tamilnadu

img

பாதுகாப்புத்துறை தனியார்மயத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

சென்னை:
ஆவடி ஓசிஎஃப் அனைத்து சங்கங்களின் சார்பில் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து ஆவடி பாதுகாப்புத்துறைக்கான ஆயத்த ஆடைதொழிற்சாலை அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் போராட்டக்குழு சார்பில்ஆகஸ்ட் 4 ஆம் தேதி (செவ்வாய்) காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் அளிக்கப் பட்டது.கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சுயசார்பு பொருளாதார திட்டம் என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர், நாட்டின் 219 ஆண்டுகள் பழமையுள்ள 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி அதன் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள 41 தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்களும், அவர்களுடைய தொழிற்சங்கங் களும் தொடர்ந்து கோவிட்-19 ஊரடங்கிலும் பல்வேறுகட்ட போராட்டங்களை மத்திய அரசு தேசப் பாதுகாப்பிற்கு விரோதமான தனது முடிவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி நடத்தி வருகின்றனர்.  

மத்திய அரசு தன்னிச்சையான தனது முடிவைதிரும்பப் பெற வேண்டும் எனவும் கடந்த காலங்களில்பாதுகாப்பு அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்படாது என்று தொழிற்சங்கங்களுக்கு எழுத்துமூலமாக கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது தொழிலாளர் விரோதப் போக்காகும் எனவும் இந்திய ஜனாதிபதி, பாரதப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் மற்றும் பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகளுக்கும் இதுவரையில் 14 கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. எந்த கடிதத்திற்கும் பதிலளிக்காத மத்திய அரசு கடந்த மாதம்  28ஆம் தேதி தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.மேற்கண்ட பேச்சுவார்த்தையில் பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் அரசுத்துறையிலேயே நீடித்திருக்க வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனமாக இதனை மாற்றி தனியாரிடம் ஒப்படைப்பது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குரியதாக மாற்றிவிடும் என சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.ஆகவே மத்திய அரசு தனது முடிவை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் பாதுகாப்பு உற்பத்தி செயலாளர், தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முடிவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்றைய தேதி வரையிலும் மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான சாதகமான முடிவும் அறிவிக்கப்படாத  நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு வரும் அக்டோபர் 12 ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.  நாடெங்கிலும் உள்ள பாதுகாப்புத்துறைதொழிற்சாலைகளின் முன் சமூக இடைவெளியைக்கடைபிடித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது.

புறக்கணிப்பு போராட்டம்
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர்  ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார்.  இப்போராட்டத்தில் தொமுச,என்பிடிஇஎஃப் தலைவர்கள், ஏ. வேலுசுவாமி, முகமது மீரா, மற்றும் ஐடிஇஎஃப் தொழிற்சங்கத்தின் சார்பில் காளிதாஸ், வில்சன், ஆகியோரு ஐஎன்டியுசி சங்கத்தின் பொதுச்செயலாளர் மணி, ஓபிஎம்எஸ் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர்கள் சௌந்தர்ராஜன், சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மதிய உணவு புறக்கணிப்பு போராட்டமும் நடத்த உள்ளதாக மேற்கண்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

;