வண்டலூர் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம்
சென்னை,ஆக.5- சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு 30 ஆண்டுகளுக்கு பின்பு காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதை காண மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். வண்டலூர் உயிரி யல் பூங்காவில் ஏற்கனவே இருந்த காண்டாமிருகம் கடந்த 1989ஆம் ஆண்டு இறந்துவிட்டது. அதற்கு பிறகு 30 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் இல்லை. இந்நிலையில் தற்போது அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா வில் இருந்து 4 வயது ஆண் காண்டாமிருகம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு டிரக் மூலம் இந்த காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டது. அந்த ஆண் காண்டாமிரு கத்தை விலங்கியல் மருத்து வர்கள் தனியாக ஒரு இடத்தில் வைத்து கண்காணி த்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் இதற்குத் துணையாக மற்றொரு பெண் காண்டாமிருகம் வரவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பெண் காண்டாமிருகம் வந்த உடன், இரண்டு காண்டாமிரு கத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
பெரம்பூர், ஆக.5- பெரம்பூர் திம்மசாமி தர்கா தெருவில், பெரியார் நகரை சேர்ந்த ரியாஸ் என்பவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் திங்களன்று (ஆக.5) தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்த மெத்தைகள் தீப் பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும், மெத்தைகள் மற்றும் அதை தயாரிக்கும் பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கான போட்டி
சென்னை, ஆக.5 உற்சாகமும் உத்வேகமும் கொண்ட ஆசிரியரை உருவாக்கும் வகையில் எக்சிட் கல்வி கருத்தரங்கம் மற்றும் போட்டி சென்னையில் ஆக.10 அன்று நடைபெறவுள்ளது. கற்பித்தல் போட்டி முதன்முதலாக அரங்கில் நேரடியாக நடைபெறவுள்ளது.21 வது நூற்றாண்டில் தொழில்முறை நிபுணத்துவ ஆசிரியருக்கான நாடு முழுவதிலுமான தேடலின் இறுதிப்போட்டியாக இது இருக்கும். வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் சேத்துப்பட்டு ஹரிங்டன் சாலையில் உள்ள வெங்கட சுப்பாராவ் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடை பெறும். உத்வேகம் கொண்ட ஒரு ஆசிரியரை எது உருவாக்கு கிறது’ என்ற மிகக் கடினமான, முக்கியமான கேள்விக்கு பதில் காணும் வகையில் இந்த போட்டி அமையும். இதயத்தின் ஆழத்திலிருந்து கற்பித்தலுக்கு உத்வேகம் அளிக்கின்ற ஆசிரியர்களை அடைவதற்கான ஒரு உண்மையான செயல் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று எக்ஸீட் நிறுவனர் ஆஷிஷ் ராஜ்பால் கூறியுள்ளார். நாடு முழுவதிலுமிருந்து சுமார் 10,000 ஆசிரியர்கள் எக்சிட் சூப்பர்டீச்சர் தேடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.