆரணி, திருவண்ணாமலை நகரம் உள்ளிட்ட பகுதி மக்களிடம் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் வெள்ளியன்று, 4 மாத ஆண் குழந்தை ஒன்று, 3 வயது ஆண் குழந்தைகள் 2 பேர் உட்பட 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைமந்து வீடு திரும்பியவர்கள் 346 பேர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமம் நோக்கி தொற்று

விழுப்புரம், ஜூன் 12- விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கொரோனா தொற்றால் 392 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  மீதமுள்ள 56 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை பரிசோதனையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்தது. இதில் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 22 வயதுடைய லேப் டெக்னிசியனும், 50 வயதுடைய அவரது தந்தையும், வீடூரை சேர்ந்த 39 வயதுடையவரும், செஞ்சியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியும், காடகம்பட்டு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய தபால்காரரும் (சென்னை சூளைமேட்டில் வேலை செய்பவர்), சேமங்கலம் காலனியை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், செஞ்சி அருகே காரியமங்கலத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  விக்கிரவாண்டி வட்டத்தில் தொரவி, மூங்கில்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கொரானா தொற்று பரவி வருகிறது. துவக்கத்தில் விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில்தான் தொற்று ஏற்பட்டது. ஆனால் தற்போது கிராமங்களுக்கும்  தொற்று பரவி வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து தற்போது சிவப்பு நிறத்திற்கு மாறியுள்ளது.

;