tamilnadu

கொரோனா தொற்று முடியும் வரை குத்தகை தொகை - வாடகையை ரத்து செய்க... முதல்வருக்கு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் கோரிக்கை

சென்னை:
 கொரோனா பெருந்தொற்று முடியும் வரைவக்போர்டு, தேவாலயம், மடம், அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போர்கள், சிறுகடை வியாபாரிகள், நிலங்களில் சாகுபடி செய்வோருக்கான வாடகையை ரத்து செய்திட வேண்டும்என்று முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி. நடராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவின் விபரம் வருமாறு:    தமிழகத்தில் கொரோனா பெரும்தொற்று நோயை கட்டுப்படுத்த தங்கள் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். இந்த நிலையில் தமிழக அரசின், அறநிலைய துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களின் அடிமனைகளில் வாடகைதாரர்களாக வாழும் லட்சக்கணக்கான மக்களும், சிறுகடை வைத்து வியாபாரம் செய்வோரும், விவசாய நிலங்களில் குத்தகை விவசாயிகளாக விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளன. 

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்டு கொரோனா கடுமையாக பாதிக்க துவங்கிய மார்ச் 2020 முதல், அது கட்டுப்பாட்டுக்குள் வரும் காலம் வரை அடிமனை வாடகை, சிறு கடை வைத்திருப்போருக்கான வாடகை மற்றும் விவசாய நிலங்களுக்கான குத்தகை தொகையை ரத்து செய்திட வேண்டும்.சென்னை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தமிழக அறநிலைய துறையின் மூலம் நில வாடகை தொகையை உடனடியாக செலுத்த கோரியும், அவ்வாறு செலுத்த தவறினால், அறநிலையத்துறை சட்டம் 78 மற்றும் 78/2 இன்படி வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு, அவர்கள் வாழும் அடிமனைகளை இலவசமாக வழங்க தமிழக அரசு 30.8.2019ல் ஏற்கனவே வெளியிட்டுள்ள அரசாணை 318 இந்த மாதத்தோடு முடிவடைய உள்ளதால் மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திட வேண்டும். 

அரசாணை 318ல் உட்பிரிவு 5ல் உள்ள பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கிட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு தடையாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, இந்த பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் உள்ள வஃக்போர்டு, தேவாலயம், மடம், அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போர்கள், சிறுகடை வியாபாரிகள், நிலங்களில் சாகுபடி செய்வோருக்கும் கொரானா பெரும் தொற்று துவங்கிய மார்ச் மாதம் முதல் நோய் தொற்று முடியும் வரை வாடகையை ரத்து செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கை மனு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணைய ருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

;