tamilnadu

img

தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.... பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ஆனந்த் தகவல்...

சென்னை:
பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று தென்மண்டல பொது இன்சூன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்களின் சேவை, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு அளிக்கும் பங்களிப்பு, அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து பிரச்சாரம் செய்ய தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் புதிய யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி உள்ளது.‘வாய்ஸ் பார் பப்ளிக் செக்டார்’  என்று பெயரிடப்பட்டுள்ள யூ டியூப் சேனலின் ஒளிபரப்பை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்சங்க மூத்த தலைவர் அமானுல்லாகான் தொடங்கி வைத்தார்.சேனலின் இலச்சினையை பத்திரிகையாளர் ஜென்ராம் வெளியிட, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்விற்கு தென்மண்டல பொது இன்சூன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மூத்த தொழிற்சங்கத் தலைவர் க.கனகராஜ், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் மற்றும்பொது இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டு போராட்டக்குழு தலைவர் சவரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், “ஊழியர்கள் கடும் போராட்டத்தை மீறி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றிஉள்ளது. தனியார்மய கொள்கையை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளேமறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசு தனியார்மய மாக்கலில் தீவிரம் காட்டுகிறது.இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார்மயமானால், எளிய மக்களுக்கு காப்பீடு கிடைக்காது. ஒன்றிய அரசை ஆதரித்து வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் கட்சிகள் கூட இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைத்துள்ளனர். இதனால் அரசுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தேசத்தின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு1.50 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப்போவதாக கூறுவது ஏற்புடையதல்ல. ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளதுபோல், சொத்துக்கள் வாரிசுமாற்றம் செய்யும் போது அதற்கு வரி விதிக்கலாம். இவ்வாறு நிதி திரட்ட ஏராளமான வழிகள்உள்ளன. அதனை செய்ய மறுக்கின்றனர்.பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இந்த ஆட்சியில் வெற்றி பெற முடியாவிட்டால் கூட, அடுத்த ஆட்சியின் கொள்கையில் மாற்றம் நிகழ ஊழியர்களின் தொடர் போராட்டம் வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

;