tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

சென்னை,ஏப்.13-மக்களவை தேர்தல் தமிழகத்தில் 18 ஆம் தேதி நடைபெறுவதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறைவடைந்தன.அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளின் ஆண்டு இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற்று வந்தது. சனிக்கிழமையுடன் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறைக்காக மூடப்படுகின்றன. பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை(ஏப்.14) முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.எப்போதும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்க ளுக்கும் 50 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது.கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித் துறை எச்சரித்துள்ளது. அதை மீறி நடத்தும் பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

;