tamilnadu

அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம்

சென்னை, மே 8-ஊனமுற்றோர் உரிமைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 பிரிவு 47-(1) (எ)ன்படி “உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டம் இயற்றுபவர்கள் (சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்), நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு ஊனமுற்றோர் உரிமைகள் குறித்த வகுப்புகள் நிச்சயம் நடத்த வேண்டும்” என சட்ட விதி உள்ளது. ஆனால், இச்சட்டம் அமலுக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் அத்தகைய வகுப்புகள் தமிழக அரசு அதிகாரிகளுக்கு எந்த மட்டத்திலும் நடத்தப்படவில்லை. இதனால், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அரசு உயர் அதிகாரிகளே, மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகள் குறித்த போதிய தெளிவு இல்லாமல் செயல்படும் சூழல் தமிழகத்தில் உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் அனைத்துத் துறைகளிலும் உரிமைகளை பெறுவதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.எனவே, ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதிகளின்படி தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய மட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்கள்.

;